Published : 08 Feb 2016 08:13 PM
Last Updated : 08 Feb 2016 08:13 PM

இலங்கையை வீழ்த்தும் முனைப்பில் இந்திய அணி: செவ்வாயன்று முதல் டி20

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 3-0 என வென்ற நிலையில் தோனி தலைமையிலான இந்திய அணி செவ்வாயன்று இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் மோதுகிறது.

இம்மாத இறுதியில் ஆசிய கோப்பை டி 20 தொடரும், மார்ச் 8ம் தேதி உலககோப்பை டி 20 தொடரும் நடைபெற உள்ளதால் இலங்கைக்கு எதிரான இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஆஸி. தொடரை வென்று ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் உள்ளது. டி 20 உலககோப்பையும் இந்திய மண்ணிலேயே நடைபெறுவதால் அதற்கு சிறந்த முறையில் தயாராகுவதற்கு இந்த தொடர் இந்திய வீரர்களுக்கு உதவும்.

ஆஸி. மண்ணில் ரன்வேட்டை நடத்திய விராட் கோலிக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா, ஷிகர் தவண், தோனி, ரெய்னா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். ஆஸி. தொடரில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தாலும் யுவராஜ்சிங் அசத்தினார். இவர் மீது மீண்டும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவர்களுடன் அஜிங்க்ய ரஹானே, மனிஷ்பாண்டே ஆகியோரும் உள்ளனர்.

இலங்கை அணியின் அனுபவம் இல்லாத பந்துவீச்சு. பந்து வீச்சில் நெஹ்ராவின் அனுபவமும், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் துடிப்பான வேகமும் இலங்கை வீரர்களுக்கு நெருக்கடி தரக்கூடும். உள்ளூர் தொடர் என்பதால் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடும். எனவே இன்றைய ஆட்டத்தில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார்கள்.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பவன் நேகிக்கு விளையாட வாய்ப்பளிக்கப்படும் என்றே தெரிகிறது. மூத்த வீரர் ஹர்பஜன்சிங்குக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் தான். 6 முதன்மை பேட்ஸ்மேன்கள், 5 பந்து வீச்சாளர்கள் அடிப்படையில் இந்திய அணி களமிறங்கினால் ரஹானே அல்லது மனிஷ் பாண்டே ஆகியோரில் ஒருவருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும். மாறாக 7 பேட்ஸ்மேன்கள், 4 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் கண்டால் இருவருக்குமே வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

இலங்கை அணி நியூஸிலாந்து தொடரில் படுதோல்விகளை சந்தித்து இந்திய தொடரை எதிர்கொள்கிறது. டி 20 கேப்டன் மலிங்கா, டெஸ்ட் கேப்டன் மேத்யூஸ் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் விலகியுள்ளனர். தொடக்க வீரரான தில்ஷானும் காயம் அடைந்துள்ளார். அணியில் அவர் இடம் பெற்றிருந்தாலும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னணி பந்து வீச்சாளர்களான நுவன் குலசேகரா, ரங்கான ஹெராத் ஆகியோரும் இந்த தொடரில் விளையாட வில்லை. 36 வயதான மூத்த வேகப்பந்து வீச்சாளரான தில்ஹாரா பெர்னாண்டோ அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் கடைசியாக 2002ம் சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தார்.

உள்ளூர் போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டதால் மீண்டும் தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் தில்ஷானுக்கு பதிலாக அறிமுக வீரராக நிரோஷன் டிக்வெல்லா களமிறங்கக்கூடும். மண்டல அளவிலான டி 20 தொடரில் நிரோஷன் அதிக ரன்கள் குவித்துள்ளார்.

இவரை தவிர நியூஸி. தொடரில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான துஸ்மந்தா ஷமீரா, சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரே வான்டர்ஸே மற்றும் புதுமுக வீரர் பினுரா பெர்னாண்டோ ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுடன் இந்திய ரசிகர்களுக்கு பிரபலமில்லாத ஸிகுஜ் பிரசன்னா, திஷரா பெரேரா, மிலின்டா ஸ்ரீவர்தனா உள்ளிட்ட ஆல்ரவுண்டர்களும், தனுஷ்கா குணதிலகா, தஸன் ஷனகா, அஸிலா குணரத்னே, ஹஸன் ரஜிதா, ஷஜித்ரா செனநாயகே ஆகியோரும் இலங்கை அணியில் உள்ளனர்.

இரு அணிகளும் கடைசியாக 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற டி 20 உலககோப்பை இறுதி போட்டியில் மோதின.

இதில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பின்னர் தற்போது தான் இரு அணிகளும் சந்திக்கின்றன. இதுவரை ஆறு டி 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ள இரு அணிகளும் தலா மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது. இன்று 7வது முறையாக மோதுகின்றன.

அணி விவரம்:

இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், அஜிங்க்ய ரஹானே, மனிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஆஷிஸ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், பவன் நேகி.

இலங்கை: தினேஷ் சந்திமால் (கேப்டன்), ஸிகுஜ் பிரசன்னா, மிலின்டா ஸ்ரீவர்தனா, தனுஸ்கா குணதிலகா, திஷரா பெரேரா, தஸன் ஷனகா, அஸிலே குணரத்னே, ஷமரா கபுகேதரா, துஸ்மந்தா ஷமீரா, தில்ஹாரா பெர்னாண்டோ, ஹஸன் ரஜிதா, பினுரா பெர்னாண்டோ, ஷஜித்ரா செனநாயகே, ஜெப்ரே வான்டர்ஸே, நிரோஷன் திக்வெல்லா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x