Last Updated : 22 Nov, 2014 06:25 PM

 

Published : 22 Nov 2014 06:25 PM
Last Updated : 22 Nov 2014 06:25 PM

இரண்டு இருநாள் பயிற்சி போட்டிகள் போதுமானதல்ல: கங்குலி அதிருப்தி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்காக இந்திய டெஸ்ட் அணி புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், 2 இருநாள் பயிற்சி ஆட்டங்கள் போதுமானதல்ல என்று கங்குலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

டிச.4-ஆம் தேதி பிரிஸ்பன் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. ஆனால், அதற்கு முன்பாக 2 இருநாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. இது சிறந்த தயாரிப்பாக ஒருபோதும் அமையாது என்று சவுரவ் கங்குலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

"ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சிறப்பாக விளையாடுவதற்கு தொடருக்கு முன்பான தயாரிப்புகளே முக்கியமாகும், டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே தயாரிப்புகளில் ஈடுபட முடியாது. முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக 2 இருநாள் பயிற்சி ஆட்டங்கள் எனக்கு திருப்திகரமாக இல்லை.

இதன் அர்த்தம் என்னவெனில் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக 2 இன்னிங்ஸ்கள்தான் பயிற்சி எடுத்துக் கொள்ளப்போகிறோம் என்பதே. இது நல்ல தயாரிப்பிற்கான அறிகுறி அல்ல. விராட் கோலி போன்ற வீரர்களுக்கே 4 இன்னிங்ஸ்கள் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தயார் படுத்திக் கொள்ள தேவை என்றே நான் கருதுகிறேன்.

சில மாதங்களுக்கு முன்பாக நடந்த ஓவல் மைதான டெஸ்ட் போட்டியில், நாம் முதல் இன்னிங்ஸில் 42 ஓவர்களையே விளையாடினோம், 2-வது இன்னிங்ஸில் 25ஓவர்கள் பக்கம் ஆடினோம். 2004-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் பிரிஸ்பன் மைதானத்தில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 323 ரன்கள் எடுத்தது. நாம் பதிலுக்கு 400க்கும் மேல் ரன்கள் குவித்தோம். அடிலெய்டில் 550 ரன்களையும், சிட்னியில் 700 ரன்களையும் குவித்தோம்.

2002-ஆம் ஆண்டு ஹெடிங்லீயில் 600க்கும் மே ரன்கள் குவித்தோம். அந்த அணியில் சச்சின், திராவிட், லஷ்மண், அனில் கும்ளே இருந்தனர். இவர்கள் அதிகம் சத்தம் போடுபவர்கள் அல்ல. ஆனாலும் நாம் நன்றாக ஆட முடியும் என்ற தன்னம்பிக்கையை எப்போதும் ஊட்டி வளர்ப்பவர்கள்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “உலகக் கோப்பை வரை கேப்டன்சியில் மாறுதல் இருக்காது. அது அப்படித்தான் இருக்கவேண்டும். மகேந்திர சிங் தோனி தனது அயல்நாட்டு டெஸ்ட் போட்டி ரெக்கார்ட் குறித்து கவலைப்படுவது அவசியம். ஏனெனில் இதனுடன் அவர் வாழ்ந்தாக வேண்டும். ஆனால் அதற்காக சவுரவ் கங்குலி கேப்ட்ன்சியையும் தோனியினுடையதையும் ஒப்பிடக் கூடாது.

நாங்கள் இருவரும் இருவேறு காலகட்டங்களில் கேப்டன்சி பொறுப்பு வகித்தோம். முத்தரப்பு இறுதிப் போட்டி, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி, உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்று எனக்கும் பட்டியல்கள் இருந்தாலும், தோனியின் வெற்றி விகிதம் அதிகம்.

அணித் தேர்வு குறித்து தோனி அதிக விளக்கங்கள் கொடுக்க வேண்டியத் தேவையில்லை. பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் அனில் கும்ளேவை நான் அணியில் சேர்க்கவில்லை. அணிக்கூட்டம் முடிந்த பின்னர் அவர் என்னிடம் வந்து ‘நான் ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இந்தியா செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்றார். நான் எனது முடிவுக்கான காரணத்தை விளக்கினேன்.

லஷ்மணை தொடக்கத்தில் இறங்கவேண்டும் என்பேன், அவர் ‘இல்லை’ என்று மறுப்பார். மேத்யூ ஹெய்டனுக்கு டீப் மிட்விக்கெட், டீப் ஃபைன்லெக் பீல்ட் செட் செய்து ஜாகீர் கானை விட்டு பவுன்சர் போடச் சொல்வேன்.

ஜாகீர் கான் அவுட் ஸ்விங்கர்களை வீசுவார். நான் அவரிடம் நேராகச் செல்வேன், “என்னவாயிற்று? என்னை ஏன் முட்டாளாக தெரியவைக்கிறாய்? என்பேன். அவர் என்னை தீர்க்கமாக பார்த்து விட்டு மேலும் ஒரு ஃபுல் அவுட்ஸ்விங்கரை வீசுவார்.

பிறகு ஆஷிஷ் நெஹ்ரா, அவரை உட்கார வைப்பதற்காக அவரை திருப்தி செய்வது மிகக்கடினம். இரவு 11 மணிக்கு எனது விடுதி அறை மணி ஒலிக்கும், நான் நெஹ்ராவுக்கு விளக்குவேன். அதே போல் ஹர்பஜன் சிங்கிடம் நியூசிலாந்தில் ஒருமுறை நேரடியாக தகராறு செய்து பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்ட ஒரே கேப்டன் நானாகவே இருப்பேன்.

நான் அனில் கும்ளேயிடம் சென்று இந்த போட்டியில் ஹர்பஜன் ஆடட்டும், இந்த சீசனில் அவர் 50 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் என்றால் அவர் என்ன தெரியுமா கூறுவார், “அதனால் என்ன நான் 400 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறேன்” என்பார். பிறகு யுவராஜ் சிங், இவர் போட்டிக்கு முன்பு விடுதி அறையில்தான் இருக்கிறாரா என்பதை நான் எப்போதும் உறுதி செய்து கொள்வது அவசியம்.”

இவ்வாறு தனது கேப்டன்சி அனுபவங்களை ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய தலைமைப் பண்பு குறித்த விவாதத்தில் கங்குலி மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x