Published : 21 Jun 2017 10:18 AM
Last Updated : 21 Jun 2017 10:18 AM

இன்று பயிற்சி வேண்டாம், ஷாப்பிங் செல்லுங்கள் என்பதைத்தான் கும்ப்ளேவிடம் எதிர்பார்க்கிறார்களா?- கவாஸ்கர் காட்டம்

ஓராண்டு கால வெற்றிகரமான பயிற்சிக் காலத்துக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ராஜினாமா செய்ததையடுத்து சுனில் கவாஸ்கர் இன்றைய தினம் இந்திய கிரிக்கெட்டின் துக்ககரமான தினம் என்று கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் அவர் காட்டமாகக் கூறியதாவது:

ஆகவே உங்களுக்குத் தேவை மென்மையானவர்கள். ஓகே பாய்ஸ் இன்னிக்கு பயிற்சி வேண்டாம், லீவ் எடுத்துக் கொள்ளுங்கள், ஷாப்பிங் செல்லுங்கள் என்று கூறுபவர்தான் பயிற்சியாளராகத் தேவை என்கிறார்கள். கடந்த ஓராண்டாக தனக்கு இடப்பட்ட பணிகளை திறம்பட, கடினமாகச் செய்து நல்ல முடிவுகளை அளிப்பவர் உங்களுக்குத் தேவையில்லை அப்படித்தானே? எந்த வீரர் கும்ப்ளே மீது புகார் தெரிவித்தது, அப்படி யாராவது தெரிவித்திருந்தால் அந்த வீரர்தான் முதலில் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்.

நேர்மையாகக் கூற வேண்டுமெனில் இந்திய அணிக்காக ஒரு வீரராகவும் கடந்த ஓராண்டில் பயிற்சியாளராகவும் கும்ப்ளேயின் சாதனை அளப்பரியது. எனவே அவர் மீது களங்கம் கற்பிப்பது, அவரைப் பற்றி மோசமாகப் பேசுவது, அவர் ஹெட்மாஸ்டர் போல் நடந்து கொள்கிறார் கடினமாக வேலை வாங்குபவர் என்றெல்லாம் கூறுவதை என்னால் ஏற்க முடியாது.

இது ஒரு மோசமான முன்னுதாரணமாகும், நாளைக்கு வரும் புதிய பயிற்சியாளர் வீர்ர்கள் சொல்பேச்சுக் கேட்டு நடக்க வேண்டுமா? அப்படி இல்லையெனில் அனில் கும்ப்ளேவுக்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும் நேரும் என்று அவருக்கு எச்சரிக்கை விடுப்பது போல் அல்லவா இது இருக்கிறது. இது மிகவும் வருந்தத்தக்க, வருந்தத்தக்க செய்தியாகும்.

கிரிக்கெட் ஆலோசனை குழு (சச்சின், கங்குலி, லஷ்மண்) கும்ப்ளேவை தொடர அனுமதித்த பிறகு கும்ப்ளே தொடர்வார் என்றே கருதினேன். கோலிக்கும் இவருக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. .எப்படிப்பார்த்தாலும் இந்திய கிரிக்கெட்டுக்கு இது துக்ககரமான நாள். இந்தியா உருவாக்கிய கிரேட்டஸ்ட் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே. இவரால் தனது பணியை செய்ய முடியவில்லை எனில் இது வருந்தத்தக்க துக்ககரமான நிலையே.

எப்போதுமே ஒரு குழுவில் 2-3 பேர்களுக்கும் மேல் இருந்தால் அங்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படவே செய்யும். இத்தகைய பதட்டமான சூழலில் அது நடந்தே தீரும். அனில் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி அனைத்தையும் வென்றது. ஓராண்டில் கும்ப்ளே பெரிய தவறு செய்ய வாய்ப்பில்லை. இன்றைக்கு இத்தகைய வருத்தம் தரும் நாள் உருவானதற்குக் காரணம், குழுவுடன் ஒட்ட முடியாத ஏதோ ஒன்று அணியில் உள்ளது.

அனில் கும்ப்ளே இடத்தைப் பூர்த்தி செய்யப்போவது யார் என்பது தெரியவில்லை, மே.இ.தீவுகள் தொடர் சிறிய தொடர் என்பதால் சஞ்சய் பாங்கர் பார்த்துக் கொள்வார், இலங்கைக்கு எதிரான தொடரிலும் இதே நிலை நீடிக்கலாம். கிரிக்கெட் ஆலோசனை குழுதான் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார் சுனில் கவாஸ்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x