Last Updated : 19 Feb, 2017 10:27 AM

 

Published : 19 Feb 2017 10:27 AM
Last Updated : 19 Feb 2017 10:27 AM

இந்திய சவாலை எதிர்கொள்ள தயார்: ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் கருத்து

மும்பையில் இந்தியா ஏ அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் களத்தில் 213 நிமிடங்கள் செலவிட்டு 173 பந்துகளை சந்தித்து 104 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.

இந்நிலையில் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டது குறித்து ஷான் மார்ஷ் கூறியதாவது:

களத்தில் நீண்ட நேரம் செலவிடுவது என்பது விலை மதிப்புடையது. இதன் மூலம் கிடைத்துள்ள நம்பிக்கையை இந்திய அணிக்கு எதிரான தொடருக்கும் எடுத்துச் செல்வேன். களத்தில் நேரம் செலவிடுவது எப்போதுமே உதவியாக இருக்கும்.

இதை அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு எதிராக நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துள்ளோம். இந்தியாவில் ஏற்கெனவே பல்வேறு போட்டிகளில் மகிழ்ச்சி யுடன் விளையாடி உள்ளேன். நான் எப்போதும் உண்மையான சவால்களை தேடக்கூடியவன். திறமை வாய்ந்த அணிக்கு எதிராக தற்போது நடைபெற உள்ள டெஸ்ட் தொடர் எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்குமே உண்மையான சவால்தான். இந்த தொடர் எல்லோருக்கும் சிறந்ததாக அமையும்.

இந்திய ஆடுகளங்களில் ஐபிஎல் தொடரில் அதிகளவிலான ஆட்டங் களில் விளையாடி உள்ளேன். இலங்கை தொடரிலும் சிறந்த ஆட்டத்தை விளையாடினேன். இதனால் இந்திய ஆடுகளங்களில் விளையாடுவதை வசதியாகவே உணர்கிறேன். இது சவாலாக இருக்கும் என்பது தெரியும்.

தற்போதைய சூழ்நிலையில் இந்தியா சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. அணியில் உலக தரம் வாய்ந்த சில பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இது உண்மையிலேயே எங்களது பேட்ஸ்மேன்களுக்கு சவாலான விஷயம். இதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்.

இந்தியாவில் இதுவரை நான் டெஸ்ட் போட்டியில் விளையாடியது இல்லை. இலங்கையில் சுழலுக்கு சாதகமான ஆடுகளம் இருந்தது போன்றே இங்கும் இருக்கும் என கருதுகிறேன்.

எந்த மாதியான ஆடுகளம் அமைக்கப்படும் என்பதை நாங்கள் அறிவோம். எல்லாவற்றுக்கும் தயாராக உள்ள நாங்கள், போட்டிக் கான வலுவான திட்டங்களை அமைத்து களத்தில் செயல்படுத்து வோம். இவ்வாறு ஷான் மார்ஷ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x