Published : 22 Nov 2014 03:15 PM
Last Updated : 22 Nov 2014 03:15 PM

ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சு பிரச்சினைகளைக் கொடுக்கும்: ஜோ டேவிஸ்

இந்த முறை இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணி ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு பல பிரச்சைனைகளைக் கொடுக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜோ டேவிஸ் கூறியுள்ளார்.

"வருண் ஆரோன் அபாயகரமான வீச்சாளர், இவர் மணிக்கு 150 கிமீ வேகம் வீசக்கூடியவர். இதனை அவர் சீரான முறையில் செய்து வருகிறார். அவரை மட்டும் சரியாகப் பயன்படுத்தினால் நிச்சயம் பலன் இருக்கும்.

இந்திய அணியில் இந்த முறை வரும் வேகப்பந்து வீச்சாளர்களை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. நிறைய வேகம் உள்ளது அங்கே. ஹேடினோ, கிளார்க்கோ விளையாட முடியாமல் போனால் இந்திய வேகப்பந்து வீச்சு ஆஸ்திரேலிய பேட்டிங் பலவீனங்களை வெளிப்படுத்தும்.

பேட்டிங்கில் ஷிகர் தவன் பற்றி கூற வேண்டுமென்றால், வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது அவர் பேட்டை பிடித்துக் கொள்ளும் விதமும், அவரது பேக் லிஃப்டும், உத்தியும் பழைமையாகவே உள்ளது எனவே அதிகம் எழும்பும் பந்துகளை அவர் எதிர்கொள்ள திணறி வருகிறார்.

மாறாக முரளி விஜய் தனது விக்கெட்டை அவ்வளவு எளிதாக கைப்பற்ற அனுமதிப்பதில்லை. இங்கிலாந்தில் விஜய்தான் அதிக சராசரி வைத்திருந்தார். இவர் நீண்ட நேரம் ஆட விருப்பம் கொண்டவர்.

புஜாரா, பேட்டிங்கின் பழைய பள்ளியைச் சேர்ந்தவர், அவருக்கு பேட்டிங், பேட்டிங், பேட்டிங் என்பதே தாரக மந்திரம். புஜாரா, கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஆஸ்திரேலிய பிட்ச்களில் சோபிக்கத் தகுந்த உத்திகள் உள்ளன. எனவே ஆஸி. அணி இவர்கள் மீதே சிறப்பு கவனம் செலுத்தும் என்று கூறலாம்.

அஜிங்கிய ரஹானேயின் அகலமான ஸ்டான்ஸ் வேகப்பந்தை எதிர்கொள்ள எளிதாக அமைந்துள்ளது. அவர் போராளி, கடுமையாக பயிற்சி செய்கிறார். ஆனாலும் ஆஸ்திரேலிய வேகமும், பந்தின் எழுச்சியும் அவருக்கு சிரமத்தைக் கொடுக்கும் என்று கருதுகிறேன்.

அதே போல் இளம் லெக்ஸ்பின்னர் கரண் சர்மாவுக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்.” என்றார் ஜோ டேவிஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x