Published : 26 Jun 2017 06:30 PM
Last Updated : 26 Jun 2017 06:30 PM

அறிமுக சர்வதேச டி20-யில் அதிக ரன்களைக் குவித்த வீரர் யார்? - சில புள்ளி விவரங்கள்

நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து இடது கை வீரர் டேவிட் மலான் 44 பந்துகளில் 78 ரன்களை விளாசி புதிய இங்கிலாந்து டி20 சாதனையை நிகழ்த்தினார்.

இவர் பாண்டிங்கை முறியடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் ஆட்டமிழந்தார்.

அறிமுக டி20 சர்வதேச போட்டியில் அதிக ரன்களை விளாசிய வீரர்களில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் முதலிடம் வகிக்கிறார், இவர் 2005-ம் ஆண்டு ஆக்லாந்தில் நியூஸிலாந்துக்கு எதிராக 55 பந்துகளில் 8 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 98 ரன்களைக் குவித்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இந்த டி20- போட்டியில் ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதே போட்டியில் நியூசிலாந்து அணியில் டி20 அறிமுக போட்டியில் ஆடிய ஸ்காட் ஸ்டைரிஸ் 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 66 ரன்கள் விளாசி பிரட் லீ பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

பாண்டிங்குக்கு அடுத்த படியாக டேவிட் வார்னர் 2009-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மெல்போர்னில் 43 பந்துகளில் 7 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 89 ரன்களை விளாசிய இன்னிங்ஸ் 2-வது அறிமுக டி20 சிறந்த இன்னிங்ஸாக உள்ளது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

3-வது இடத்தில் உள்ள அறிமுக வீரரைக் குறிப்பிட்டால் ஆச்சரியம் மேலிடும். அவர் கனடாவுக்காக ஆடிய இந்திய வம்சாவளி வீரர் ஹிரால் படேல். இவர் 2010-ம் ஆண்டில் அயர்லாந்துக்கு எதிராக தனது அறிமுக டி20 போட்டியில் 61 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அயர்லாந்து இந்தப் போட்டியில் 4 ரன்களில் கனடாவிடம் தோல்வி தழுவியது.

4-ம் இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ரைலி ரூசோவ் 2014-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் தன் அறிமுக டி20 போட்டியில் 50 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 78 ரன்கள் எடுத்தார்.

தற்போது இங்கிலாந்தின் டேவிட் மலான் அதே 78 ரன்களுடன் உள்ளார்.

அதே போல் 6-ம் இடத்தில் உள்ள வங்கதேச வீரர் ஜுனைத் சித்திக் பாகிஸ்தானுக்கு எதிராக 2007-ல் கேப்டவுனில் 49 பந்துகளில் 71 ரன்களை விளாசினார். இந்தப் பட்டியலில் அஜிங்கிய ரஹானே உள்ளார் இவர் 2011-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான தனது அறிமுக டி20 போட்டியில் 39 பந்துகளில் 61 ரன்களை விளாசினார்.

ரிக்கிபாண்டிங்கின் அறிமுக டி20 சாதனையான 98 ரன்களை முறியடிக்கப் போகும் அந்த வருங்கால வீரர் யார், எந்த நாட்டிலிருந்து அந்த வீரர் வருவார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x