Published : 01 Sep 2014 11:29 AM
Last Updated : 01 Sep 2014 11:29 AM

அமெரிக்க ஓபன்: 4-வது சுற்றில் ஜோகோவிச், முர்ரே

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், ஆன்டி முர்ரே உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் சாம் கியூரியை வீழ்த்தினார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தொடர்ந்து 22-வது முறையாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியிருக்கும் ஜோகோவிச், அடுத்ததாக ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைபரை சந்திக்கிறார். கிரைபர் தனது 3-வது சுற்றில் விடாப்பிடியாக போராடி 7-6 (4), 4-6, 7-6 (2), 7-6 (4) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரைத் தோற்கடித்தார்.

பிரிட்டனின் முர்ரே 6-1, 7-5, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் ஆன்ட்ரே குஸ்நெட்சோவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை எதிர்த்து விளையாடவிருந்த ஸ்லோ வேனியாவின் பிளேஸ் காவ்சிச் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து வாவ்ரிங்கா 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெட்ரா அதிர்ச்சி தோல்வி

நடப்பு விம்பிள்டன் சாம்பியனான செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா தனது முதல் சுற்றில் 4-6, 4-6 என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் 145-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் அலெக்சாண்ட்ரா குரூனிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். பெட்ராவோடு சேர்த்து சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள வீராங்கனைகளில் 5 பேர் அமெரிக்க ஓபனில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

குரூனிச் அடுத்த சுற்றில் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அசரென்காவை சந்திக்கவுள்ளார். அசரென்கா தனது 3-வது சுற்றில் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவை தோற்கடித்தார்.

மற்றொரு 3-வது சுற்றில் கனடாவின் யூஜீனி புச்சார்டு கடும் போராட்டத்துக்குப் பிறகு 6-2, 6-7 (2), 6-4 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் ஸ்டிரைக்கோவாவை தோற்கடித்தார்.

சானியா வெற்றி

இந்திய வீராங்கனை சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கும், கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கும் முன்னேறியுள்ளார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6-1, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் கரோலின் கிரேஸியா-ருமேனியாவின் மோனிகா நிகோலஸ் ஜோடியை வீழ்த்தியது. அடுத்த சுற்றில் செர்பியாவின் ஜெலீனா-செக்.குடியரசின் கிளாரா ஜோடியை சந்திக்கிறது சானியா ஜோடி.

கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா-பிரேசிலின் புருனோ சோயர்ஸ் ஜோடி 6-2, 7-6 (8) என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் கேஸி டெல்லாக்-பிரிட்டனின் ஜேமி முர்ரே ஜோடியைத் தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x