Published : 24 Sep 2016 10:34 AM
Last Updated : 24 Sep 2016 10:34 AM

அடிக்கடி குடிநீர் இடைவேளை எடுத்துக் கொண்டு நியூஸி. வீரர்கள் தந்திரம் செய்கின்றனர்: இந்திய அணி அதிருப்தி!

கான்பூர் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து பேட்ஸ்மென்கள் ஆட்டத்தினிடையே அடிக்கடி குடிநீர் இடைவேளை எடுத்துக் கொண்டு இந்திய பவுலர்களின் உத்வேகத்தை கெடுக்கின்றனர் என்று இந்திய அணி நிர்வாகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்திய பவுலர்கள் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் தருணங்களின் போதெல்லாம் கேன் வில்லியம்சன், டாம் லாதம் இந்த தந்திர உத்தியைக் கடைபிடித்ததால் பவுலர்களின் உத்வேகம், ரிதம் போய் விடுகிறது என்று இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் பாங்கர் இதுகுறித்து கூறும்போது, “இப்போதுதான் பந்துகள் சற்று திரும்புகின்றன. பவுலர்களும் நல்ல ஒத்திசைவுடன் வீசத் தொடங்கினர். ஒன்று மழை வந்து வெறுப்பேற்றியது, அதை விட நியூஸிலாந்து வீரர்கள் ஆட்டத்தின் இடையிடையே குடிநீர் இடைவேளை எடுத்துக் கொண்டது பவுலர்களின் உத்வேகத்தை கெடுக்கிறது. இப்படியொரு தந்திரம் இருப்பதை நாம் அறிய வேண்டும் என்பதோடு, அதனை அதற்குரிய விதத்தில் கையாள்வது அவசியம்.

இது வேண்டுமென்றே அவர்கள் செய்யும் தந்திரமாக இருக்கக் கூடும், அதனை நாங்கள் ஏற்கெனவே பேசியுள்ளோம். ஆட்டத்தின் தொடர்ச்சி பாதிப்படையக் கூடாது என்பதை நடுவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இதில் பெரிய அளவில் யோசிக்க எதுவுமில்லை என்றாலும், ஆட்டத்தில் சில வீரர்கள் இதனை ஒரு உத்தியாகப் பயன்படுத்தி எதிரணியினருக்கு எதிராக கூடுதல் சாதகம் பெறுகின்றனர். கிரிக்கெட் ஆட்ட உணர்வு பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த உத்திகளை கள நடுவர்களும், ஆட்ட நடுவர்களும் அறிந்திருப்பார்கள். எனவே இதனை தடுக்க வரும் நாட்களில் அவர்கள் சில திட்டங்களை வைத்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்” என்றார்.

கான்பூரில் அதிகமாக உஷ்ணம் இருந்து வருகிறது, நியூஸிலாந்து ஸ்பின்னர்களே கூட கடுமையாக களைப்படைந்தனர். ஆகவே கேன் வில்லியம்சன், டாம் லாதம் இதனை ஒரு உத்தியாக, தந்திரமாக பயன்படுத்த வாய்ப்பில்லை என்றாலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா விறுவிறுவென தனது ஓவர்களை வீசினார், 2 நிமிடங்களுக்குள் ஒரு ஓவர் என்று அவர் வீசியதால் கூடுதல் ஓவர்கள் கிடைப்பதோடு, பேட்ஸ்மென்கள் அடுத்த பந்துக்கு விரைவில் தயாராக நெருக்கப்படுகிறார்கள்.

இதனை தெரிந்து வைத்திருந்த நியூஸிலாந்தின் கிரெய்க் மெக்மில்லன் கூறும்போது, “உலக கிரிக்கெட்டிலேயே ஜடேஜாவின் ரன் அப்தான் மிகவும் குறைவானது. அதனால் அவர் விரைவில் தன் ஓவர்களை முடித்து விடுகிறார், ஆனால் பேட்ஸ்மென்கள் அவசரம் காட்ட வேண்டியதில்லை, தாங்கள் ஒரு பந்தை எதிர்கொள்ள முழுதும் தயாராகிவிட்டோம் என்று உறுதி செய்து கொண்ட பிறகே ஆட முற்பட வேண்டும். ஓவர்களை விரைவாக வீசும் ஜடேஜா போன்ற பவுலர்கள் சில வேளைகளில் பேட்ஸ்மென்களை அவசரப்படுத்துவதன் மூலமாக அவர்கள் பார்க்க முடியாத தருணத்திலும் பந்துகளை வீசி விடுவார்கள், எனவே பேட்ஸ்மென்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்கிறார்.

இந்த இரண்டு கருத்துகளில் இரண்டிலுமே உண்மை இருப்பதாகவே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x