Published : 31 Aug 2016 03:02 PM
Last Updated : 31 Aug 2016 03:02 PM

அக்ரமைக் கடந்த டேல் ஸ்டெய்ன் சாதனையுடன் டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் டேல் ஸ்டெய்ன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 2-வது இன்னிங்சில் 195 ரன்களுக்குச் சுருண்டது நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்றது.

இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்று கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு சற்றே கடினமாக இருந்த நிலையில் கன மழை, மைதான நிலைமை காரணமாக கைவிடப்பட்டது.

ரிச்சர்ட் ஹேட்லியை மீண்டும் பார்ப்பது போன்ற ஒரு அபாரமான ஸ்விங் பவுலிங்கை டேல் ஸ்டெய்ன் நேற்று வெளிப்படுத்தி டிசம்பர் 2014-க்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.நியூஸிலாந்தின் மிட்செல் சாண்ட்னரை ஸ்டெய்ன் வீழ்த்திய போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 415 விக்கெட்டுகளை கைப்பற்றி வாசிம் அக்ரமின் 414 விக்கெட்டுகளைக் கடந்தார், இன்னும் 7 விக்கெட்டுகளை ஸ்டெய்ன் கைப்பற்றினால் ஷான் போலக் (421) சாதனையைக் கடந்து விடுவார்.

முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளெசிஸின் சதம் (112), டுமினி (88), குவிண்டன் டி காக் (82) ஆகியோர் பங்களிப்பு மூலம் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 481 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி ரபாதா, டேல் ஸ்டெய்ன் ஆகியோரது வேகம் மற்றும் ஸ்விங்கிற்கு 214 ரன்களில் சுருண்டது. கேப்டன் வில்லியம்சன் மட்டுமே 77 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். ரபாதா, ஸ்டெய்ன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

ஃபாலோ ஆன் கொடுக்காத தென் ஆப்பிரிக்கா தனது 2-வது இன்னிங்ஸில் சவுத்தியின் அபாரமான பந்து வீச்சினால் 132 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது, தொடக்க வீரராக இந்த டெஸ்ட் போட்டியில் இறங்க தானே கேட்டு வாங்கிய குவிண்டன் டி காக் 2-வது இன்னிங்சில் ஒரு கில்கிறிஸ்ட் பாணி அரைசதத்தை அதிரடியாக எடுத்தார்.

இந்நிலையில் நியூஸிலாந்துக்கு வெற்றி இலக்கு 400 ரன்கள். ஆனால் டேல் ஸ்டெய்ன், பிலாண்டர், ரபாதா ஆகியோரின் நெருக்குதலை சமாளிக்க முடியாமல் நியூஸிலாந்து 195 ரன்களுக்கு நேற்று 4-ம் நாளிலேயே மடிந்து தோல்வி தழுவியது. தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றது.

நியூஸிலாந்து இன்னிங்ஸை தொடங்கிய போது உணவு இடைவேளையின் போதே 18/4 என்று சரிந்தது. முதல் விக்கெட்டாக டாம் லாதம், டேல் ஸ்டெய்ன் வீசிய பந்தின் கூடுதல் பவுன்ஸ் காரணமாக பிளேய்ட் ஆன் ஆனார். 5 பந்துகள் கழித்து மார்டின் கப்திலுக்கு விளையாட முடியாத ஒரு அவுட் ஸ்விங்கரை வீசினார் ஸ்டெய்ன் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஆம்லாவிடம் ஸ்லிப்பில் சரண்.

பிட்சில் பவுன்ஸ் ஏற்றத்தாழ்வாக இருந்தது, பிலாண்டரின் பந்து ஒன்று குட் லெந்த்தில் பிட்ச் ஆகி கேன் வில்லியம்சன் கிளவ்வைப் பதம் பார்த்தது, ஆனால் அதே லெந்தில் டேல் ஸ்டெய்ன் வீச பந்து தாழ்வாக ராஸ் டெய்லரின் பேடைத் தாக்க எல்.பி. ஆகி வெளியேறினார். கேன் வில்லியம்ன்சன் பிலாண்டர் பந்தை அடிக்க முயல எட்ஜ் ஆகி குவிண்டன் டி காக்கின் அபாரமான டைவிங் கேட்சில் முடிந்தது. நியூஸிலாந்து 7/4 என்று மோசமான தோல்வியை எதிர்நோக்கியது.

ஆனால் நிகோல்ஸ் மட்டுமே நிதானித்து ஆடி 76 ரன்கள் எடுத்தார், இது அவரது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராகும். வாட்லிங் 32 ரன்கள் எடுத்து ஸ்பின்னர் பியட் பந்தில் எல்.பி.ஆனார்.

ரபாதா, டிம் சவுதிக்கு அருமையான யார்க்கரை வீசி பவுல்டு செய்ததோடு, நீல் வாக்னரை தனது வேகத்தினால் எல்.பி.யில் வீழ்த்தினார். சாண்ட்னர் 16 ரன்களில் ஸ்டெய்னிடம் பவுல்டு ஆனார். பிரேஸ்வெல் பிலாண்டரிடம் எல்.பி. ஆனார். 59-வது ஓவரில் நியூஸிலாந்து 195 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி அடைந்து தொடரை இழந்தது. ஆட்ட நாயகனாக டி காக் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x