Last Updated : 17 Jul, 2018 10:37 AM

 

Published : 17 Jul 2018 10:37 AM
Last Updated : 17 Jul 2018 10:37 AM

சிறிய நாடு என்றாலும் பெரிய  கனவு காணலாம்:  குரோஷியா பயிற்சியாளர் ஸ்லாட்கோ டலிக் உருக்கம்

88 வருட  ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் வெறும் 45 லட்சம் மக்கள் தொகையை கொண்ட குரோஷியா நாடு இறுதிப் போட்டிக்கு முன்னேறி அனைவரையும் வியக்கவைத்தது. ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த சிறிய நாடு ஒன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதன்முறையாக நுழைந்து சாதனை படைத்த போதிலும் அந்த அணியால் கோப்பையை வென்று வரலாற்றில் முத்திரை பதிக்க முடியாமல் போனது. இறுதிப் போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் வீழ்ந்ததால் முதன்முறையாக மகுடம் சூடும் வாய்ப்பை இழந்தது குரோஷியா.

அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டலிக் கூறும்போது, “நாங்கள் பயணம் செய்யும் பேருந்தில் இடம் பெற்ற வாசகம், ‘பெரிய கனவை கொண்டுள்ள சிறிய நாடு நாங்கள்’ என்பதுதான். இது எல்லோருக்கும் சிறந்த செய்திதான். நீங்கள் கடினமாக உழைத்தால், உங்களால் சிறந்த வீரர்களை உருவாக்க முடியும், அதன் மூலம் சிறந்த முடிவுகளை பெற முடியும். இது சாத்தியமாகும் என்று நீங்கள் நம்ப வேண்டும். சிலநேரங்களில் இந்த எண்ணங்கள் கீழே சரியலாம். ஆனால் கனவு மற்றும் லட்சியங்களைக் கொண்டு அதனை பின்தொடர வேண்டும். அதன் பின்னர் ஒருவேளை கால்பந்திலோ அல்லது பொது வாழ்விலோ கனவுகள் மெய்ப்படும்.

ஒருபோதும் நீங்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது, அதேபோன்று ஒருபோதும் நம்பிக்கை கொள்வதையும் நிறுத்திவிடக் கூடாது. இறுதிப் போட்டியில் 4-1 என நாங்கள் பின்தங்கியிருந்த போதும், நான் நம்பிக்கை கொள்வதை நிறுத்தவில்லை. இதுதான் வாழ்க்கை. ஒட்டுமொத்தமாக குரோஷியா, பெரிய தொடரில் சிறப்பாக விளையாடியதாகவே கருதுகிறேன். அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது அணி வீரர்களையும், நாட்டையும் நினைத்து பெருமை அடைகிறேன்” என்றார்.

அர்ஜென்டினா ரெப்ரீ நெஸ்டர் பிட்டானா, பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிக் வழங்கியது விவாதப் பொருளாகி உள்ளது குறித்து ஸ்லாட்கோ டலிக் கூறுகையில், பொதுவாக இதுபோன்ற விஷயங்கள் குறித்து நான் பேசுவதில்லை. இந்த விஷயத்தில் எனது கருத்து என்னவென்றால், உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பெனால்டி கிக் கொடுக்கக்கூடாது என்பதுதான்.

உலகக் கோப்பையில் விளையாடிய சிறந்த விளையாட்டுக்காக எனது அணி வீரர்களை வாழ்த்தியாக வேண்டும். இறுதிப் போட்டியில் நாங்கள் ஆட்டத்தை கட்டுப்படுத்தினோம், ஆனால் பிரான்ஸைப் போன்ற வலுவான அணிக்கு எதிராக நீங்கள் தவறுகளைச் செய்ய முடியாது. நாங்கள் சற்று சோகமாக இருக்கிறோம், ஆனால் நாங்கள் செய்ததைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x