Published : 16 Jul 2018 06:47 PM
Last Updated : 16 Jul 2018 06:47 PM

தினேஷ் கார்த்திக்குக்கு மீண்டும் அதிர்ஷ்டம் அடிக்குமா? அல்லது ஓரம் கட்டப்படுவாரா?

ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில், விக்கெட் கீப்பர் விர்திமான் சாஹா விளையாடமாட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் டெஸ்ட் போட்டித் தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐபிஎல் போட்டியின் போது, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த விர்திமான் சாஹாவுக்கு கை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்தக் காயம் குணமடைய 5 வாரங்கள் ஆகும் என்பதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றார். ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் அணியை சிறப்பாக வழிநடத்தினார். இதனால், இங்கிலாந்து தொடரிலும் சேர்க்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கார்த்திக் ஓரம் கட்டப்பட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் தினேஷ் கார்த்திக் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மோசமான ஃபார்மில் இருக்கும் மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், கார்த்திக் அமரவைக்கப்பட்டார். தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் தினேஷ் கார்த்திக் விளையாடவில்லை.

இந்நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தொடங்கும் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், காயத்தில் இருந்து விர்திமான் சாஹா முழுமையாக குணமடையாததால், தினேஷ் கார்த்திக் தேர்வு செய்ய அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதற்கிடையே வரும் 25-ம் தேதி எசெக்ஸ் அணிக்கு எதிரான 4 நாட்கள் பயிற்சிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விர்திமான் சாஹா விளையாடி தனது உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் மட்டுமே அவர் அணிக்குத் தேர்வு செய்யப்படுவார். ஆனால், இதுவரை சாஹாவின் உடற்தகுதி குறித்து பிசிசிஐ நிர்வாகம் எந்தவிதமான அறிக்கையும் வெளியிடவில்லை.

ஒருவேளை சாஹா உடல்நலம் தேறினாலும் கூட முதல் 2 அல்லது 3 டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் விளையாடாமல், ரிசர்வ் விக்கெட் கீப்பராகவே வைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை சாஹாவின் உடல்நிலை தகுதியில்லாமல் இருந்தால், ரிசர்வ் விக்கெட் கீப்பராக பர்தீப் படேல் அழைக்கப்படலாம்.

ஆதலால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட உள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

ஆனால், இந்திய அணியில் இருக்கும் சில அரசியலால், டி20, ஒருநாள் தொடரில் பெஞ்சில் அமரவைக்கப்பட்டது போன்று டெஸ்ட் போட்டித்தொ டரிலும் அமரவைக்கப்படுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x