Published : 11 Jul 2018 07:32 PM
Last Updated : 11 Jul 2018 07:32 PM

கிரிக்கெட் திறமையைக் காட்டி சச்சினையே வியக்க வைத்த ரோஜர் பெடரர் ருசிகரம்

கிரிக்கெட்டில் 360 டிகிரியில் பலரையும் வியக்கவைத்த ஏ.பி.டிவில்லியர்ஸை யாரோ ஒருவர் ரோஜர் பெடரருடன் ஒப்பிட்டுப் பேசியது நினைவிருக்கிறது.

சச்சின் டெண்டுல்கர், சுவிஸ் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரின் மிகப்பெரிய விசிறி. டென்னிஸில் ரோஜர் பெடரர் வெளிப்படுத்தாத திறமைகள் எதுவும் இல்லை என்ற அளவுக்கு தொடருக்குத் தொடர் இன்னமும் கூட பல புதிய ஷாட்கள், உத்திகள், சூட்சமான நகர்வுகள், நுட்பமான மட்டைத் திருப்புகள், எதிரணி வீரர் காலை மாற்றிவைக்கத் தூண்டும் நுணுக்கமான கடைசி நேர ஷாட் மாற்றங்கள் என்று பெடரர் ஆட்டம் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். குறிப்பாக எதிராளி லாப் செய்யும் பந்தை திரும்பி ஓடி முதுகைக் காட்டிய படி கால்களுக்கு இடையில் மட்டையைக் கொண்டு சென்று துல்லியமாக அடிக்கும் ஷாட் பிரமிக்க வைப்பதாகும், அதே போல் மட்டையை ஓங்கி விட்டு நைஸாக வலைக்கு அருகில் விழுமாறு செய்யும் லாப் வகையிலும் பெடரர் காணக்கிடைக்காத மகிழ்ச்சிகளை நமக்கு வழங்குபவர்.

இந்த நுணுக்கங்களை நம்மை விடவும் சிறப்பாக அவதானிக்கும் திறமையுடைய இன்னொரு மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.

இந்நிலையில் விம்பிள்டனில் அட்ரியன் மனாரினோவை பெடரர் வீழ்த்தும்போது கிரிக்கெட்டுக்கேயுரிய ‘ஃபார்வர்ட் டிபன்ஸ்’ முறையை பயிற்சி செய்தது சச்சின் கண்களில் பட்டு விட்டது. மனாரினோ ஒரு நீள ஷாட்டை பெடரருக்கு அடிக்க பெடரர் தன் கிரிக்கெட் திறமைகளை வெளிப்படுத்தினார், ஒரு பார்வர்ட் டிபன்ஸ் ஷாட்டை ஆடினார் பெடரர். இது சமூக வலைத்தளவாசிகள் கவனத்தை ஈர்த்தது.

சச்சின் டெண்டுல்கர் கவனத்தையும் ஈர்த்த இந்த பெடரரின் திடீர் கிரிக்கெட் திறமை சச்சின் ட்வீட்டைத் தூண்டியுள்ளது:

“எப்போதும் போல் மிகப்பெரிய கை-கண் ஒருங்கிணைப்பு ரோஜர், நாம் கிரிக்கெட், டென்னிஸ் குறித்து சில குறிப்புகளை நீங்கள் 9வது விம்பிள்டன் பட்டம் வென்ற பிறகு பரிமாறிக் கொள்வோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

விம்பிள்டன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பெடரர் பார்வர்டு டிபன்ஸ் படத்தை வெளியிட்டு “Ratings for @rogerfederer's forward defence, @ICC? என்று கலாய்ப்பாக ஒரு பதிவிட்டுள்ளது.

ஐசிசியும் இதற்கு “ஓகே” என்று பதில் பதிவிட்டுள்ளது. பிறகு சச்சின், பெடரர் ஆகியோரைக் குறிக்குமாறு ‘ஒரு கிரேட் இன்னொரு கிரேட்டை அங்கீகரிக்கும்போது’ என்றும் ஐசிசி ட்வீட் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x