Last Updated : 01 Jul, 2018 09:50 AM

 

Published : 01 Jul 2018 09:50 AM
Last Updated : 01 Jul 2018 09:50 AM

நாக் அவுட் சுற்றில் இன்று மோதல்: ஸ்பெயின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ளுமா ரஷ்யா?

மாஸ்கோ

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு  நடைபெறும் நாக் அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் - ரஷ்யா அணிகள் மோதுகின்றன.

ஸ்பெயின் அணி கடந்த 2016-ம் ஆண்டு யூரோ உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியடையாமல் வலம் வருகிறது. உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் முதல் ஆட்டத்தை சந்திப்பதற்கு முன்ன தாக பயிற்சியாளர் ஜூலியன் லோபெட்டிகுய் அதிரடியாக நீக்கப் பட்டார்.

எனினும் இடைக்கால பயிற்சி யாளர் பெர்னாண்டோ ஹைரோ உதவியுடன் லீக் சுற்றை வெற்றி கரமாக முடித்துள்ளது ஸ்பெயின் அணி. போர்ச்சுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தை 3-3 என்ற கோல் கணக்கில் டிரா செய்த ஸ்பெயின் அணி, அதன் பின்னர் ஈரான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கடைசி லீக் ஆட்டத்தில் மொராக்கோ அணிக்கு எதிராக 2-2 என டிரா செய்த ஸ்பெயின் அணி பி பிரிவில் 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்குள் கால்பதித்துள்ளது.

லீக் சுற்றில் டிகோ கோஸ்டா, நாச்சோ, இஸ்கோ, இகோ அஸ்பஸ் ஆகியோர் கோல் அடித்திருந்தனர். இதில் டிகோ கோஸ்டா 3 கோல்கள் அடித்து சிறந்த பங்களிப்பு செய்திருந்தார். இதேபோல் இனியஸ்டா கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருந்தார். இந்த கூட்டணி, ரஷ்யா அணிக்கு நெருக்கடி கொடுக்க ஆயத்தமாக உள்ளது.

ஸ்பெயின் வீரர் தியாகோ அல்கேன்ட்ரா கூறுகையில், நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும், இதுவரை நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை விளையாடவில்லை. மிகவும் முக்கியமான விஷயம், நாங்கள் ரஷ்யாவுக்கு எதிரான ஆட்டத்தை சிறப்பாக அமைக்க வேண்டும். நாங்கள் 11 ரஷ்ய வீரர்களுக்கு எதிராக விளையாடவில்லை. மைதானம் முழுவதும் காணப்படும் பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்களுக்கு எதிராக விளையாட உள்ளோம்” என்றார்.

சென்டர் பேக் ஜோடியான செர்ஜியோ ரமோஸ், ஜெரார்டு பிக்கி மற்றும் கோல்கீப்பர் டேவிட் டி ஜியா ஆகியோர்  லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் 5 கோல்களை எதிரணி வீரர்களால் அடிக்க விட்டிருந்தனர்.

இதனால் டிபன்ஸில் ஸ்பெயின் அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

ரைட்-பேக் திசையில் விளையாடக் கூடிய ஸ்பெயின் வீரர் டேனி கார்வஜல் கூறுகையில், தற் காப்பு ஆட்டத்தில் உள்ள தவறுகளை நாங்கள் குறைக்க வேண்டும். இந்த பகுதியில் நாங்கள் தவறு செய்தால், அது எதிரணியினர் கோல் அடிக்க மிக எளிதானதாக அமைந்துவிடும். எதிரணியினர் அவர்களது புத்தி சாலித் தனத்தைவிட எங்களது தவறுகளால்தான் கோல் கள் அடித்துள்ளனர்” என்றார்.

உலகக் கோப்பை தொடரில் போட்டியை நடத்தும் நாடான ரஷ்யா, லீக் சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியா அணியை 5-0 என்ற கோல் கணக் கில் வீழ்த்தி மிரள வைத்தது. இதைத் தொடர்ந்து பலம் வாய்ந்த எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை பெற்றது. அந்த அணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு கடைசி லீக் ஆட்டத்தில் உருகுவே முட்டுக்கட்டை போட்டது. அந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயிடம் ரஷ்யா தோல்வி கண்டது.

உலகக் கோப்பை தொடரில் கால்பதிப்பதற்கு முன்னதாக ரஷ்ய அணி கடும் விமர்சனங்களை எதிர் கொண்டிருந்தது. அதாவது கடந்த 8 மாதங்களில் அந்த அணி ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் இருந்தது. அதிகபட்சமாக நவம்பர் மாதம் ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தை 3-3 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. ஆனால் லீக் சுற்றின் முதல் ஆட்டத் திலேயே அபார வெற்றி பெற்று சிறிய அளவிலான அற்புதத்தை நிகழ்த்தியது ரஷ்ய அணி. லீக் சுற்றில் ரஷ்ய அணி 8 கோல்கள் அடித்த நிலையில் 4 கோல்களை வாங்கியது.

38 வயதான ரஷ்ய அணியின் டிபன்டரான செர்ஜி இக்னாஷேவிச் கூறுகையில், “ஸ்பெயின் அணி கடந்த வருடங்களில் விளையாடிய பாணியிலேயே தற்போதும் விளையாடுகிறது. அந்த அணியின் டிபன்டர்கள் பெரிய அளவிலான இடைவெளி விட்டு விளையாடுவார்கள். இதனை எதிர்தாக் குதல் ஆட்டம் தொடுக்கும் அணி பயன்படுத்திக் கொள்ள முடியும். ஸ்பெயின் அணிக்கு பலவீனம் என்று ஒன்று இருந்தால் அது இந்த விஷயமாகத்தான் இருக்கும்” என்றார்.

உருகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஷ்ய வீரர் இகோர் ஸ்மோல்னிகோவ் சிவப்பு அட்டை பெற்றதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் குணமடைந்துள்ள நடுகள வீரர் ஆலன் ஸகோவ் அணியுடன் இணைந்துள்ளார். இது ரஷ்ய அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. லீக் சுற்றில் ரஷ்ய அணியின் வெற்றிகளில் டெனிஸ் செரிஷேவ், ஆர்டெம் ஸூபா, கொலோவின், கஸின்ஸ்கி ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். இதில் செரிஷேவ் 3 கோல்கள் அடித்து, அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். இந்த கூட்டணி மீண்டும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த பிறகு முதன்முறையாக கால் இறுதியில் கால்பதித்து சாதனை படைக்கலாம்.

நேருக்கு நேர்

ஸ்பெயின் - ரஷ்யா அணிகள் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் ஸ்பெயின் 6 ஆட்டங்களிலும், ரஷ்யா 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 4 ஆட்டங்கள் டிரா வில் முடிந்துள்ளது. கடைசியாக இரு அணிகளும் 2017-ம் ஆண்டு மோதின.

இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்திருந்தது. அதற்கு முன்னதாக 2008-ம் ஆண்டு யூரோ கோப்பை அரை இறுதியில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணியை வீழ்த்தியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x