Published : 27 Jun 2018 11:13 AM
Last Updated : 27 Jun 2018 11:13 AM

கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்: ‘லயன்’ மெஸ்ஸி நெகிழ்ச்சி

நேற்றைய போட்டி போல் ஒரு போட்டியை தான் ஆடியதில்லை என்று கூறிய லியோனல் மெஸ்ஸி, ஒரு போதும் அர்ஜெண்டினா வெளியேறிவிடும் என்று தான் பயப்படவில்லை ஏனெனில் கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறார் என உணர்ச்சிவயப்பட்டு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவை கடைசியில் ரோஜோவின் கோலினால் 2-1 என்று வீழ்த்திய அர்ஜெண்டினா இறுதி 16 சுற்றில் பிரான்ஸைச் சந்திக்கிறது.

வாரம் முழுதுமான பதற்றம், வசைகள், கேலிகள், கிண்டல்கள், அறிவுரைகள், சுற்றிலும் ஒரே பேச்சுக்கள் என்று அர்ஜெண்டினாவைச் சுற்றி பெரிய புகைமூட்டம் எழுந்தது, இனி அடுத்த சுற்று பற்றிய பதற்றமே பாக்கி.

இந்நிலையில் மெஸ்ஸி கூறும்போது, “கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். எங்களை இந்தச் சுற்றுடன் வெளியேற்றி விடமாட்டார் என்றும் எனக்குத் தெரியும்.

 

நான் இவ்வாறு வாதையை அனுபவித்தது இல்லை. ஏனெனில் சூழ்நிலை அதுமாதிரியானது, உலகக்கோப்பை என்றால் அது ரசிகர்களுக்கு என்ன என்பதையெல்லாம் யோசித்த போது எனக்குள் பெரிய வாதையை உணர்ந்தேன். இப்போது பெரிய விடுதலையை உணர்கிறேன்.

கடந்த போட்டியில் தோற்றதையடுத்து கடினமான காலங்களைக் கடந்தோம். அதிர்ஷ்டவசமாக இன்று நாங்கள் நிம்மதியடைந்து விட்டோம். எப்படியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது, கடவுளுக்கு நன்றி.” என்றார்.

கடைசியில் பயிற்சியாளர் சம்போலியை மெஸ்ஸி ஆரத்தழுவினார், இதுபற்றி சம்போலி கூறும்போது, “அந்தச் செய்கை என்னைப் பெருமையடையச் செய்கிறது. நான் செய்யும் அனைத்திலும் எனக்கு இருக்கும் பற்றுதலை மெஸ்ஸி அறிவார். ரஷ்யாவுக்கு ஒரே கனவுடன் தான் இருவரும் வந்தோம், அர்ஜெண்டினாவுக்காக பெரிதாக ஒன்றைச் செய்ய வேண்டும்.

விஷயம் என்னவெனில் மெஸ்ஸி அதிகம் பந்துகளைக் கையாண்டார், அவர் தனிமைப்படுத்தப்படவில்லை, இதுதான் மிக முக்கியம்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x