Published : 24 Jun 2018 10:06 AM
Last Updated : 24 Jun 2018 10:06 AM

ஷகிரியின் கடைசி நிமிட கோலால் விட்சர்லாந்து வெற்றி: 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கடைசி நிமிட கோலால் செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இ பிரிவில் இடம் பெற்றுள்ள சுவிட்சர்லாந்து - செர்பியா அணிகள் நேற்றுமுன்தினம் கலினின்கிராட் மைதானத்தில் மோதின. தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து 4-2-3-1 என்ற பார்மட்டில் களமிறங்கியது. அதேவேளையில் 34-வது இடத்தில் உள்ள செர்பியா அணியும் அதே பார்மட்டில் களம் புகுந்தது.

5-வது நிமிடத்தில் செர்பியாவின் லூகா மிலிவோஜெவிச்சின் கிராஸை பெற்ற அலெக்சாண்டர் மிட்ரோவிச், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டி கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் கோல்கம்பத்தின் வலது ஓரத்தில் அதனை கோல்கீப்பர் யான் சோமர் தடுத்தார். அடுத்த நொடியில் வலதுபுறத்தில் டூசான் டாடிக்கிடம் இருந்து கிராஸை பெற்ற அலெக்சாண்டர் மிட்ரோவிச் தலையால் முட்ட, யான் சோமருக்கு இடது புறமாக பந்து கோல் வலையை துளைத்தது. இதனால் செர்பியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

9-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ஹெர்டான் ஷகிரி, பாக்ஸின் வெளியே இருந்து அடித்த பந்து தடுக்கப்பட்டது. 10-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் பிளெரீம் ஸீமெய்லி, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்து, கோல்கம்பத்துக்கு வலது புறம் விலகிச் சென்றது. 16-வது நிமிடத்தில் செர்பியாவின் மிலின்கோவிச், பாக்ஸின் வெளியே இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு இடதுபுறம் விலகிச் சென்றது. 19-வது நிமிடத்தில் அலெக்சாண்டர் மிட்ரோவிச், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து இலக்கை நோக்கி உதைத்த பந்து உயரமாக கோல்கம்பத்துக்கு இடதுபுறம் வெளியே சென்றது. 30-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ஸ்டீவன் ஸூபரின் உதவியுடன் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து பிளெரீம் ஸூமெய்லி, அடித்த பந்தை இடது ஓரத்தில் செர்பியா கோல்கீப்பர் தடுத்தார்.

31-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ஃபேபியன் ஸ்கர், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்துக்கு மேலாக உயரமாக சென்றது. 37-வது நிமிடத்தில் செர்பியாவின் டூசான் டாடிக், பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து, கோல்கம்பத்தின் மையப்பகுதியில் யான் சோமரால் தடுக்கப்பட்டது. 42-வது நிமிடத்தில் அலெக்சாண்டர் மிட்ரோவிச், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்றது. 44-வது நிமிடத்தில் செர்பியாவின் டஸ்கோ டோசிக் கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமாக தலையால் முட்டிய பந்து இடது புறமாக வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது. அடுத்த நொடியில் அந்த அணியின் நேமஞ்சா மேட்டிக், 18 அடி தூரத்தில் இருந்து அடித்த பந்தும் இடது புறமாக விலகிச் சென்றது. முதல் பாதியின் முடிவில் செர்பியா 1-0 என முன்னிலை வகித்தது.

52-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து பதிலடி கொடுத்தது. பாக்ஸ் பகுதிக்குள் வைத்து ஷகிரி அடித்த பந்து செர்பியாவின் கோலரோவால் தடுக்கப்பட்டது. அவர் மீது பட்டு பாக்ஸ் பகுதிக்கு வெளியே வந்த பந்தை யாரும் மார்க் செய்யப்படாத நிலையில் இருந்த கிரானிட் ஸகா 25 யார்டு தூரத்தில் இருந்து அற்புதமாக வலது ஓரத்தை நோக்கி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற சமநிலையை அடைந்தது.

58-வது நிமிடத்தில் ஷகிரி, இடது புறத்தில் சற்று தொலைவில் இருந்து இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கம்பத்தின் வலது ஓர கம்பியை தாக்கியபடி விலகிச் சென்றது. 82-வது நிமிடத்தில் ஸ்டீவன் ஸூபர் உதவியுடன் சுவிட்சர்லாந்தின் பிரீல் எம்போலோ அடித்த பந்து, செர்பியா கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. 84-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் மரியோ காவ்ரனோவிச், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு வலது புறம் தடுக்கப்பட்டது.

90-வது நிமிடத்தில் மரியோ காவ்ரனோவிச்சிடம் இருந்து பந்தை பெற்ற ஹெர்டான் ஷகிரி பந்தை வேகமாக கடத்திச் சென்று பாக்ஸின் இடது புறத்தில் டிபன்டரான டோசிக்கின் தடுப்பை மீறி, கோல்கீப்பர் ஸ்டோகோவிச்சின் கால்களுக்கு ஊடாக அற்புதமாக கோல் அடித்தார். இது சுவிட்சர்லாந்தின் வெற்றி கோலாக அமைந்தது. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நிமிடங்களில் இரு அணிகள் தரப்பில் மேலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. முடிவில் சுவிட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது. முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து, பிரேசிலுக்கு எதிராக டிரா செய்திருந்தது. அதேவேளையில் செர்பியா அணி முதல் தோல்வியை சந்தித்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x