Last Updated : 22 Jun, 2018 01:58 PM

 

Published : 22 Jun 2018 01:58 PM
Last Updated : 22 Jun 2018 01:58 PM

‘பேரழிவுக்குத்தான் 2 புதிய பந்து’: சச்சின் காட்டம்; வக்கார் யூனிசும் ஆதரவு

ஒருநாள் போட்டியை பேரழிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்தான் 2 புதிய பந்துகளை பயன்படுத்துகிறார்கள் என்று கிரிக்கெட் ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சச்சின் டெண்டுல்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டிகளில் இரு புதிய பந்துகள் இரு அணி பேட்டிங்கின்போதும் பயன்படுத்தலாம் என்ற விதிமுறை கொண்டு வந்தது. கிரிக்கெட்டை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், பார்வையாளர்களுக்கு நல்ல விருந்தாகவும் அமைய வேண்டும் என்பதற்காக ஐசிசி இந்த விதிமுறையைத் திருத்தி அமைத்தது.

இதன் காரணமாக ஒரு நாள் போட்டிகளில் அணிகள் பேட்டிங் செய்யும் போது அதிகமான ரன்களைக் குவிக்க முடியும். பந்துவீச்சாளர்களுக்குப் பந்து தேயாமல் இருப்பதால், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பந்தை சுழலவிடுவதிலும், வேகப்பந்துவீச்சாளர்களுக்குப் பந்தை ஸ்விங் செய்வதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால், ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே மாறிவிடுகிறது.

இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளை குறிப்பிடலாம். 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான தனது சொந்த சாதனையான 444ரன்கள் என்பதை இங்கிலாந்து முறியடித்தது.

4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 310 ரன்கள் எடுத்ததையும் இங்கிலாந்து அணியினர் மிகவும் எளிதாக சேஸ் செய்து வெற்றி பெற்றனர்.

இதுபோன்று போட்டிகள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக மாறுவதற்கு இரு இன்னிங்ஸ்களிலும் புதிய பந்தை பயன்படுத்துவதே காரணம். இதனால், பந்துவீச்சாளர்கள் மத்தியில்ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு, போட்டி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே மாறிவிடுகிறது. காலப்போக்கில் ஒருநாள் போட்டி அழிவுக்கும் காரணமாகிவிடும் என சச்சின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஒருநாள் போட்டிகளில் இரு இன்னிங்ஸ்களிலும் 2 புதிய பந்தை பயன்படுத்துவது என்பது பேரழிவுக்கு மிகச்சிறந்த விருந்தாக அமையும். ஒவ்வொரு பந்தும் தேய்ந்து, பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்வதற்கும், சுழலவிடுவதற்கும் அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளும். இதன் காரணமாக ரிவர்ஸ் ஸ்விங்கை நாம் போட்டியில் நீண்டகாலமாகப் பார்க்க முடியவில்லை. ரன்கள் கொடுக்காத டெத் ஓவர்களையும் நாம் பார்க்க முடிவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் கருத்தை பாகிஸ்தான் முன்னாள் வீரரும், வேகப்பந்துவீச்சாளருமான வக்கார் யூனிஸும் ஆதரித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில்,

2 இன்னிங்ஸ்களிலும் இரு புதிய பந்துகளைப் பயன்படுத்துவதன் காரணமாகவே மிகுந்த ஆக்ரோஷமான பந்துவீச்சாளர்களை நாம் உருவாக்க முடியாததற்குக் காரணமாகும்.

அதனால்தான், அனைவரும் தங்களின் அணுகுமுறையில் மிகுந்த அக்கறை உள்ளவர்களாக, தங்களை உயர்த்திக்கொள்வதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்கள். சச்சின் உங்கள் கருத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன். சச்சின் ஒன்று தெரியுமா, வேகப்பந்துவீச்சில் இன்று ரிசர்வ்ஸ் ஸ்விங் எந்தப் பந்துவீச்சாளர்களாவது வீசுகிறார்களா, ரிசர்வ்ஸ் ஸ்விங் முற்றிலும் அழிந்துவிட்டது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x