Published : 20 Jun 2018 12:51 PM
Last Updated : 20 Jun 2018 12:51 PM

‘பால் டாம்பரிங்’ - ஒப்புக்கொண்ட இலங்கை கேப்டன் சந்திமால்; ஐசிசி தண்டனை அறிவிப்பு: அடுத்த அதிர்ச்சியும் காத்திருப்பு

இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) உத்தரவிட்டுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகளில் இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. செயின்ட் லூசியாவில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 2-வது நாளில் இலங்கை அணியின் கேப்டன் சந்திமால், பந்தைச் சேதப்படுத்தியதாக நடுவர்கள் அலீம் தார், இயான் ஆகியோர் குற்றச்சாட்டு கூறினார்கள். இதை சந்திமாலும், இலங்கை அணி நிர்வாகமும் மறுத்தன.

இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை ஐசிசி போட்டி நடுவர் ஜவஹல் சிறீநாத் முன்னிலையில் நடந்தது. அப்போது, போட்டி நடுவரிடம், சந்திமால் தான் பந்தைச் சேதப்படுத்தியதாக ஒப்புக்கொண்டார். அது குறித்து போட்டு நடுவரும், முன்னாள் இந்திய அணி வீரருமான ஜவஹல் சிறாநாத் கூறியதாவது:

செயிட் லூசியாவில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வதுநாளில் இலங்கை அணியின் கேப்டன் சந்திமால் பந்தை சேதப்படுத்தியதாக வீடியோவில் பதிவாகியுள்ளது. அவருக்கு 2 சஸ்பென்ஷன் புள்ளிகளும், போட்டி ஊதியம் 100 சதவீதத்தை அபராதமாகவும் விதித்துள்ளோம். இந்த இரு சஸ்பென்ஷன் புள்ளிகள் ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் போட்டிகள், அல்லது 2 டி20 போட்டிகள் விளையாட முடியாமல் போகலாம். அது அந்த அணி நிர்வாகத்தைப் பொறுத்தது. ஆனால், சந்திமால், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், சந்திமால் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒருபொருளை வாயில்போட்டு மென்று, தனதுவாயில் இந்து எச்சிலை எடுத்து பந்தின் மீது தொட்டு தேய்ப்பது வீடியோ காட்சியில் உறுதியாகியுள்ளது. இது ஐசிசி விதிமுறைக்கு எதிராகப் பந்தை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் தான் அப்படி செய்யவில்லை என்று மறுத்த தினேஷ் சந்திமால், பின்னர் வீடியோ காட்சிகளை காண்பித்ததும் தனது தவற்றை ஒப்புக்கொண்டார். ஆனால், எந்தவிதமான பொருளை வாயில் இருந்து எடுத்து துடைத்தேன் என்று அவரால் சொல்லமுடியவில்லை. இதையடுத்து அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனால், தொடக்கத்தில் தங்களின் அணி வீரர்கள் எந்தவிதமான தவற்றிலும் ஈடுபடமாட்டார்கள் என்று வீராப்பு பேசிய இலங்கை அணி தற்போது, வேறுமாதிரியாகப் பேசுகிறது. அதாவது போட்டி தொடங்கும் 10 நிமிடங்களுக்கு முன் வந்து பந்தை சேதப்படுத்திவிட்டதாக நடுவர்கள் தங்களிடம் புகார் தெரிவித்தனர். இதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தனர்.

ஆனால், இலங்கை கிரிக்கெட் அமைப்பு இது குறித்து எந்தவிதமான கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சந்திமாலுக்கு 48மணிநேரம் அவகாசம் இருக்கிறது. ஆனால், குற்றச்சாட்டு ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில், சந்திமால், பயிற்சியாளர், அணி மேலாளர் ஆகியோர் மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இலங்கையின் கிரிக்கெட் மதிப்பை,மாண்பை கெடுக்கும் வகையில் செயல்பட்ட சந்திமால் ஜுலை மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முழுவதும் நீக்கப்படலாம், ஒருநாள் தொடரில் இருந்தும் நீக்க ஆலோசி்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இலங்கை அணி 2 போட்டிகளிலும் சுமாராகவே விளையாடியது. 2-வது போட்டியில் டிரா செய்தது. முதல் போட்டியில் வென்று மேற்கிந்தியத்தீவுகள் அணி 1-0 என்று முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில், பகலிரவாக 3-வது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. அந்தப் போட்டியில் சந்திமால் இல்லாதது இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும். சந்திமால் இல்லாத நிலையில், லக்மால் கேப்டன் பொறுப்பை ஏற்பார். சந்திமாலுக்கு பதிலாக ஹிராத் அணியில் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x