Published : 13 Jun 2018 03:26 PM
Last Updated : 13 Jun 2018 03:26 PM

36 வயதினிலே....பின்னால் இறங்குவது புதைமணல் போல்தான்: தோனி கருத்து

 

36 வயதாகிவிட்டதால் தன் பேட்டிங்கில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது என்று கூறிய சிஎஸ்கே கேப்டன் தோனி கொஞ்சம் முன்னால் களமிறங்கி ஆக்ரோஷமாக ஆட வேண்டிய தேவை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2018-ல் 16 போட்டிகளில் தோனி 455 ரன்கள் குவித்து சிஎஸ்கே சாம்பியன் ஆனதின் பின்னணியில் சக்தியாக விளங்கினார். இந்த சீசனில் மட்டும் 300க்கும் அதிகமான பந்துகளை அவர் சந்தித்துள்ளார்.

இந்நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் தோனி கூறும்போது, “நிச்சம் பேட்டிங் ஆர்டரில் இன்னும் கொஞ்சம் முன்னால் களமிறங்குவது என்று மனதில் உறுதி பூண்டேன். நான், இந்த வயதில் பின்னால் இறங்குவது புதைமணல் போல்தான்.

போட்டிகளை வெற்றிகரமாக முடிக்க எண்ணி பின்னால் இறங்கி ஆடினேன், ஆனால் இவ்வாறு இறங்கும்போது எனக்கு நானே ஆடுவதற்கு நேரம் கொடுத்துக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்தேன். எனவே பின்னால் இறங்குவது ஈரப்புதைமணல் போல்தான். முன்னால் இறங்கி என் வானில் அதிகம் சிறகடிப்பதன் மூலம் இன்னும் ஆழமாகப் பறக்க முடியும் என்பதை உணர்கிறேன்.

எனவேதான் கடைசி வரை பேட்டிங் உள்ள ஒரு அணியாக அமைந்தால் நான் முன்னால் களமிறங்க வாய்ப்பு கிடைக்கும் என்று கருதினேன். முன்னால் இறங்குவது என்றால் 2, 3, நிலைகளில் இறங்குவது என்பதல்ல நான் இறங்கும்போது அதிக ஓவர்கள் மீதமிருக்க வேண்டும் என்ற பொருளில் முன்னால் இறங்குவது என்று கூறுகிறேன்.

அதனால்தான் முன்னால் களமிறங்கினேன், அதனால் ஆக்ரோஷமாக பேட் செய்ய விரும்புகிறேன். ஆகவே நான் அவுட் ஆனால் கூட மற்றவர்கள் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து விடும் வாய்ப்பு இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த ஐபிஎல்-ல் நாங்கள் எங்கள் அனைத்து பேட்டிங் வரிசையையும் முழுதும் பயன்படுத்தும் சூழல் ஏற்படவில்லை, வாட்சன், ராயுடு, ரெய்னா, பிராவோ ஆகியோர் ரன்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். அது உண்மையில் எங்களுக்கு உதவியது. கடைசி வரை பேட் செய்யக்கூடிய அணியே வேண்டுமென்று நான் முதலிலிருந்தே திட்டமிட்டேன். அனைவரும் பேட் செய்யக்கூடிய ஒரு அணியில் நான் முன்னால் களமிறங்கி நான் நினைத்தபடி ஆட முடிந்தது” இவ்வாறு கூறினார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x