Last Updated : 13 Jun, 2018 02:50 PM

 

Published : 13 Jun 2018 02:50 PM
Last Updated : 13 Jun 2018 02:50 PM

‘சிஎஸ்கேவைப் பாருங்கள், அனுபவத்தை விலைக்கு வாங்க முடியாது’: ஆப்கான் வீரர்களுக்கு தினேஷ் கார்த்திக் பதிலடி

இந்தியாவுக்கு சுழற்பந்துவீச்சில் அச்சுறுத்தல் விடுப்போம் என ஆப்கானிஸ்தான் வீரர்கள் கூறியதற்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், அனுபவம் எப்படிப்பட்டது என்பதை ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம், அனுபவத்தை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி நாளை முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டபின் அந்த அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி என்பதால், இது வரலாற்றுச்சிறப்பு மிக்க போட்டியாகப் பார்க்கப்படுகிறது.

பெங்களூரு சின்னச்சாமி அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் இந்திய அணிக்குப் பெரிய அளவுக்குச் சவாலாக இருக்காது என்ற போதிலும், பந்துவீச்சில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.

அதற்கு ஏற்றார்போல், அந்த நாட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் ரஷித்கான், முகம்மது நபி, முஜிபூர் ஆகியோர் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுப்போம் என்று சவால்விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் கேப்டனும், இந்திய அணியைக் காட்டிலும் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் எங்களிடம் இருக்கின்றனர் என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திகிடம், ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுத்துள்ளதும், அந்த அணி எங்களுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடப்போகிறது என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

ஆப்கானிஸ்தானில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள், ஒவ்வொரு நாள் வாழ்க்கைக்கும் உறுதியில்லாத நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். அந்தச் சூழலிலும் மக்கள் கிரிக்கெட் மீதான தீராத காதலால், கிரிக்கெட் விளையாட்டைப் பழகி இந்த அளவுக்கு வளர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, வரவேற்கிறேன்.

அவர்களின் கிரிக்கெட் பயணம் என்பதும் அருமையான நிகழ்வுகள் அடங்கியது. ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியினர் திறமையை வெளிப்படுத்தி விளையாடி இருக்கலாம், போட்டிகளில் வென்று இருக்கலாம். அவ்வாறு அவர்கள் பெற்ற வெற்றி என்பது உண்மையில் பெருமைக்குரியதுதான்.

ஆனால், ஒருநாள் போட்டி, டி20 போட்டி, டெஸ்ட் போட்டி அனைத்தும் வெவ்வேறு. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைப் பொருத்தவரை இந்திய அணிக்கும், வீரர்களுக்கும் ஏராளமான அனுபவம் உண்டு, முதல் தரமான கிரிக்கெட் போட்டியிலும் அளவுகடந்த அனுபவம் உண்டு.

ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் விளையாடிய போட்டியின் எண்ணிக்கையை ஒன்றாகக் கூட்டினால், கூட இந்திய வீரர் குல்தீப் யாதவ் விளையாடிய ஒட்டுமொத்த போட்டிகளைக் காட்டிலும் சில போட்டிகள்தான் அதிகமாக இருப்பார்கள். அவர் ஒருவரின் அனுபவம் இவர்களின் ஒட்டுமொத்த போட்டிக்கான அனுபவமாகும்.

அனுபவம் எப்படிப்பட்டது என்பதை ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 30வயதுக்கு மேற்பட்டவர்கள் கொண்ட அணி என விமர்சித்தாலும், அனுபவ வீரர்கள் கொண்ட சிஎஸ்கேதான் சாம்பியன் பட்டம் வென்றது. ஆதலால், அனுபவத்தை ஒருபோதும், யாராலும் விலைக்கு வாங்க முடியாது. அதுபோலத்தான் இந்திய அணி அனுபவம் மிகுந்தது.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x