Published : 11 Jun 2018 09:15 AM
Last Updated : 11 Jun 2018 09:15 AM

சாதிக்கத் தயாராகும் போலந்து

லக கால்பந்து அரங்கில் செல்லமாக கழுகுகள் (தி ஈகிள்ஸ்) என்று அழைக்கப்படும் போலந்து அணி உண்மையிலேயே கோப்பையை வெல்வதற்குத் தேவையான வீரர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. தரம் வாய்ந்த வீரர்கள், அதி அற்புதமான ஒருங்கிணைக்கும் திறன், திறமையான பயிற்சியாளர், வீரர்கள் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகர் கூட்டம் என போலந்து கால்பந்து அணிக்கு ஏகப்பட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன.

இந்த முறை உலகக் கோப்பைக்கான கால்பந்து தகுதிச் சுற்றில் ஐரோப்பாவின் குரூப் ஈ பிரிவில் போலந்து இடம்பெற்றிருந்தது. மொத்தம் 10 தகுதிச் சுற்று ஆட்டங்களில் 8-ல் அட்டகாசமான வெற்றியைப் பறித்தது போலந்து.

ஒரு போட்டியில் டிராவும், ஒரு போட்டியில் தோல்வியையும் அந்த அணி சந்திக்க வேண்டியிருந்தது.

மேலும் 28 கோல்களைச் செலுத்திய போலந்து, எதிரணியிடம் 14 கோல்களை மட்டுமே வாங்கியிருந்தது. மொத்தம் 25 புள்ளிகளைப் பெற்ற போலந்து, குரூப் ஈ பிரிவில் முதலிடம் பெற்று ரஷ்ய உலகக் கோப்பை போட்டிக்கு தகுதியைப் பெற்றது.

தகுதிச் சுற்று ஆட்டங்களின்போது மோன்டெனக்ரோ, ருமேனியா, அர்மீனியா, கஜகஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அமர்க்களமான வெற்றியைப் பெற்றது. ஆனால் கோபன்ஹேகனில் நடைபெற்ற டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 0-4 என்ற கணக்கில் மோசமான தோல்வியைப் பதிவு செய்தது. ஆனால் அதே நேரத்தில் டென்மார்க் அணிக்கு எதிரான மற்றொரு ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் வெற்றி கண்டது போலந்து. தகுதிச் சுற்றின் முடிவில் மற்ற வெற்றிகளின் காரணமாக எளிதில் ரஷ்ய உலகக் கோப்பைக்குள் போலந்து நுழைந்தது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது கேப்டன் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கியின் அசகாய ஆட்டம்தான்.

அந்த அணி செலுத்திய 28 கோல்களில் 16 கோல்களை செலுத்தியவர் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கிதான் என்பது இங்கு குறிப்பிடத் தகுந்த விஷயமாக அமைந்துள்ளது.

ருமேனியா, டென்மார்க் அணிக்கெதிரான ஆட்டங்களின்போது ஹாட்ரிக் கோல்களைச் செலுத்தினார் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி. இதனால் உலகக் கோப்பைக்கு அணியைத் தகுதி பெறச் செய்ததில் முக்கியமான காரணமாக ராபர்ட் அமைந்தார்.

அணியின் முதுகெலும்பாகவும், தலைமை வீரனாகவும் இருப்பவர் ராபர்ட்தான். அவர்தான் அணிக்கு முக்கிய பலமாக இருக்கிறார் என்று பயிற்சியாளர் ஆதம் நவால்கா புகழ்ந்துள்ளார்.

பேயர்ன் மூனிச் அணிக்காக ஆடி வருபவர்தான் ராபர்ட். பேயர்ன் மூனிச் கிளப் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் ராபர்ட், அந்த அணிக்காக 2014-ம் ஆண்டு முதல் ஆடி வருகிறார். பேயர்ஸ் மூனி அணி சார்பில் 126 முறை களமிறங்கி அவர் 106 கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.

போலந்து தேசிய அணிக்காக 2008 முதல் களமிறங்கி கலக்கி வருகிறார் ராபர்ட். இதுவரை போலந்து அணிக்காக 93 போட்டிகளில் விளையாடியுள்ள ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி 52 கோல்களை அடித்துள்ளார். பல விருது களையும், கோப்பைகளையும் போலந்து அணிக்காக அவர் பெற்றுத் தந்துள்ளார். போலந்து நாட்டின் ரசிகர்கள் ஒட்டுமொத்தத்தையும் கவர்ந்திருப்பவர் ராபர்ட்.

உலகக் கோப்பைத் தகுதி சுற்று ஆட்டங்களில் ஐரோப்பிய பிரிவில் அதிக கோல்கள் அடித்தவரும் இவர்தான். மொத்தம் 16 கோல்களை அடித்த இவர், 2 முறை ஹாட்ரிக் கோல்களும் அடித்தார். அணியின் ஸ்டிரைக்கரான ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி அணி வீரர்களை கட்டுக்கோப்பாகவும், திறமையாகவும் வழிநடத்துவதில் வல்லவர். அணியின் பாரத்தை மொத்தமாக சுமந்து கொண்டு ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி. போலந்து நாட்டின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளார் ராபர்ட்.

அதே நேரத்தில் அணியின் முக்கிய வீரர்கள் சிலர் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அர்க்காடியுஸ் மிலிக், குபா பிளாஸ்சைக்கோவ்ஸ்கி ஆகியோர் காயமடைந்துள்ளனர். மேலும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் எதிர்பார்த்த உயர்மட்ட அளவிலான திறனை போலந்து அணி வெளிப்படுத்தவில்லை. கேப்டன் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கியும் கூட தனது திறமையை அங்கு நிரூபிக்கத் தவறியது பயிற்சியாளர் நவால்காவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

1938, 1974, 1978, 1982, 1986, 2002, 2006 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றது போலந்து. தற்போது 8-வது முறையாக உலகக் கோப்பைத் தொடரில் நுழைந்துள்ளது. 1974, 1982-ம் ஆண்டுகளில் 3-வது இடத்தைப் பிடித்ததே போலந்து அணியின் உலகக் கோப்பையில் அதிகபட்ச வெற்றியாகும். இந்த முறை உலகக் கோப்பையில் குரூப் எச் பிரிவில் செனகல், ஜப்பான், கொலம்பியா அணிகளுடன் இணைந்துள்ளது போலந்து. பார்ப்பதற்கு எளிதான அணிகள் போன்று இருந்தாலும் செனகல், ஜப்பான், கொலம்பியா அணிகள் போலந்தின் திறமைக்குச் சவால் விடும் அணிகளாக இருக்கின்றன. எனவே போலந்து அணிக்கு முதல் சுற்று கடுமையாக இருக்கப் போகிறது.

ஆனால், போலந்து கால் இறுதி வரை முன்னேறும் என கால்பந்து விமர்சகர்கள் கணித்துள்ளனர். கோப்பைக் கனவில் போலந்து வீரர்கள் ரஷ்யாவுக்குச் சென்றுள்ளனர். கோப்பையை வென்று சாதிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x