Last Updated : 10 Jun, 2018 01:08 PM

 

Published : 10 Jun 2018 01:08 PM
Last Updated : 10 Jun 2018 01:08 PM

வெற்றியின் போதெல்லாம் எதிரணியினரைப் பகடி செய்யும் வ.தேச அணியின் பாம்பு டான்ஸ்: கோப்பை எங்கே? வெற்றிகள் எங்கே?

வங்கதேச அணி குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் ஒரு அச்சுறுத்தலாக எழுந்தது, ஆனால் அதன் புகழ் குறுகிய காலத்திற்கானது. காரணம் சமீபமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் 3-0 என்று ஒயிட்வாஷ் உதை வாங்கியது வங்கதேசம்.

வெற்றி பெற்ற குஷியில் ஆப்கான் விக்கெட் கீப்பர் ஷஜாத் வங்கதேசத்தைப் பகடி செய்யும் பாம்பு டான்ஸ் அல்லது நாகின் முத்திரையைக் காட்டி நடனம் ஆடி வெறுப்பேற்றினார்.

2007 உலகக்கோப்பையில் இந்திய அணியை வீழ்த்திய பிறகே உள்ளூர் பத்திரிகைகளில் வங்கதேச வீரர்கள் அளித்த பேட்டிகள் கொடூரமானவை, இந்திய அணி ஏதோ ஹைப் என்பது போல் அங்கு சித்தரிக்கப்பட்டன. பிறகு 2011 உலகக்கோப்பையில் சேவாக் அதனை மனதில் வைத்துக் கொண்டு சாத்து சாத்தென்று சாத்தினார். விராட் கோலியும்தான். அதன் பிறகு கப்சிப் ஆகினர்.

2016-ல் உலக டி20 போட்டி அரையிறுதியில் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்ததை வைத்து வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் இந்திய அணியைப் பகடி செய்தார்:

“ஹாஹாஹா...இந்தியா அரையிறுதியில் தோல்வி, மகிழ்ச்சி மகிழ்ச்சி” என்று ஓவராகக் கூவினார். பிறகு நெட்டிசன்கள் சரியாகக் கொடுக்கவே ட்வீட்டை அழித்தார் முஷ்பிகுர்.

முன்னதாக 2015 உலகக்கோப்பை காலிறுதியில் ரோஹித்சர்மா கேட்ச் கொடுத்த பந்து இடுப்புக்கு மேல் வந்ததாக நடுவர் நோ-பால் கொடுக்க அதை வைத்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் உட்பட, வீரர்கள், அந்நாட்டு ஊடகங்கள் இந்திய அணியை தொடர்ந்து பகடி செய்து வந்தனர்.

தோனி தலைமையில் இந்திய அணி வங்கதேசத்தில் ஒருநாள் தொடரை இழந்த போது மீடியா கொஞ்சம் ஓவராகச் சென்று வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அகமட் கையில் தோனியின் தலை இருக்குமாறு மார்ஃப் புகைப்படம் வெளியிட்டு கடும் கேலி செய்தது. தென் ஆப்பிரிக்காவை தங்கள் மண்ணில் ஒருநாள் தொடரில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா ஒரு புஸ் என்று கேலி செய்தனர். அதற்குப் பதிலடியாகவே அங்கு சமீபமாகச் சென்று கிரிக்கெட் என்றால் சும்மா அல்ல என்பதை உணருமாறு தென் ஆப்பிரிக்கா அணி வங்கதேச வீர்ர்களின் உடல்,மனம் பாதிக்குமாறு ஒரு உதையை வழங்கியதும் நடந்தது.

வங்கதேசம் எப்போதும் தோல்விகளுக்கு தெரு கிரிக்கெட் போல் அம்பயர் நோ-பால் கொடுக்கவில்லை, ரன் அவுட் கொடுக்கவில்லை, எல்.பி.கொடுக்கவில்லை என்று தொடர்ந்து காரணம் கூறி அழுது வருவதையும் பார்த்து வருகிறோம், ஆனால் வெற்றி பெற்றால் எதிரணியினர் மீது கொஞ்சம் கூட மதிப்பில்லாது நாகின் டான்ஸ் ஆடி அவதூறு செய்வது, அவமானப்படுத்துவது என்று தங்கள் நடத்தையில் எல்லை மீறியே வந்துள்ளனர்.

சரி என்ன சாதித்து விட்டனர் அவர்கள் என்று பார்த்தால், 1986-ல் கிரிக்கெட் உலகில் நுழைந்தனர். 2000-ம் ஆண்டு ஜக்மோகன் டால்மியாவின் அபரிமிதமான உதவியால் டெஸ்ட் தகுதி பெற்றது. அது முதல் 340 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடி 225 போட்டிகளில் தோல்வியே தழுவியுள்ளது.

106 டெஸ்ட் போட்டிகளில் 10-ல் மட்டும் வென்று 80-ல் தோல்வி தழுவியுள்ளது. டி20-யில் 78 போட்டிகளில் ஆடி 23-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, கடைசியாக ஆப்கானிடம் ஒயிட் வாஷ் தோல்வி.

நல்ல பேட்ஸ்மென்களை உற்பத்தி செய்துள்ளது வங்கதேசம் அதில் தமிம் இக்பால், அஷ்ரபுல், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். பந்து வீச்சில் இப்போதுதான் முஸ்தபிசுர் எழுந்துள்ளார், முன்பாக அப்துர் ரஸாக் ஒரு நல்ல சுழற்பந்து வீச்சாளர் அவ்வளவே. இதில் அஷ்ரபுல் மேட்ச் பிக்சிங்கில் சிக்கி சின்னாபின்னமானார்.

இந்நிலையில் அவர்கள் எப்போதாவது வெற்றி பெற்றாலும் கூட எதிரணியினரை பகடி செய்யுமாறு ஒரு நாகின் டான்ஸை எடுத்து விடுவது கிரிக்கெட் உலகில் வங்கதேச அணி மீது ரசிகர்களுக்கு வெறுப்புணர்வையே தோற்றுவித்துள்ளது.

கிரிக்கெட் ஆட்டம் களத்தில் ஆடப்படுவது, களத்தில் வெல்லப்படுவது, அதற்கு வெளியே பகடி, கேலி, கிண்டல், சிரிப்பு போன்றவற்றினால் அல்ல. நிறைய கிரிக்கெட்டை ஆடிவிட்டனர், ஆனாலும் ஒரு கோப்பையை வெல்லவில்லை. கடைசியாக இந்தியவுக்கு எதிராக டி20 இறுதிப் போட்டியில் இலங்கை நிதாஹஸ் டிராபியில் தினேஷ் கார்த்திக் கோப்பைக் கனவுகளை தன் திகைப்பூட்டும் அதிரடி மூலம் தகர்த்தார்.

இருக்கும் திறமைக்கு அந்த அணி இன்னும் கூட நன்றாக ஆடியிருக்க வேண்டும், ஒரு பெரும்சக்தியாக உருவெடுத்திருக்க வேண்டும், மாறாக கிரிக்கெட் ஆட்டத்தில் கவனம் செலுத்தாமல் ஸ்லெட்ஜிங் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துவதால் வெற்றி அவர்கள் பக்கம் தலை வைத்துப் படுக்க மறுக்கிறது.

யாராவது நல்ல பயிற்சியாளர் அந்த அணியை கட்டுக்கோப்புடன் ஒழுக்கத்துடன் கொண்டு வந்தால் அந்த அணி 2019 உலகக்கோப்பைக்குள் ஒரு அச்சுறுத்தல் அணியாக மாற வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஆப்கானிஸ்தான் நிச்சயம் ஒரு சக்தியாக உருவெடுப்பதை வங்கதேசம் வேடிக்கை மட்டுமே பார்க்க நேரிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x