Published : 10 Jun 2018 09:27 AM
Last Updated : 10 Jun 2018 09:27 AM

கோப்பைக் கனவில் டென்மார்க் அணி

லகக் கோப்பை போட்டிக்கு முன்னேறுவது டென்மார்க் அணிக்கு இது 5-வது முறையாகும். முதன்முறையாக 1958-ல் உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் டென்மார்க் விளையாடியது. ஆனால் தகுதிச் சுற்று 4 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு வெளியேறியது. இதைத் தொடர்ந்து முதன்முறையாக 1986-ல் உலககக் கோப்பை கால்பந்து தொடருக்கு முன்னேறியது. 1986-ல் முதல் சுற்றில் 3 ஆட்டங்களையும் வென்று கம்பீரமாக முன்னேறியது டென்மார்க். ஆனால் 2-வது சுற்றில் பலம் வாய்ந்த ஸ்பெயினிடம் தோற்று வெளியேறியது அந்த அணி.

அதைத் தொடர்ந்து 98-ல் அபாரமாக விளையாடி கால் இறுதி வரை ஏற்றம் கண்டது அந்த அணி. ஆனால் கால் இறுதியில் அசுர பலம் கொண்ட பிரேசிலிடம் 3-2 என்ற கணக்கில் தோல்வி கண்டு வெளியேறியது டென்மார்க்.

இதுநாள் வரை உலகக் கோப்பையில் டென்மார்க்கின் அதிகபட்ச முன்னேற்றம் கால் இறுதி வரைதான் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதன்பிறகு 2002-ல் 2-வது சுற்றுடனும், 2010-ல் முதல் சுற்றுடனும் மூட்டைக் கட்டியது டென்மார்க்.

இந்த முறை உலகக் கோப்பைத் தொடரின் தகுதி முதல் சுற்று ஆட்டங்களில் குரூப் இ பிரிவில் 2-வது இடத்தைப் பிடித்தது டென்மார்க். முதலிடத்தை 25 புள்ளிகளுடன் போலந்து பிடித்தது. 20 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பெற்ற டென்மார்க் ஒரு பிளே-ஆப் ஆட்டத்தில் அயர்லாந்து அணியுடன் மோத வேண்டியிருந்தது. இந்த ஆட்டத்தில் டென்மார்க் கால்பந்து வீரர்கள் தங்களது வாழ்நாளில் அற்புதமான ஆட்டம் ஆடினார்கள். இதனால் ஆட்டத்தை 5-1 என்ற கணக்கில் டென்மார்க் அணியினர் வெற்றியுடன் முடித்து ரஷ்யாவுக்கு பயணம் செய்ய ஆயத்தமாகிவிட்டனர்.

அயர்லாந்துடனான ஆட்டத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன், தனது உயர்மட்ட ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார். அவர் அடித்த ஹாட்ரிக் கோல்களால் அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த முறை உலகக் கோப்பை கால்பந்துத் தொடரில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில்தான் பலம்வாய்ந்த பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெரு அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பிரான்ஸ் அணியை வீழ்த்த டென்மார்க் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும்.

டென்மார்க்கின் பலமாக இருப்பது கிறிஸ்டியன் எரிக்சன், நிக்கோலய் ஜோர்கென்சன், ஆந்திரயஸ் கார்னீலிய்ஸ், தாமஸ் டெலானி, வில்லியம் கிவிஸ்ட் ஆகியோர் அடங்கிய ஐவர் கூட்டணி. முன் களத்தில் எரிக்சன் ஜோராகக் கடத்திச் செல்ல நடுகளப் பகுதியில் தாமஸ் டெலானியும், வில்லியம் கிவிஸ்டும் ஜோடி போட்டு அரணாக நிற்கின்றனர். இவர்களை ஒருங்கிணைக்கும் கேப்டனாக சைமன் ஜாயேர், நடுகளத்தில் நங்கூரமிட்டு நிற்கிறார்.

அயர்லாந்துக்கு எதிரான பிளே-ஆப் சுற்றின்போது ஆந்திரியஸ், கிறிஸ்டியன் எரிக்சன் ஆகியோர் ஜோடி போட்டு பந்துகளைக் கடத்திச் சென்று அற்புதம் புரிந்தனர்.

அதைப் போலவே ஸ்டிரைகர் லார்சன், பீட்டர் ஆங்கர்சன், ஹென்றிக் டால்ஸ்கார்ட் ஆகியோரும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து களத்தில் பரிமளித்தால் அது டென்மார்க் வெற்றிக்கு உதவும்.

அதேபோல கிவிஸ்டும், டெலானியும் களத்தில் இணைந்து பந்தைக் கடத்துவதில் தீவிரம் இல்லாத நிலை உள்ளது. இதையெல்லாம் சீர்படுத்தும் முயற்சியில் பயிற்சியாளர் ஏஜ் ஹரீட் இறங்கியுள்ளார்.

நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வரும் கிறிஸ்டியன் எரிக்சனை பெரும்பாலும் நம்பி களம் காண்கிறது டென்மார்க். இந்த முறை முதல் சுற்றில் டென்மார்க் எளிதில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று கால்பந்து விமர்சகர்கள் கணித்துள்ளனர். ஆனால் 2-வது சுற்று அந்த அணிக்கு கடினமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கோப்பையை வெல்லும் தீவிரத்துடன் களமிறங்குகிறது டென்மார்க்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x