Published : 04 Jun 2018 01:28 PM
Last Updated : 04 Jun 2018 01:28 PM

டி20 போட்டியில் ரஷித்கான் புதிய சாதனை

சர்வதேச டி20 போட்டிகளில் மிக விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையை ஆப்கானிஸ்தான் சுழற்பந்தவீச்சாளர் ரஷித்கான் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்துவைத்த 220 நாட்களில் ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் குறிப்பிட்ட சாதனைகளை ரஷித்கான் புரிந்துள்ளார்.

இதற்கு முன் 40 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகவிரைவாக 100 விக்கெட்டுகளைச் சாய்த்த வீரர் எனும் பெருமையை ரஷித்கான் பெற்று இருந்தார். இப்போது டி20 போட்டிகளிலும் மிகவிரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

டேராடூனில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசிய 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ரஷித்கான் அசத்தியபோது, டி20 போட்டியில் இந்த முத்திரையைப் பதித்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி லெக் ஸ்பின்னரான ரஷித்கான் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் அறிமுகமாகினார். அதன்பின் 31 போட்டிகளில் தனது 50-வது விக்கெட்டை வீழ்த்தி ரஷித்கான் சாதித்துள்ளார்.

இதற்கு முன் டி20போட்டிகளில் மிகவிரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையை இலங்கை வீரர் மென்டிஸ் வைத்துள்ளார். அவர் 26 போட்டிகளில் இந்த சாதனையைச் செய்தார். அதற்கு அடுத்து,  தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் 31 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார். அவருக்கு இணையாக இப்போது ரஷித்கான் 50 விக்கெட்டுகளை 31 போட்டிகளில் வீழ்த்தியுள்ளார்.

மேலும், 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின்(35-வதுபோட்டி), பாகிஸ்தானின் உமர் குல்(36), சயித் அஜ்மல்(37) என முறையே 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர்.

19வயதான ரஷித்கான் தனது கூக்ளி பந்துவீச்சு மூலம் எதிரணிகளை மிரட்டி வருவது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த ரஷித்கான் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

சன்ரைசர்ஸ் அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரஷித்கானின் பந்துவீச்சு முக்கியக் காரணம் என்று கூறமுடியும். சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டிகளில் பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக சன்ரைசர்ஸ் அணி திகழ்ந்ததற்கு ரஷித்கான், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட சில வீரர்கள் இருந்தது முக்கியக் காரணமாகும்.

இதற்கு முன் ரஷித்கான் ஒருநாள் போட்டியில் தனது 100-வது விக்கெட்டை 44-வது போட்டிகளில் வீழ்த்தி, உலகிலேயே மிக விரைவாக 100-வது விக்கெட்டை வீழ்த்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். அதுமட்டுமல்லாமல் இந்த சாதனையைச் செய்த மிக இளம் வீரர் என்ற பெயரும் ரஷித்கானுக்கு உண்டு.

இதற்கு முன், மிட்ஷெல் ஸ்டார்க் 52 போட்டிகளிலும், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாக்லின் முஷ்டாக் 53 போட்டிகளிலும் 100-வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். மேலும்,ஆஸ்திரேலிய வீரர் ஷேன் பாண்ட்(54), பிரட் லீ (55) ஆகியோர் 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர்.

ரஷித்கான் ஒட்டுமொத்த(44ஒருநாள், 31 டி20) 75 போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 100 ஒருநாள் விக்கெட், 52 டி20 விக்கெட் அடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x