Published : 03 Jun 2018 07:45 AM
Last Updated : 03 Jun 2018 07:45 AM

52 வருடங்களாக போராடும் இங்கிலாந்து

கி

ரிக்கெட்டைப் போன்று கால்பந்தும் இங்கிலாந்தில் பிரபலம். இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மீது எல்லை கடந்த அன்பைப் பொழிபவர்கள் அந்த நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள். இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இங்கிலாந்து சில நாட்களுக்கு முன்பு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடவுள்ள அணியை அறிவித்தது. எதிர்பார்த்ததைப் போலவே இந்த முறை அணியை வழிநடத்திச் செல்லும் கேப்டனாக ஹாரி கேன் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை தனது தோளி (காலி)ல் சுமக்கவுள்ளார் கேன்.

மின்னல் வேக கிக், புயல் வேகத்தில் பந்தைக் கடத்தும் திறன் ஆகியவற்றால் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் ஹாரி கேன். இந்த முறை உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் 10 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 2 டிராக்களுடன் மொத்தம் 26 புள்ளிகளை குவித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தியது. தகுதிச் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து அணி 18 கோல்களை அடித்த நிலையில் 3 கோல்கள் மட்டுமே வாங்கியது.

தகுதிச் சுற்று ஆட்டங்களில் 5 கோல்களை அடித்து அசத்தினார் ஹாரி கேன். அணியின் தூணாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் கலக்கி வருகிறார் ஹாரி கேன். இளம் வீரர்களுடன் இங்கிலாந்து அணி களமிறங்குவதால் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஹாரி கேனிடமிருந்து அதிக மாக ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக கால்பந்து விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

அணிக்கு பக்கபலமாக ரஹீம் ஸ்டெர்லிங், ஜேமி வார்டி, மார்க்கஸ் ராஷ்போர்ட், டேனி ரோஸ், ரயான் பெர்டிரான்ட், கைல் வாஸ்கர், கைரன் டிரிப்பியர் போன் றோர் உள்ளனர். அதே நேரத்தில் இங்கிலாந்து அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் தனது திறமையை நிரூபிக்காமல் இருப்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. பலமுறை பெனால்டி ஷூட்-அவுட் சமயங்களில் இங்கிலாந்து சொதப்பி இருப்பது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

அணியினரை ஒருங்கிணைத்தும், எதிரணியைச் சமாளித்தும் இங்கிலாந்தை வெற்றி அடையச் செய்யவேண்டிய நெருக்கடியில் ஹாரி கேன் இருக்கிறார். உலகின் மிகச் சிறந்த ஸ்டிரைக்கர், அருமையான பினிஷர் என்று சொல்லப்படும் ஹாரி கேன் இந்த முறை உலகக் கோப்பை போட்டியில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மட்டுமே ஜொலிக்காமல் மற்ற வீரர்களையும் பிரகாசிக்க வைப்பது ஹாரி கேனுக்கு கைவந்த கலையாகும். மற்ற வீரர்களுக்கு கோலடிக்க அழகான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் ஹாரி கேன் மிளிர்கிறார்.

அனைத்து வீரர்களையும் பயிற்சியாளர் சவுத்கேட் ஒருங்கிணைத்து அருமையான பயிற்சியாளராக உலக அரங்கில் வலம் வருகிறார். வீரர்களை ஒருங்கிணைத்தல், அவர்களுக்கு போதுமான ஆலோசனைகள் வழங்குதல் போன்றவற்றில் நேர்த்தியாக செயல்படுகிறார். இந்த முறை இங்கிலாந்து அணி ஜி பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பிரிவில் பனாமா, பெல்ஜியம், துனீசியா அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் பெல்ஜியம் அணி இங்கிலாந்துக்கு கடும் சவால் அளிக்கக்கூடும்.

இங்கிலாந்து அணி உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறுவது இது 14-வது முறையாகும். 1950-ம் ஆண்டு முதன்முறையாக அறிமுகமான அந்த அணி 1966-ல் சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர் 52 வருடங்களாக கோப்பையை வெல்ல போராடி வருகிறது. இம்முறை அந்த தேசத்தின் கனவை நினைவாக்கும் கூடுதல் சுமையுடன் ஹாரி கேன் இந்தத் தொடரை சந்திக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x