Published : 30 May 2018 07:42 AM
Last Updated : 30 May 2018 07:42 AM

அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராக மாறிவிட்டேன்: கிரிக்கெட் வீரர் ரஷித் கான் பேட்டி

ஆப்கானிஸ்தான் அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராகி விட்டேன் என்று அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கூறினார்.

ஐபிஎல் 2018 டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இறுதி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் ஏலத்தின்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான ரஷித் கானை, ஹைதராபாத் அணி வாங்கியிருந்தது.

இந்தத் தொடரின்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17 ஆட்டத்தில் 21 விக்கெட்களைக் கைப்பற்றி 2-வது இடம்பிடித்துள்ளார். தனது அபாரமான பந்துவீச்சால் பல ஆட்டங்களில் அவர் ஹைதராபாத்துக்கு வெற்றி தேடித் தந்தார். எலிமினேட்டர் 2-வது ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார் ரஷீத் கான். 10 பந்தில் 34 ரன்களை விளாசியதுடன், 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். மேலும் அபாரமான 2 கேட்சுகளையும் அவர் பிடித்தார்.

ஐபிஎல் தொடரில் ரஷித் கானின் சிறப்பான ஆட்டம், பவுலிங்கைப் பார்த்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆச்சர்யம் அடைந்தார். அவரது திறமையைப் பார்த்து சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் புகழாரம் சூட்டியிருந்தார். உலகில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்களில் சிறந்தவர் ரஷித் கான் என்று சச்சின் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஒரு படி மேலே போன ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, ரஷித் கான் எங்கள் நாட்டின் சொத்து. அவரை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபருக்கு அடுத்தபடியாக தற்போது நான் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகவும் பிரபலமான நபராக மாறியுள்ளேன் என்று சியட்-கிரிக்கெட் வீரர் விருது வழங்கும் விழாவில் ரஷித் கான் கூறினார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஆப்கானிஸ்தான் அதிபரின் வாழ்த்து என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அவருக்கு அடுத்தபடியாக எங்கள் நாட்டின் மிகவும் பிரபலமான நபராக மாறிவிட்டேன்.

கொல்கத்தா அணியுடனான எலிமினேட்டர் 2-வது ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக ஆடி வெற்றி கண்டோம். அந்த ஆட்டம் முடிந்து நான் சக வீரர்களுடன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன். அப்போது எனது நண்பர்கள் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் என்னைப் பற்றி புகழ்ந்து கூறியிருந்த ட்விட்டர் பக்கத்தை எனக்கு ஸ்கீரின்ஷாட் எடுத்து அனுப்பியிருந்தனர். அதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். நான் சச்சினுக்கு பதில் அனுப்புவதற்கு முன் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு என்ன எழுத வேண்டும் என்பதே தெரியவில்லை. இறுதியில் அவருக்கு பதில் அளித்தேன்.

ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானே அந்த ட்விட்டை பார்த்திருக்கும். ஆப்கானிஸ்தானில் சச்சின் டெண்டுல்கர் மிகவும் பிரபலமான ஆட்டக்காரர். என்னை அவர் வாழ்த்தியிருப்பது கண்டு ஒவ்வொருவரும் ஆச்சர்யம் அடைந்திருப்பார்கள். அவருடைய வாழ்த்து இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும்.

இந்தத ஐபிஎல் போட்டியில் நான் 21 விக்கெட்கள் வீழ்த்தினேன். அதில் 3 விக்கெட்கள் மிகவும் சிறப்புக்குரியவை. அவை விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், எம்.எஸ். தோனி ஆகியோரின் விக்கெட்களாகும். அந்த விக்கெட்களை எடுத்தபோது நான் மிகவும் திருப்தியடைந்தேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான் எடுத்த மிகச் சிறந்த விக்கெட்கள் அவை. அவர்கள் மிகவும் சிறந்த ஆட்டக்காரர்கள். அவர்களது விக்கெட்களை வீழ்த்தியது என்றென்றும் நினைவில் இருக்கும்.

எனக்கு எப்போதும் டி20 போட்டிகளில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். இந்தியாவுக்கு எதிராக முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் விளையாடவுள்ளது. இது எங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நாடுகளின் கனவாக இருக்கும். அந்தக் கனவு இப்போது நனவாகப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x