Published : 29 May 2018 06:20 AM
Last Updated : 29 May 2018 06:20 AM

அதிர்ஷ்டம் + திறமை = இத்தாலி

னிரெண்டாவது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை ஸ்பெயின், முன்னெப்போதும் பார்த்திராத வகையில் கோலாகலமாக நடத்தியது.

1982-ம் ஆண்டு நடந்த இந்த 12-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற அணிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 24 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் அல்ஜீரியா, கேமரூன், ஹோன்டுராஸ், குவைத், நியூசிலாந்து உள்ளிட்ட ஆசிய, ஆப்பிரிக்க அணிகள் உலகக் கோப்பையில் விளையாட முதல்முறையாக வாய்ப்பு கிடைத்தது. இதனால் அந்த நாட்டு கால்பந்து ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இத்தாலி களமிறங்கிய போது அந்த அணியுடன் சேர்ந்து அதிர்ஷ்டமும் களமிறங்கியதாக கால்பந்து விமர்சகர்கள் பின்னர் தெரிவித்தனர். அதிர்ஷ்டமும் திறமையும் ஒருங்கே இணைந்ததால் 3-முறையாக இத்தாலி உலக கோப்பையைத் தட்டிச் சென்று சாதனை படைத்தது.

அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. லீக் ஆட்டத்தில் ஒரு வெற்றியைக் கூட பெறாத இத்தாலி கோல் கணக்கின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றதை அதிர்ஷ்டம் என்று கூறாமல் வேறு என்னவென்று சொல்வது? உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெறாத ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இதுவே முதல்முறையாகும். லீக் ஆட்டத்தில் போலந்து, பெரு, கேமரூன் ஆகிய அணிகளுடனான போட்டியை இத்தாலி அணி டிரா மட்டுமே செய்தது.

இருந்தபோதும் கவலைப்படாமல் 2-வது சுற்றில் இத்தாலி வீரர்கள் உத்வேகத்துடன் களமிறங்கி கலக்கினர். இத்தாலியின் நட்சத்திர ஆட்டக்காரர் என்று கருதப்பட்ட பாலோ ரோஹி பிரேசில் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல்களை அடித்து அசத்தல் சாதனை புரிந்தார். இதனால் பிரேசிலை 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது. அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது. அதே உத்வேகத்துடன் அரையிறுதிக்கு முன்னேறி போலந்து அணியை வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

இறுதி ஆட்டம் 1982-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி சான்டியாகோ பெர்னாபு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 90 ஆயிரம் ரசிகர்கள் கண்டுகளித்த இறுதி ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனி – இத்தாலி அணிகள் மோதின. இதில் 3-1 என்ற கோல்கணக்கில் மேற்கு ஜெர்மனியை இத்தாலி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மேலும் 3-வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனையையும் படைத்தது.

மொத்தம் 7 ஆட்டங்களில் 12 கோல்களை மட்டுமே அடித்து இத்தாலி கோப்பையைக் கைப்பற்றி ரசிகர்களை வியப்புக் கடலில் மூழ்க வைத்தது. அந்த அணியின் பாலோ ரோஸி 6 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து தங்க கால்பந்து விருதை தட்டிச் சென்றார். இறுதி ஆட்டத்தில் இவர் ஒரு கோலடித்திருந்தார். இவர் 1980-ல் நடந்த போட்டியின்போது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சிக்கி 2 ஆண்டுகள் கால்பந்து விளையாட தடை விதிக்கப்பட்டார். 2 ஆண்டு தடை முடிந்த பின்னர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இடம்கிடைத்து விளையாடி சாதனையும் படைத்தார். இத்தாலி 3-வது முறையாக கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்தார். இத்தாலி கேப்டனும், கோல் கீப்பருமான டினோ ஜோப் அதிக வயதில் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றார். அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. இத்தாலி அணிக்காக உலகக் கோப்பையை வென்றபோது அவருக்கு வயது 40.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x