Published : 28 May 2018 04:42 PM
Last Updated : 28 May 2018 04:42 PM

தோனியின் ‘மின்னல் வேக ஸ்டெம்பிங்’ புதிய சாதனை:150-வது வெற்றி; ஒட்டுமொத்த சிக்ஸர்?

ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஸ்டெம்பிங்கிலும் சாதனை படைத்துள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்ஸனை ஸ்டெம்பிங் செய்து ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் தோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஏறக்குறைய 175ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, இதுவரை 33 மின்னல் வேக ஸ்டெம்பிங்குகளைச் செய்து பேட்ஸ்மேன்களை பெவிலியன் அனுப்பியுள்ளார்.( தோனியின் ஸ்டெம்பிங் வேகம் குறித்து ரசிகர்களுக்குத் தெரியும், பேட்ஸ்மேன் கிரீஸைவிட்டு வெளியே கால் ஒரு நொடி விலகினாலும் ஸ்டெம்பில் பைல்ஸ் இருக்காது)

இதன் மூலம் உத்தப்பாவின் 32 ஸ்டெம்பிங் சாதனையை தோனி முறியடித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 30 ஸ்டெம்பிங்குகளை செய்து 3-ம் இடத்தில் உள்ளார். விர்திமான் சாஹா 18 ஸ்டெம்பிங்குகள் செய்துள்ளார்.

அதேபோல டி 20 போட்டிகளில் அதிகமான கேட்சுகளைப் பிடித்தவகையில் தோனி மூன்றாம் இடத்தில் உள்ளார். தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா 94 கேட்சுகளையும் பிடித்து முதலிடத்தில் உள்ளனர். தோனி 83 கேட்சுகளைப் பிடித்து 3-வது இடத்திலும், ரோகித் சர்மா 79 கேட்சுகளைப் பிடித்து 4-ம் இடத்திலும் உள்ளனர்.

150-வது வெற்றி

dhoni2jpg100 

டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார். இதுவரை 255 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட தோனிக்கு, நேற்றைய சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிடைத்தது 150-வது வெற்றியாகும்.

தோனிக்கு அடுத்த இடத்தில் கம்பீர் உள்ளார். இதுவரை 170 போட்டிகளுக்கு கேப்டனாகச் செயல்பட்ட கம்பீர் 98 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்த சிக்ஸர்கள்

11-வது ஐபிஎல் சீசன் போட்டியில்தான் சிக்ஸரில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த முறை நடந்த ஐபிஎல் போட்டியில் 51 ஆட்டங்களில் 8 அணிகள் சார்பில் ஒட்டுமொத்தமாக 872 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 705 சிக்ஸர்கள் விளாசப்பட்ட நிலையில், அதைக் காட்டிலும் 167 சிக்ஸர்கள் அதிகமாகும். கடந்த 2012-ம் ஆண்டு அடிக்கப்பட்ட 731 சிக்ஸர்கள்தான் இதுவரை சாதனையாக இருந்தது. அது இந்த முறை முறியடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், முதலாம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் 622 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. ஆனால் அதைக் சிக்ஸர்களைக் காட்டிலும் இந்த முறை 250 சிக்ஸர்கள் கூடுதலாக அடிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x