Published : 28 May 2018 11:37 AM
Last Updated : 28 May 2018 11:37 AM

சிஎஸ்கே சாம்பியன்: வாட்ஸனுக்கு “புதுப்பெயர்” சூட்டி புகழ்ந்த தோனி

11-வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ள நிலையில், இறுதிஆட்டத்தில் பட்டையை கிளப்பிய ஷேன் வாட்ஸனுக்கு செல்லமாக “புதிய பெயர்” வைத்து கேப்டன் தோனி புகழாரம் சூட்டியுள்ளார்.

11-வது ஐபிஎல் சீசன் போட்டி கடந்த 50- நாட்களுக்கும் மேலாக நடந்தது. சூதாட்ட சர்ச்சை காரணமாக 2 ஆண்டுகள் தடைமுடிந்து, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இடம் பெற்று இருந்ததால், முன்னாள் சாம்பியனான சிஎஸ்கே இந்த முறை பட்டம் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதற்குஏற்றார்போல், லீக் ஆட்டங்களிலும், ப்ளே ஆப் சுற்றிலும் அற்புதமான ஆட்டங்களைவெளிப்படுத்திய சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பையில் நேற்று நடந்த இறுதிஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. 179 ரன்களைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாட்ஸனின் அபாராமான சதத்தால் 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இறுதி ஆட்டத்தில் தொடக்கத்தில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்ஸன், முதல் 10 பந்துகளைச் சந்தித்து ஒரு ரன்னை எடுத்தார், ஆனால், அடுத்த 41 பந்துகளில் காட்டடி அடித்து சதத்தை நிறைவு செய்தார். இவரின் மிரட்டலான பேட்டிங் சென்னை அணிக்கு எளிதான வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது.

ஷேன் வாட்ஸனின் ஆட்டத்த கேப்டன் தோனி நேற்று வெகுவாகப் புகழ்ந்தார். இன்ஸ்ட்ராகிராமில் கையில் வெற்றிக் கோப்பையையும், தனது மகள் ஜிவாவையும் ஏந்திக்கொண்டு தோனி தனது மனைவி சாக்ஸியுடன் புகைப்படத்தை வெளியிட்டார். அதில் வாட்ஸனுக்கு புதுப்பெயரை செல்லாகச் சூட்டியுள்ளார்.

தோனி அதில் குறிப்பிடுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி. மும்பை இன்று மஞ்சள்நிறத்தில் மாறி எங்களுக்கு ஆதரவு கொடுத்தமைக்கும் நன்றி. ஷேன் ”ஷாக்கிங்” வாட்ஸன் அனைவருக்கும் இன்பஅதிர்ச்சி தரக்கூடிய இன்னிங்ஸை விளையாடியிருக்கிறார். இந்த சீசன் மிக இனிமையாக முடிந்தது எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்ஸனுக்கு , ஷேன் ஷாக்கிங் வாட்ஸன் என தோனி சூட்டியுள்ளதை வாட்ஸனும் வரவேற்றுள்ளார். 15 போட்டிகளில் விளையாடிய வாட்ஸன் 2 சதம், 2 அரைசதம் உள்ளிட்ட 555 ரன்கள் சேர்த்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x