Published : 28 May 2018 10:44 AM
Last Updated : 28 May 2018 10:44 AM

சிஎஸ்கேயின் வெற்றியை உறுதி செய்த அந்த 3 ஓவர்கள்: வில்லியம்சன் தவறு?

ஐபிஎல் 2018 இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சனின் அதிரடி சதத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்களானாலும் இடையில் 3 ஓவர்களை கேன் வில்லியம்சன் கொஞ்சம் சரியாகத் திட்டமிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

வில்லியம்சனுக்கு பெரிய பின்னடைவு நேற்று சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா ஆகியோர் மோசமாக வீசியதே, மேலும் ஷாகிப் அல் ஹசனை சரியாகப் பயன்படுத்தவில்லை, வாட்சன் நன்றாக செட்டில் ஆகி பந்து கால்பந்து சைசுக்குத் தெரிய ஆரம்பித்த போது ஷாகிப் அல் ஹசனைக் கொண்டு வந்தார்.

சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் சன் ரைசர்ஸின் வெற்றிகளில் அபாரமாக வீசியவர்கள் ஆனால் நேற்று இருவரும் மோசமாக வீச, ஷேன் வாட்சனுக்கு அவருக்கு வாகான இடங்களில் வீசினர். இதனால் இருவரும் 7 ஓவர்களில் 95 ரன்கள் விளாசப்பட்டனர்.

7 ஓவர்களில் 95 ரன்களைக் கொடுக்கும் ஒரு சிறந்தப் பந்து வீச்சு அணி வெற்றி பெற வாய்ப்பேயில்லை, இலக்கு என்னவாக இருந்தாலும் இப்படி வீசுவது கொஞ்சம் தரநிலைக்குக் கீழான பந்து வீச்சுதான்.

ஆட்டத்தின் 11 ஓவர்கள் முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குத் தேவை 9 ஓவர்களில் 84 ரன்கள். அப்போது ரஷீத் கானுக்குத் தொடர்ந்து கொடுத்து நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்ற முயற்சி செய்திருக்க வேண்டும், ஆனால் அவர் ரஷீத் கானை பந்து வீச்சிலிருந்து அகற்றி விட்டு பிராத்வெய்ட், சந்தீப் சர்மா ஆகியோருக்கு 3 ஓவர்களை நடுவில் கொடுத்தார். 12வது ஓவரில் பிராத்வெய்ட் 9 ரன்களைக் கொடுத்தார், 13வது ஓவரில் சந்தீப் சர்மா ஹாட்ரிக் சிக்சர்களுடன் 2 பவுண்டரிகள் என்று 27 ரன்களைக் கொடுத்தார். மீண்டும் பிராத்வெய்ட்டிடமே 14வது ஓவரைக் கொடுக்க ரெய்னா விக்கெட்டை அவர் வீழ்த்தினாலும் அதே ஓவரில் வாட்சனுக்கு வாகாக 2 பந்துகளை வீச ஒன்றுபவுண்டரி ஒன்று சிக்ஸர்.

இந்த ஓவரில் 14 ரன்கள் வந்தது, ஆகமொத்தம் 12-14 ஓவர்களில் 50 ரன்களை சன் ரைசர்ஸ் கொடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்கு வெகு அருகில் வந்தது. ரஷீத் கானுக்கு 2 ஓவர்கள் மீதமிருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குத் தேவை பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்தில் மாறியது. டி20-யில் இந்த நிலைமையில் அதுவும் 8 விக்கெட்டுகள் மீதமிருக்கையில் எந்த அணியும் வெற்றி பெற முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x