Published : 28 May 2018 09:53 AM
Last Updated : 28 May 2018 09:53 AM

நெருக்கடித் தருணங்களை சிஎஸ்கே சிறப்பாகக் கையாண்டது: கேன் வில்லியம்சன் புகழாரம்

ஐபிஎல் 2018 கிரிக்கெட் எதிர்பார்த்தது போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்று கோப்பையை தோனி தூக்குவதுடன் கோலாகலமாக நிறைவடைந்தது.

சென்னைக்கு அழுத்தமான கணங்கள் இல்லை என்று கூற முடியாது, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றாலும் நெருக்கடி தருணங்கள் இருக்கவே செய்தன, ஆனால் அவற்றை அபாரமாக அந்த அணி கையாண்டு மீண்டது என்று சன் ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.

கேன் வில்லியம்சன் சிஎஸ்கேவைப் பாராட்டிக் கூறியதாவது:

இது இந்த ஆட்டத்தின் இயற்கை. சில வேளைகளில் எதிரணியினரின் நல்ல கிரிக்கெட்டை கைதட்டி வரவேற்க வேண்டியதுதான். சிஎஸ்கே பேட்டிங் அப்படிப்பட்ட ஒரு தருணமாகும்.

தனித்துவமான பேட்டிங், அவர்கள் வாய்ப்புகளையே வழங்கவில்லை. எங்கள் கைகளில் அடிப்பதை விட தூக்கி பவுண்டரிக்கு வெளியே அடித்தனர். 8 விக்கெட் வெற்றிதான், ஆனாலும் எங்களுக்கான வாய்ப்புகள் இருக்கவே செய்தன. அந்தத் தருணங்களில் ஆட்டத்தின் போக்கு விரைவில் மாறிவிடும்.

அந்தக் கணங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் இத்தகைய தருணங்களை சிஎஸ்கே சிறப்பாகக் கையாண்டதால் வெற்றி பெற்றது, இதற்காக அந்த அணியைப் பாராட்டவே வேண்டும். நெருக்கடியைப் புறந்தள்ளி பேட்டிங்கில் நிரூப்பித்தனர்.

பிட்ச் 180 ரன்களை சிறப்பாக தடுத்து விடும் என்றே நினைத்தோம். முதல் 6 ஓவர்கள் அவர்களால் அடிக்க முடியவில்லை, ஆனால் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆவது நின்ற உடன் ஷேன் வாட்சன் புகுந்தார். அவரை நிறுத்த முடியவில்லை.

இந்தத் தொடர் முழுதுமே நடுவில் 2 விக்கெட்டுகள் எதிரணியினரை நிலைகுலையச் செய்யுமாறு ஆடினோம், ஆனால் இந்தப் போட்டியில் அது நடக்கவில்லை, அதனால்தான் ஷேன் வாட்சன் பேட்டிங் பாராட்டுக்குரியது, அனுபவத்தைக் காட்டிவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இவ்வாறு கூறினார் கேன் வில்லியம்சன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x