Last Updated : 26 May, 2018 12:28 PM

 

Published : 26 May 2018 12:28 PM
Last Updated : 26 May 2018 12:28 PM

சன்ரைசர்ஸை பைனலுக்கு அழைத்துச் சென்ற ராஷித்கான்: தினேஷின் கடைசிநேர தடுமாற்றம் ஏன் ?

டிவில்லியர்ஸாக சில நிமிடங்கள் மாறிய ராஷித்கானின் காட்டடி பேட்டிங், திணறவைக்கும் துல்லியமான லெக் ஸ்பின், கூக்ளி வீச்சு, 2 அபாரமான கேட்சுகள், ஒரு ரன்அவுட் ஆகியவை சன்ரைசர்ஸ் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடந்த முக்கியத்துவம் வாய்ந்த ப்ளே-ஆஃப் 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 14 ரன்களில் தோற்கடித்து, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2-வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ஐபிஎல் சாம்பியனை இறுதி செய்யும் பைனலில் 7 முறை பைனலுக்கு வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் அணி.

சன்ரைசர்ஸ் அணி கடந்த 3 ஆண்டுகளில் 2-வது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தையும், கடந்த ஆண்டு ப்ளே-ஆஃப் சுற்றில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்து 4-வது இடம் பெற்றது. அந்த தோல்விக்கு இப்போது பழிதீர்த்துக்கொண்டது.

லீக் ஆட்டங்கள் அனைத்திலும் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்ட சன்ரைசர்ஸ் வீரர்கள் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் சொதப்பிவிட்டனர். குறிப்பாக விர்திமான் சாஹா பேட்டிங்கில் ஃபார்மிலேயே இல்லை, அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியதை என்ன வென்று சொல்வது?.

இந்த ஐபிஎல் தொடரில் கழித்துக்கட்ட வேண்டிய விக்கெட் கீப்பர் பட்டியலில் சாஹா வைத்திருக்கும் போது எந்த துணிச்சலில் அவரை களமிறக்கினார்கள் எனத் தெரியவில்லை.

லீக் ஆட்டங்களில் அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்னாக திகழ்ந்த வில்லியம்ஸன், குல்தீப்பின் கூக்ளிக்கு சட்டென இரையானது வேதனை. தவான், சஹிப் அல்ஹசன், தீபக் ஹூடா ஆகியோர் தங்களால் முடிந்த அளவுக்கு விக்கெட்டை நிலைப்படுத்தி ரன்களைச் சேர்த்தனர்.

சன்ரைசர்ஸ் அணியில் நடுவரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாக இருப்பது இந்த போட்டியில் பட்டவர்த்தனம் ஆகியுள்ளது. வில்லியம்ஸனுக்கு பின் நிலைத்து விளையாடக் கூடியவர்கள் எந்த வீரரும் இல்லை. வார்னர் இல்லாத குறையை வில்லியம்ஸன் போக்கினாலும், நடுவரிசையை ஸ்திரமான பேட்டிங் கொண்டதாக மாற்றுவது பைனலுக்கு கைகொடுக்கும்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விலைபோகாத வீரர் பட்டியலில் யூசுப் பதான் இடம் பெறுவதை இந்த சீஸனில் அவர் உறுதி செய்துவிட்டார்.பேட்டிங் மறந்துவிட்டதோ என்று கேட்கும் அளவுக்கு இந்த தொடரில் சொதப்பிவிட்டார்.

சன்ரைசர்ஸ் அணியில் ஆல்ரவுண்டராக ஒளிர்ந்தவர் ராஷித்கான் மட்டுமே. கடைசி நேரத்தில் களத்துக்கு தனது பேட்டிங்கில் அனல் பறக்கவிட்டார். அவரின் பேட்டிங்கின் அதிரடியில் டிவில்லியர்ஸின் சாயலும், பேட்டிங்கிஸ் ஸ்டைலில் சேவாக்கின் பிரதிபலிப்பும் இருந்ததைக் காண முடிந்தது.

10 பந்துகளில் ராஷித்கான் சேர்த்த 34 ரன்களே சன்ரைசர்ஸ் அணியை கடைசி நேரத்தில் கவுரவமான ஸ்கோர் வர காப்பாற்றியது. 2 பவுண்டரிகளும், 4 அபாரமான சிக்ஸர்களும் அடித்து அணியை கரைசேர்த்தார். இந்த 34 ரன்கள் மட்டும் சன்ரைசர்ஸ் அணி சேர்க்காமல் இருந்திருந்தால், இந்நேரம் கொல்கத்தாவிடம் வெற்றியைத் தாரைவார்த்துவிட்டு நடையை கட்டி இருக்க வேண்டியது இருக்கும்.

அதிலும் ராஷித்கான் கடைசி ஓவரின், கடைசிப் பந்தில் அடித்த சிக்ஸர் கடந்த 1979-ம் ஆண்டு உலகக்கோப்பை பைனலில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் விவியன் அடித்த சிக்ஸரா நினைவுபடுத்தியது.

பந்துவீச்சில் லீக் ஆட்டங்களில் இருந்து மிரட்டிவரும் ராஷித்கான் இந்த போட்டியிலும் அற்புதமாகச் செயல்பட்டார்.

குறிப்பாக இன்றைய போட்டியில் கிறிஸ் லின், உத்தப்பா, ரஸல் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். அதுமட்டுமல்லாமல் கடைசி ஓவரில் இரு அற்புதமான கேட்சுகளைப் பிடித்து ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தார் ராஷித்கான். ராணாவின் விக்கெட்டை துல்லியமான எறிதல் மூலம் ரன் அவுட் ஆக்கியது என ராஷித்கான் இந்த போட்டியில் ஹூரோவாக ஜொலித்தார்.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள், பைனலில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு ராஷித்கானின் பந்துவீச்சு சிம்மசொப்னமாக இருக்கும். வலிமையான பேட்ஸ்மன்கள் ராஷித்திடம் வீழ்வது உறுதி. அடுத்த மாதம் இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அணியில் இடம் பெறும் ராஷித்கான், இந்திய அணிக்கும் அவரின் லெக்ஸ்பின் பெரும் குடைச்சலைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மிகக்குறைந்த வயதில் வேர்ல்டு கிளாஸ் பந்துவீச்சாளராக ராஷித்கான் மிளிர்வது அற்புதமானதாகும். இந்தப் போட்டியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ராஷித்கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த முறை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் தனது பணியை சிறப்பாகச் செய்து இருக்கிறார். தனது அணியை முதல் முயற்சியிலேயே ப்ளே-ஆஃப் சுற்றுவரை அழைத்துவந்துள்ளது பாராட்டுக்குரியது.

லீக் ஆட்டங்களில் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த தினேஷ் கார்த்திக் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் சிறிது சாதுர்யமாக செயல்பட்டு இருந்தால், அணி இறுதிப்போட்டிக்குச் சென்று இருக்கும்.

கார்த்திக் கடைசி நேரத்தில் கேப்டன்ஷிப்பில் இப்படி சொதப்புவார் என எதிர்பார்க்கவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் எந்தவிதமான அனுபவமும் இல்லாத வேகப்பந்துவீச்சாள பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறாகும். அதிலும் கடைசி ஓவரில் பந்துவீசச் செய்து ரன்களை வாரிக் கொடுக்க வைத்துவிட்டார். (உஷ் கண்டுகாதீங்க தருணத்தை நினைவுபடுத்துகிறது)

கொல்கத்தா மைதானத்தில் 2-வதாக பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் காற்றின் ஈரப்பதம் காரணமாக நன்றாக பந்தை ஸ்விங் செய்யவும், சுழலவும் வைக்க முடியும், பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். அப்படி இருக்கும், போது டாஸ்வென்ற கார்த்தி ஏன் 2-வது பேட்டிங்கை தேர்வு செய்தார் எனத் தெரியவில்லை.

அனுபவம் மிகுந்த ரஸலுக்கு ஒரு ஓவர் மட்டுமே தரப்பட்டது, பியூஸ் சாவ்லாவுக்கு 3 ஓவர்கள் மட்டுமே தரப்பட்டு இருந்தது. இவர்களுக்கு தலா ஒரு ஓவர் கூடுதலாக வழங்கி இருந்தால், ஓரளவுக்கு ரன்களை கட்டுப்படுத்தி இருக்கலாம். (இந்த கேள்விகளும் உஷ் கண்டுகாதீங்க தருணத்தை நினைவு படுத்துகிறது) சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக ஆடுகளம் ஒத்துழைக்கும் போது, பியூஸ் சாவ்லாவுக்கு கூடுதலாக ஒரு ஓவர் கொடுத்திருக்கலாமே.

பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்கள் வீசி 56ரன்கள் வாரிவழங்கி வள்ளலாகி மாறிவிட்டார். இதில் 3 வைடுகள் வேறு வீசி இருக்கிறார் அதையும் சேர்த்தால் மொத்தம் 59 ரன்களாகும்.

கொல்கத்தா அணியின் தோல்விக்கு, நடுவரிசையில் பேட்டிங் சொதப்பியது என்றால், பெரும்பகுதி காரணம் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சுதான் என்பதில் சந்தேகமில்லை. இவரின் கடைசி ஓவரில் மட்டும் 20 ரன்கள் வீணாக்கப்படாமல் இருந்தால், போட்டியின் முடிவு தலைகீழாக மாறி இருக்கும்.

மற்றவகையில் பிரசித் கிருஷ்ணாவைத் தவிர பியூஸ் சாவ்லா, சுனில் நரேன், குல்தீப் ஆகிய சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே பந்துவீசினார்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் தினேஷ் கார்த்திக், உத்தப்பா, ரஸல் ஆகியோர் நிலைத்து விளையாடாதது இன்றைய தோல்விக்கு முக்கியக்காரணமாகும். அனேகமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து ரஸலை கைகழுவிவிட்டாலும் வியப்பில்லை. இவரும் விலைபோகாத வீரர்கள் பட்டியலில் சேர தயாராகிவிட்டார்.

தொடக்கத்தில் விர்திமான் சாஹாவுக்கு தினேஷ் கார்த்திக் ஒரு கேட்சை கோட்டைவிட்டதும், அவரை நிலைத்துவிளையாட வைக்க துணை சென்றுவிட்டது.

கார்த்திக் இந்த போட்டியில் செய்த மிகப்பெரிய தவறு பிரசித்கிருஷ்ணாவை கடைசியில் பந்துவீசச் செய்ததுதான். மற்றவகையில் கிறிஸ் லின், சுனில் நரேன் இந்த தொடர் முழுவதும் தங்களுக்குரிய பணியைச் சிறப்பாகவே செய்து இருக்கிறார்கள்.

இந்த தோல்வி மூலம் தொடர்ந்து 3-வது ஆண்டாக ப்ளே-ஆஃப் சுற்றோடு கொல்கத்தா அணி வெளியேறியது. கடந்தஆண்டும், இந்த ஆண்டும் 3-வது இடத்தையும், 2016-ம்ஆண்டில் 4-வது இடத்தையும் கேகேஆர் அணி பிடித்து இருக்கிறது.

டாஸ்வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.

சாஹா, ஷிகர்தவான் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். இருவரும், கொல்கத்தா வீரர்களின் பந்துவீச்சு தொடக்கத்தில் இருந்தே திணறி பந்தைத் தடவினார்கள். மவி வீசிய 3-வது விர்திமான் சாஹாவுக்கு தினேஷ் கார்த்திக் ஒரு கேட்சை தவறாகக் கணித்து கோட்டை விட்டார். இந்த கேட்ச் பிடித்திருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்.

ஒரு சிக்ஸர் 4 பவுண்டரிகள் அடித்த தவான் 34 ரன்களில் குல்தீப் பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 45 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

அதைத் தொடர்ந்து வந்த வில்லியம்ஸனும், 3 ரன்களில் குல்தீப்பின் அதே ஓவரில் கூக்ளி பந்துவீச்சுக்கு இரையாகி வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு வந்த சஹிப்அல்ஹசன், சாஹாவுடன் இணைந்து விளையாடினார். பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத சாஹா ரன் சேர்க்க சிரமப்பட்டார். இருந்தும் அவ்வப்போது சில பவுண்டரிகள் சாத்தினார்.

11-வது ஓவரில் சாவ்லா ஓவரில் சாஹா 35 ரன்கள் சேர்த்திருந்த போது தினேஷ் கார்த்திக் ஸ்டெம்பிங்கால் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹுடா 19 ரன்கள், சஹிப் அல்ஹசன் 28 ரன்களிலும்ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யூசுப் பதான் 3 , பிராத்வெய்ட் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் 17.5 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து திணறியது சன்ரசைர்ஸ் அணி. ஆனால், 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ராஷித் கான் தனக்கு கிடைத்த பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கும் சிக்ஸர்களுக்கும் பறக்கவிட்டார். இவரின் ஒவ்வொரு ஷாட்டும் டீவில்லியல்ஸையும், சேவாக்கையும் நினைவுபடுத்தியது.

மவி வீசிய 19-வது ஓவரில் ராஷித்கான் இரு சிக்ஸர்களையும், பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து மிரளவைத்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ராஷித் கான் 10 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும், புவனேஷ்குமார் 5 ரன்கள் சேர்த்தார்.

கொல்கத்தா தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், சாவ்லா, நரேன், மவி தலாஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கொல்கத்தா அணியின் நரேன், லின் களமிறங்கினார்கள். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக பேட் செய்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். அகமது வீசிய 2-வது ஓவரில் லின் ஒரு சிக்ஸரும், நரேன் பவுண்டரியும் விளாசினர். புவனேஷ்குமார் வீசிய 3-வது ஓவரில் நரேன் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார்.

4-வது ஓவரை வீச கவுல் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 2-வது பந்தில் நரேன் 26 ரன்கள் சேர்த்திருந்தநிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ராணா, அதிரடியாக இரு சிக்ஸர்களை ராணாவின் 5-வது ஓவரில் விளாசினார்.

6-வது ஓவரில் இருந்து ராஷித்கான் பந்துவீச அழைக்கப்பட்டவுன் கொல்கத்தாவின் ரன்வேகம் மட்டுப்பட்டது. ஆனால் அவ்வப்போது கிடைக்கும் சந்தர்பங்களில் லின் பவுண்டரிகளையும், சிக்ஸர்களும் அடித்தார்.

நிதானமாக பேட் செய்த ராணா 22 ரன்களில் ராஷித்கானால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த உத்தப்பா 2 ரன்னில் ராஷித்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து கேப்டன் தினேஷ் கார்த்திக் 8 ரன்களில் சஹிப் அல்ஹசன் பந்துவீச்சில் வெளியேறினார்.

கடைசி வரிசையில் களமிறங்கிய ரஸல் 3 ரன்னில் ராஷித்திடம் விக்கெட்டை பறிகொடுத்தார். பியூஸ் சாவ்லா 12 ரன்னிலும், சிவம் மகி 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தனி ஆளாகப் போராடிய சுப்மான் கில் 20 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இவர் வெளியேறியவுடன் கொல்கத்தாவின் தோல்வி உறுதியானது.

குல்தீப் யாதவ், கிருஷ்ணா ரன் ஏதும் சேர்க்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். சன்ரைசர்ஸ் அணித் தரப்பில் ராஷித்கான் 3 விக்கெட்டுகளையும், கவுல், பிராத்வெய்ட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x