Last Updated : 26 May, 2018 08:17 AM

 

Published : 26 May 2018 08:17 AM
Last Updated : 26 May 2018 08:17 AM

வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடிப்பாரா நெய்மர்?

குதி சுற்று போட்டியின் தொடக்கத்தில் பிரேசில் அணியின் பயிற்சியாளராக துங்கா பணியாற்றினார். அந்த சமயத்தில் பிரேசில் அணி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தாததால் 6-வது இடத்தில் இருந்ததுடன் ரஷ்ய உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதும் கேள்விக்குறியானது. ஆனால் புதிய பயிற்சியாளர் டைட் பொறுப்பேற்றுதும் நிலைமை முற்றிலும் மாறியது. வீரர்கள் இழந்த பார்மை மீட்டெடுத்தனர். எதிரணிக்கு அச்சமூட்டும் ஆட்டத்தை பிரேசில் வெளிப்படுத்த தகுதி சுற்று ஆட்டங்களில் வெற்றிகள் குவியத் தொடங்கின. ரஷ்ய உலகக் கோப்பை தொடருக்கு முதல் அணியாக தகுதி பெற்றது பிரேசில்தான். தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடையிலான தகுதி சுற்றில் பிரேசில் அணியே முதலிடம் வகித்தது.

பலம்

2014 உலகக் கோப்பையில் கற்றுக்கொண்ட மோசமான பாடத்தால் இம்முறை பிரேசில் அணி தனிப்பட்ட வீரரின் திறனை சார்ந்திருக்காமல் முழு வீச்சில் தயாராகி உள்ளது. நட்சத்திர வீரரும் கேப்டனுமான நெய்மர் தற்போதும் அந்த அணியின் துருப்பு சீட்டாகவே உள்ளார். எனினும் அவரை மட்டுமே இம்முறை பிரதானமாக நம்பியிருக்காதது பலமாக கருதப்படுகிறது. அதாவது தனிநபர் ஆட்டத்தின் பின்னலுக்குள் இருந்து பிரேசில் அணி தன்னை விடுவித்துக்கொண்டுள்ளது. இந்த மாற்றம் டைட் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னரே சாத்தியமாகி உள்ளது. புதிய பயிற்சியாளர், புதிய அணுகுமுறை ஆகியவற்றால் நெய்மர் முன்பை விட சுதந்திரமாக செயல்பட வழிவகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அணி முழுமையான வடிவமும் அடைந்துள்ளது.

உலகக் கோப்பைக்கான அணியில் அனைவரும் அறிந்த முகங்களான தானி ஆல்வ்ஸ், மார்செலோ ஆகியோருடன் புதிய முகங்களான காஸ்மிரோ, கபேரியல் ஆல்வ்ஸ் மற்றும் ஐரோப்பிய தொடர்களில் அசத்தி வரும் பிலிப் கவுடின்கோ, வில்லியன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த அணிக்கு எந்த இடத்தில் பதுங்க வேண்டும், எந்த இடத்தில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ள வேண்டும், பந்துகளை எப்படி எதிரணியின் ஊடாக கடத்த வேண்டும் என்பது அத்துப்படிதான். எல்லாவற்றுக்கும் மேலாக ஐஸ்கீரிம் மீது வைக்கப்படும் செர்ரி பழம் போன்று நெய்மரும் பலம் சேர்க்கிறார்.

பலவீனம்

முக்கியமான 3 விஷயங்கள் பிரேசில் அணிக்கு பின்னடைவை கொடுக்கக்கூடும். முதல் விஷயம் தந்திரோபாயத்தை சார்ந்தது. தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறன் கொண்ட தானி ஆல்வ்ஸ், மார்செலோ ஆகியோர் முன்களத்தில் விளையாடினால் சிறப்பு திறன்களை வெளிப்படுத்துவது அவசியம். அதேவேளையில் இவரது இடங்கள் எதிரணியினரின் ஆய்வுக்கு உட்படாமல் இருக்க வேண்டும். 2-வது விஷயம் அனுபவம். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் போதிய அனுபவத்தை கொண்டவர்கள் இல்லை. டைட் பயிற்சியின் கீழ் பிரேசில் வீரர்கள் உயர்மட்ட அணிகளுக்கு எதிராக சில சோதனைகளை நடத்தி உள்ளனர். எந்த எந்த அளவுக்கு உலகக் கோப்பையில் கை கொடுக்கும் என்பது தெரியவில்லை.

3-வது விஷயம் நெய்மரின் உடல் தகுதி. காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நெய்மர் கடந்த பிப்ரவரி 26 முதல் எந்தவித ஆட்டங்களிலும் விளையாடவில்லை. தற்போது குணமடைந்துள்ள அவர், உடற் தகுதி பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறார். எனினும் மீண்டும் ஒரு முறை பிரேசில் அணி அவரை மட்டுமே நம்பியிருத்தல் கூடாது. ஆனால் நட்சத்திர வீரரான அவர் இல்லாமல் தொடக்க சுற்றுகளில் விளையாடுவது என்பது அந்த அணிக்கு சற்று கவலையை கொடுக்கக்கூடும்.

நட்சத்திர வீரர்

அனைவரது பார்வையும் இம்முறையும் நெய்மர் மீதே இருக்கக்கூடும். 2010-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பிரேசில் அணிக்காக நெய்மர் அறிமுகமானார். அந்தத் தொடரில் பிரேசில் அணி கால் இறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது. இதன் பின்னர் 2014 உலகக் கோப்பையில் கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது நெய்மர் காயம் அடைந்தார். இதனால் அவர், அரை இறுதியில் ஜெர்மனிக்கு எதிராக களமிறங்கவில்லை. விளைவு இந்த ஆட்டத்தில் பிரேசில் 1-7 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது.

அதில் இருந்து 2 வருடங்களில் ரியோ ஒலிம்பிக்கில் பிரேசில் அணிக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்தார் நெய்மர். இதன் பின்னர் தொழில் முறை போட்டிகளில் பார்சிலோனா கிளப் அணியில் லயோனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரெஸ் ஆகியோருடன் இணைந்து தனது திறனை மேலும் மெருகேற்றினார் நெய்மர்.

இதன் விளைவாக கடந்த 2017-ல் அவரை பெரும் தொகைக்கு வளைத்து போட்டது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி. இதற்கிடையே உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களிலும் நெய்மர் அபார திறனை வெளிப்படுத்தினார். 6 கோல்கள் அடித்த அவர், 8 கோல்கள் அடிக்க உதவியும் செய்தார்.

முழு உடல் தகுதியை எட்டாத நெய்மர் , ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் விளையாடுவாரா என்பதில் இன்னும் சந்தேகம் நிலவுகிறது. கடந்த பிப்ரவரி முதல் கால்பந்து களத்தை சந்திக்காத அவர், எப்படி மீண்டு வரப்போகிறார் என்பது தெரியவில்லை. எல்லோரும் நெய்மரின் ஆட்டத்தை காண காத்திருக்கின்றனர். ஏன் அவரும் கூடத்தான். சமீபத்திய பேட்டி ஒன்றில் நெய்மர், “எனது நாட்டுக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுக்க மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது குழந்தைப் பருவம் முதல் நான் பெற்றிருக்கும் கனவு இது. இம்முறை எனது கோப்பை என்று நம்புகிறேன்” என்றார். அவரது கனவு மெய்ப்படுமா, வரலாற்று பக்கங்களில் பீலே, ரொனால்டோ ஆகியோரது வரிசையில் இடம் பெறுவாரா என்பது கால்களின் திருவிழா (ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடர்) தொடங்கியதும் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x