Published : 25 May 2018 04:22 PM
Last Updated : 25 May 2018 04:22 PM

ஐபிஎல் இறுதிப்போட்டி ‘பிக்ஸ்’ செய்யப்பட்டதா?- ரசிகர்களின் கோபத்தால், பரபரப்புக்குக் காரணமான வீடியோ நீக்கம்

 

11-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க இருக்கும் நிலையில், அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் எந்த அணி மோதப்போகிறது என்பது யாருக்கும் தெரியாத நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதப்போகிறது என்ற விளம்பர வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால், ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் மீண்டும் நுழைந்துவிட்டதா? என்ற சந்தேகத்தில் பேஸ்புக், ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றுவிட்டது. இறுதிப்போட்டியில் பங்கேற்கும் 2-வது அணியை தேர்வு செய்யும் 2-வது ப்ளேஆஃப் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் அணி மோதப்போகிறதா அல்லது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதப்போகிறதா என்பது யாருக்கும் தெரியாது.

இன்று நடக்கும் போட்டியின் முடிவு அடிப்படையில் அதாவது, எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பிவரும் ஹாட் ஸ்டார் தளத்தில் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதப்போகிறது என்ற முன்னோட்ட விளம்பரம் வெளியானது.

தோனி தலைமையிலான வீரர்களுக்கும், தினேஷ் காரத்திக் தலைமையிலான வீரர்களுக்கும் இடையே போட்டி நடக்கப்போகிறது என்பதை குறிக்கும் வகையில் வீரர்களை வைத்து விளம்பரம் இருந்தது.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும் அணி குறித்து முடிவு தெரியாத தெரியாத நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் மோதும் என்று முன்கூட்டியே விளம்பரம் எப்படிச் செய்ய முடியும். அப்படியென்றால் போட்டியின் முடிவு முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதா?, பிக்ஸிங் செய்யப்பட்டதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த வீடியோ ரசிகர்கள் சிலர் பதிவிறக்கம் செய்து, பேஸ்புக், ட்விட்டரில் பதிவேற்றம் செய்து, தங்களின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். ஐபிஎல் என்றாலே பிக்ஸிங் செய்யப்பட்டதுதானா?, கேகேஆர், சிஎஸ்கே அணிக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால், இந்த அணிகள்தான் பைனலுக்கு வரும் என்றும், கேகேஆர் அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டுவர பிசிசிஐ உதவி செய்யும், தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ளும் உத்தி எனக் கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

இதற்கிடையே, இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுவது போன்று வெளியான விளம்பரம் குறித்து ரசிகர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து அந்த விளம்பரம் ஹாட்ஸ்டார் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

மேலும், இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணியுடன் சன்ரைசர்ஸ் அணி மோதுவது போன்ற விளம்பரமும் இருந்தது. அதுவும் நீக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x