Last Updated : 25 May, 2018 07:26 AM

 

Published : 25 May 2018 07:26 AM
Last Updated : 25 May 2018 07:26 AM

எகிப்தின் நம்பிக்கை நாயகன் முகமது சாலா

கேப்டன்: எஸாம் எல் ஹாடர்ரி

பயிற்சியாளர்: ஹெக்டர் கப்பர்

ஃபிபா தரவரிசை: 46

இதுவரை

எகிப்து அணி 14 முறை போராடி 3 முறை மட்டுமே உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. முதன்முறையாக 1934-ல் தகுதி பெற்றது. கடைசியாக 1990-ல் விளையாடியிருந்தது. இருமுறையும் முதல் சுற்றை கடக்கவில்லை.

தகுதி பெற்ற விதம்

2017-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் காங்கோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை தொடரில் கால்பதித்துள்ளது எகிப்து. இந்த ஆட்டத்தில் வெற்றிக்கான இரு கோல்களையும் இளம் நட்சத்திரமான முகமது சாலா அடித்திருந்தார். அதிலும் இன்ஜுரி நேரத்தில் 94-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை 12 அடி தூரத்தில் இருந்து உதைத்த சாலா எகிப்து விளையாட்டு வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கத் தவறவில்லை.

உலகக் கோப்பை தகுதி சுற்று 3-வது கட்ட ஆட்டங்களில் 5 கோல்கள் அடித்து அசத்திய சாலா எகிப்தின் மெஸ்ஸி என்ற வருணிக்கப்படுகிறார். அவரது அபாரமான ஆட்டத்தின் காரணமாக ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து முதல் அணியாக எகிப்து, ரஷ்யா உலகக் கோப்பைக்குள் நுழைந்தது. தகுதி சுற்றில் எகிப்து அணி அடித்த கோல்களில் 71 சதவீதம் முகமது சாலாவின் உதையில் இருந்தே வந்தது. அதிலும் தகுதி சுற்றின் 3-வது கட்டத்தில் ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் கோல் அடிக்க தவறவில்லை.

முகமது சாலா

தொழில்முறை கால்பந்து போட்டிகளில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வரும் 25 வயதான முகமது சாலா பிரிமீயர் லீக் தொடரில் இந்த சீசனில் 36 ஆட்டங்களில் 32 கோல்கள் அடித்து மிரளச் செய்துள்ளார். இதற்கு முன்னர் ஆலன் ஷீரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் அடித்த 31 கோல்களே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தகர்த்துள்ள முகமது சாலா ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் 51 ஆட்டங்களில் லிவர்பூல் அணிக்காக 44 கோல்கள் அடித்துள்ளார். இவற்றுடன் தேசிய அணிக்காக முகமது சாலா 57 ஆட்டங்களில் 33 கோல்கள் அடித்து பலம் சேர்த்துள்ளார்.

பிரிமீயர் லீக் சீசனில் தனது அபார பார்மால் இந்த ஆண்டின் சிறந்த வீரர் விருதை சாலா பெற்றுள்ளார். ஆப்பிரிக்க நாட்டில் இருந்து இந்த விருதை பெறும் 2-வது வீரர் சாலா ஆவார். இதற்கு முன்னர் அல்ஜீரியாவின் நடுகள வீரரான ரியாத் மஹ்ரெஜ் கடந்த 2016-ம் ஆண்டு இந்த விருதை வென்றிருந்தார்.

பிரிமீயர் லீக் தொடரின் பார்மை முகமது சாலா ரஷ்ய உலகக் கோப்பைக்கும் வியாபிக்க செய்தால் எதிரணிகளுக்கு சிக்கல்தான். எகிப்து அணி ரஷ்ய உலகக் கோப்பையில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் போட்டியை நடத்தும் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா, உருகுவே அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் உருகுவே மட்டுமே பலம் வாய்ந்த அணி. இதனால் இம்முறை எகிப்து அணி எப்படியும் முதல் சுற்றை கடந்து சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் அனைவரது பார்வையும் முகமது சாலா மீதுதான் இருக்கக்கூடும். இதில் எந்தவித ஆச்சர்யத்துக்கும் இடமிருக்காது. பிரிமீயர் லீக் தொடரில் சாலாவை போன்று திறனை வெளிப்படுத்திய ஆப்பிரிக்க வீரர்கள் பலர் வரலாற்று பக்கங்களில் இருந்திருக்கவில்லை. பிரிமீயர் லீக் தொடரானது சாலாவுக்கு ஆண்டின் சிறந்த விருதான பாலோன் டி’ ஆர் விருதை கூட பெற்றுத்தரக்கூடும் என்ற கருத்துகளும் உலாவத் தொடங்கி உள்ளன.

லிவர்பூல் அணி போன்று எகிப்து தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறனை கொண்டது கிடையாததுதான். ஆனால் தேசிய அணிக்காக விளையாடும் போது கூடுதல் பொறுப்புணர்வுடன் சாலாவிடம் இருந்து மேம்பட்ட திறன் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சுற்றை எகிப்து எளிதில் கடந்தாலும் அடுத்த சுற்றில் போர்ச்சுக்கல் அல்லது ஸ்பெயின் போன்ற வலுவான அணிகளை சந்திக்க நேரிடும். எனினும் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தாலே எகிப்து அணிக்கு அது சாதனைதான்.

தளராத நம்பிக்கை

எகிப்து அணியின் பயிற்சியார் ஹெக்டர் கப்பர் கூறும்போது, “லிவர்பூல் அணிக்காக அற்புதமாக விளையாடி வரும் முகமது சாலா அதே திறனை ரஷ்ய உலகக் கோப்பையில் தேசிய அணிக்காக வெளிப்படுத்துவார் என நாங்கள் நம்புகிறோம். உலகக் கோப்பை தொடர் கடினமாகவே இருக்கும். ஆனாலும் நாங்கள் தளராத நம்பிக்கையுடன் உள்ளோம்” என்றார்.

பயிற்சி ஆட்டங்கள்

எகிப்து நாளை குவைத் அணியுடன் நட்புரீதியிலான ஆட்டத்தில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 1-ல் கொலம்பியாவுடன் விளையாடும் எகிப்து அதன் பின்னர் ஜூன் 6-ல் ரஷ்யா புறப்பட்டு செல்கிறது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அங்கு 3 பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கிறது. எகிப்து அணி பங்கேற்ற கடைசி இரு நட்புரீதியிலான ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x