Published : 23 May 2018 03:52 PM
Last Updated : 23 May 2018 03:52 PM

நிறைய வீடியோ பதிவுகளைப் பார்த்தும் அவரை ஆட முடியவில்லை: ரஷீத் கான் பற்றி டுபிளெசிஸ்

140 ரன்கள் வெற்றி இலக்கை ஏதோ 400 ரன் இலக்கு போல் சன் ரைசர்ஸ் ரஷீத் கான், கவுல், புவனேஷ்வர் குமார் மூலம் முட்டுக்கட்டை போட கடைசியில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிசின் அனுபவம் மற்றும் திறமையினால் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் அவர் கூறியதாவது:

நான் அதிகம் ஆடவில்லை என்ற நிலையில் பங்களிப்பு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. நேற்று நான் என்னுடைய பழைய ஆட்டங்கள நினைவுபடுத்திக் கொண்டேன். அதிலிருந்து மனரீதியாக நம்பிக்கையைப் பெற்றேன். நான் ஓய்வறைக்குள் நுழைந்து “எப்படிப்பா ஜெயிச்சோம்?” என்று சகவீரர்களிடம் கேட்டேன்.

சில வேளைகளில் ஆட்டம் தொட முடியாத இடத்துக்குச் சென்று விடும். ஆனால் நிற்க வேண்டும். ஷர்துல் தாக்கூர் வந்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் (அதிர்ஷ்டகர எட்ஜ் பவுண்டரிகள்), ரஷீத் கான் உண்மையில் பெரிய பவுலர். அவர் பந்துகளை உண்மையில் கணிக்க முடியவில்லை. அதனால்தான் அவர் ஓவர் முடியட்டும் என்று காத்திருந்தோம்.

ரஷீத் கான் உலகின் தலைசிறந்த லெக் ஸ்பின்னர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எதிரணியினருக்கு கடும் சவால்களை அளிப்பார் என்று இப்போதே தெரிகிறது. அவர் தன் சொந்தத் திறமையிலேயே போட்டிகளை வென்று கொடுப்பார். அதனால்தான் அவர் பவுலிங்கை மரியாதை கொடுத்து ஆடவேண்டும். நிறைய வீடியோ பதிவுகளைப் பார்த்தும் அவரை ஆட முடியவில்லை, என்றார் டுபிளெசிஸ்.

ரஷீத் கான் அவரது ஓவரை முடிக்கும் போது சிஎஸ்கே 93/7, பிறகு சித்தார்த் கவுல் சிக்கனமாக வீச கடைசி 3 ஓவர்களில் 43 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது புவனேஷ்வர் குமாரை வீச அழைக்காமல் ஷார்ட் பிட்ச், புல்பிட்ச் கிங் பிராத்வெய்ட்டை அழைத்தார் கேன் வில்லியம்சன், அப்போது டுபிளெசிக்குள் உறங்கிய சிங்கம் எழுந்து உறுமியது அந்த ஓவரில் 20 ரன்கள் விளாசப்பட்டதால் போட்டி மாறியது.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸில் டுபிளெசிஸ் கூறும்போது, “பிராத்வெய்ட்டுக்கு எதிராக அனைத்து ரிஸ்குகளையும் நானே எடுக்க முடிவெடுத்தேன். அவரது வேகப்பந்தும், ஸ்லோ பந்தும் ஒன்றே போன்றதுதான். அதனால் இந்த ஓவரை இலக்கு வைத்தோம்.

ரஷீத் கான் எங்களைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்த போது ஷாகிப் அல் ஹசன் வந்தார், அவர் பந்துகள் திரும்பவில்லை உடனே அவர் ஓவரில் 12-15 ரன்களை எடுப்போம் என்று முடிவெடுத்தோம்.

தோனி அணியின் பெரியண்ணா போன்றவர். களத்தில் தோழமை உணர்வுடன் ஆடுகிறோம், அதற்காக தோனிக்கு நன்றி” என்றார் டுபிளெசிஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x