Published : 23 May 2018 12:15 AM
Last Updated : 23 May 2018 12:15 AM

‘கிரேட் எஸ்கேப்’: கதிகலக்கிய சன் ரைசர்ஸ்; டுபிளெசிஸ் சூப்பர் பேட்டிங்கில் ஐபிஎல் இறுதியில் சிஎஸ்கே

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியிம் பரபரப்பான இறுதிக் கட்டத்தில் உறுதியாக நின்ற டுபிளெசிஸ் புவனேஷ்குமாரை நேராக அடித்த அபாரமான சிக்சரினால் சன் ரைசர்ஸை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் கிரேட் எஸ்கேப் ஆகி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு 7வது முறையாக நுழைகிறது ‘பிராண்ட்’ சிஎஸ்கே. விரட்டலில் ஒருநேரத்தில் 62/6 என்று உதிர்ந்து கொண்டிருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

டாஸ் வென்ற தோனி முதலில் ஹைதராபாத்தை பேட் செய்ய அழைத்தார். அந்த அணியை சென்னை தன் சூப்பர் பவுலிங்கினால் 139/7 என்று மட்டுப்படுத்தியது. ஆனாலும் குறைந்த ரன் இலக்குகளை திறம்பட தடுத்துப் பழக்கப்பட்ட சன் ரைசர்ஸ் அணி இந்தப் போட்டியிலும் ரஷீத் கானின் அற்புதமான பவுலிங், கவுலின் தொடக்க 2 விக்கெட்டுகளினால் தோனிபடையின் வயிற்றை கலக்கினர். கலங்கிப்போனது என்னவோ உண்மைதான். ஏனெனில் ஐபிஎல்-ன் மிகப்பெரிய பிராண்ட் சிஎஸ்கே மற்றும் தோனி ஆவார்கள், ஆகவே இன்னொரு வாய்ப்பிருந்தாலும் பிளே ஆபில் முதல் தோல்வி பிராண்ட் இமேஜுக்கு ஏற்படும் அடியாக மாறியிருக்கும், ஆனால் டுபிளெசிஸ் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 42 பந்துகளில் 67 ரன்கள் விளாச அவருக்கு உதவியாக முதலில் ரெய்னா (22), கடைசியில் சாஹர் 10 ரன்கள், தாக்கூர் 15 (5 பந்து) முக்கிய பங்களிப்புகளினால் 19.1 ஓவர்களில் 140/8 என்று வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

முன்னதாக சாஹருக்கு பிராத்வெய்ட் பிடித்த கேட்ச் சந்தேகமானது, அதனை களநடுவர் அவுட் என்றார், ஆனால் அவர் கேட்சை கிளீனாக எடுக்கவில்லை, தரையில் பட்டது போல்தான் இருந்தது, களநடுவர் அவுட் என்று கூறினாலும் 3வது நடுவருக்கு அனுப்பினார். டிவி நடுவர் ரீப்ளேக்களைப் போட்டுப்பார்த்தும் முடிவாக ஒன்றும் புரிபடவில்லை, ஆனால் களநடுவர் அவுட் என்றதால் சாஹர் 10 ரன்கள் என்ற முக்கியப் பங்களிப்புடன் வெளியேற வேண்டியதாயிற்று.

அதே போல் டுபிளெசிஸ் முக்கியக் கட்டத்தில் ரஷீத் கான் பந்தில் கால்காப்பில் வாங்கினார், முழங்கால் மட்டத்தில்தான் பந்து பட்டது. களநடுவர் எல்.பி.என்று தீர்ப்பளித்தார். இங்கு அம்பயர்ஸ் கால் எல்லாம் கிடையாது போலும். டுபிளெசிஸ் ரிவியூ கேட்டார், ஆனால் ரீப்ளேயில் பந்து லெக் ஸ்டம்பை மிஸ் செய்தது தெரியவந்தது, பிழைத்தார் டுபிளெசிஸ், பிழைத்தது சென்னை சூப்பர் கிங்ஸும்தான். ரஷீத் கான் தன் 4 ஓவர்கள் ஸ்பெல்லில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து தோனி, பிராவோ விக்கெட்டுகளை ‘சீப்’ ஆக வீழ்த்தி சன் ரைசர்ஸ் அணியைப் போட்டிக்குள் கொண்டு வந்தார், மேலும் கடைசியில் பவுண்டரி போகும் பந்தை அபாரமாகத் தடுத்து ரன்னர் முனைக்கு ஒரு வலுவான த்ரோவை அடிக்க ஹர்பஜன் சிங் ரன் அவுட் ஆனார், இப்படியாக முக்கியத் தருணங்களிலெல்லாம் ரஷீத் கான் தன் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

சென்னை பேட்டிங்கும் சொதப்பலாகி மீண்ட கதை:

பந்துகள் ஸ்விங் ஆக புவனேஷ் வீசிய முதல் இரண்டு பந்துகளிலும் வாட்சன் பீட் ஆனார். ஒன்று லேட் அவுட் ஸ்விங், இன்னொன்று இன்ஸ்விங், இன்சைடு எட்ஜில் தப்பினார். ஆனால் இதே ஓவரில் ஒரு பந்து டெஸ்ட் கிளாஸ் பந்தாக அமைய உள்ளே வந்து வெளியே ஸ்விங் ஆக வாட்சன் எட்ஜ் தப்பவில்லை, வெளியேறினார்.

அதன் பிறகு ரெய்னாவுக்கு எல்லா டீம்களும் போடுவது போல் அவருக்கு சில இலவச பவுண்டரிகளை சந்தீப் சர்மா வழங்கினார், 3 பவுண்டரிகளை தொடர்ச்சியாக அடித்து சென்னைக்கு ஒரு உத்வேகத்தை அளித்தார் ரெய்னா. 4வது ஓவரில்தான் சித்தார்த் கவுல் சென்னையைக் கவிழ்த்தார்.

கவுல் ஷார்ட் பிட்ச்தான் வீசுவார் என்று நினைத்து ஆஃப் ஸ்டம்புக்குக் குதித்தார் ரெய்னா. லெக் அண்ட் மிடில் நன்றாகத் தெரிந்தது பவுல்டு ஆனார். ஆனால் 22 முக்கிய ரன்களை அவர் எடுத்தார். அடுத்த பந்தே சென்னை சூப்பர் கிங்சின் சூப்பர் பேட்ஸ்மென் ராயுடு மீண்டுமொரு முறை தன்னால் நல்ல தரமான பந்து வீச்சை சரியாக ஆட முடியாது என்பதை நிரூபித்தார், பந்து உள்ளே டிப் ஆனது அதாவது தாமதமாக ஸ்விங் ஆகி யார்க்கர் லெந்த் ஆகி பவுல்டு ஆனது, ராயுடு பந்து உள்ளே வருமா வெளியே செல்லுமா என்பதை ஒரு விநாடியில் முடிவெடுக்க வேண்டும், ஆனால் பந்து அதற்குள் முடிவெடுத்தது, தனக்கு ஸ்டம்புதான் வேண்டுமென்று, டக் அவுட் ஆனார். ஹாட்ரிக் பந்தை தோனி மிட் ஆஃப்க்கு அடித்தார். குமார் 3 ஓவர்களில் 8 ரன்கள் கொடுக்க சிஎஸ்கே 5 ஓவர்களில் 25/3 என்று இருந்தது.

தோனி பொறுமை காத்தார், அவராலும் அடிக்க முடியவில்லை, 8 பந்துகள் பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தார். கடைசியில் கவுல் ஷார்ட் பிட்ச் பந்தை நீட்டாக புல்ஷாட் பவுண்டரி அடித்தார்.

ரஷீத் கான் வீசிய கூக்ளியில் தோனி பவுல்டு:

rashidjpg100 

தோனி 18 பந்துகளில் 9 ரன்கள் என்று ஆடிக் கொண்டிருந்த போது 8வது ஓவரில் ரஷீத் கான் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் செய்து கூக்ளியாக்கினார் பந்து சுருக்கென்று உள்ளே வந்தது. தோனி காலை ஓரளவுக்கு முன்னால் நீட்டியும் பந்தை ரீச் செய்ய முடியவில்லை, அவரது பேட்டுக்கும் கால்காப்புக்கும் இடையே காண்டா மிருகம் செல்லும் இடைவெளி ரஷீத் கான் பந்து செல்லாதா என்ன? அருமையான பந்தில் பவுல்டு ஆனார். ஒன்று ஒரு ஸ்டெப் இறங்கி வந்து ஆடியிருக்க வேண்டும், இல்லையெனில் பின்னால் சென்று ஆடியிருந்தால் ஒருவேளை தப்பியிருக்க வாய்ப்புண்டு. டுபிளெசிஸ் ஒரு சிக்ஸ் அடித்து நிலைமையைச் சரிகட்டினார்.

பிராவோ இறங்கினார் அவரும் தோனி போல்தான் 11 பந்துகளில் 7 ரன்கள், அப்போது ரஷீத் கானுக்கு ஒரு ஸ்லிப் வைத்து மிரட்டினார் வில்லியம்சன், பந்து திரும்பி எழும்பியது பிராவோ ஸ்லிப்பில் தவனிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். ஜடேஜா, சந்தீப் சர்மா வீசிய வேகம் குறைக்கப்பட்ட பந்தை கொஞ்சம் முன்னதாகவே மட்டையால் தடுத்தாட கொண்டு வந்தார் பந்து மட்டையில் பட்டு பவுலரிடமே கேட்ச் ஆனது. 62/6.

பார்த்தார் டுபிளேசிஸ் சரிப்பட்டு வராது என்று பலவீனமான பவுலரான ஷாகிப் அல்ஹ்சனை லெக் திசையில் 2 இழுப்பு இழுத்தார் ஒன்று பவுண்டரி, மற்றொன்று சிக்ஸ். கடந்த போட்டியின் பிஞ்ச் ஹிட் நாயகன் சாஹர், சந்தீப் சர்மாவின் மெதுவான பந்தை மிட்விக்கெட்டில் அருமையாக சிக்ஸ் அடித்து அசத்தினார். இவர் 10 ரன்களில் இருந்த போதுதான் நடுவரின் சந்தேகத்துக்கிடமான தீர்ப்பினால் பிராத்வெய்ட்டின் சர்ச்சைக்குரிய கேட்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

30 பந்துகளில் 48 ரன்கள் தேவை. ஹர்பஜன் சிங் இறங்கி தடவு தடவென்று தடவினார் ரஷீத் கான் வீசியதும் அவருக்குப் புரியவில்லை, கவுல் வீசிய ஓவரிலும் அவர் மட்டையிலிருந்து வெறும் காத்துதான் வந்தது.

அப்போதுதான் பிராத்வெய்ட் மோசமாக 18வது ஓவரை வீச டுபிளெசிஸ் முதலில் ஓவர் பிட்ச் பந்தை கவரில் பவுண்டரி விளாசினார். அடுத்தும் ஓவர் பிட்ச் இம்முறை மிட்விக்கெட்டில் சிக்ஸ், டுபிளெசிஸின் அருமையான அரைசதம் நிறைவு. அடுத்து வேகமாக வீச வேண்டிய பந்தை வேகம் குறைத்து வீச மிட்விக்கெட்டில் பவுண்டரி பறந்தது. அப்போதுதான் அதே ஓவரில் ஹர்பஜன் சிங் 2 ரன்களில் ரஷீத் கானின் மிக அருமையான பீல்டிங் மற்றும் த்ரோவுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார், அவர் அவுட் ஆன பிறகும் டுபிளெசிஸ் பிராத்வெய்ட்டை ஒரு பவுண்டரி அடிக்க 20 ரன்கள் அந்த ஓவரில் வந்தது, சிஎஸ்கே 117/8 என்ற இக்கட்டான நிலையில் ஷர்துல் தாக்கூர் இறங்கினார்.

அதிர்ஷ்ட பவுண்டரிகள்:

அடுத்த ஓவரை சித்தார்த் கவுல் வீச தாழ்வான புல்டாஸ் எட்ஜ் ஆகி தேர்ட்மேனில் பவுண்டரி ஆனது, அடுத்த பந்து பீட் ஆகியிருந்தால் பவுல்டு, ஆனால் மட்டையின் உள்விளிம்பில் பட்டு சைனீஸ் கட் ஷாட்டில் பைன்லெக்கில் இன்னொரு பவுண்டரி போனது. பயங்கர அதிர்ஷ்டம். இதே ஓவர் கடைசி பந்தில் மிக அருமையாக நேராக தூக்கி பவுண்டரி அடித்தார் தாக்கூர். 134/8 என்று கடைசி 6 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்று வந்த போது புவனேஷ்வர் குமார் பந்தை டுபிளெசிஸ் அருமையாகத் தூக்கி அடித்து வெற்றி பெறச் செய்தார்.

லுங்கி இங்கிடி அசத்தல்: பிராத்வெய்ட் அதிரடியில் 139 ரன்கள் எடுத்த சன் ரைசர்ஸ்:

ஷிகர் தவண் முதல் பந்திலேயே உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். சாஹர் மீண்டுமொருமுறை அற்புதமான ஸ்விங் பவுலிங்கை வெளிப்படுத்தினார். ஆனால் அதே ஓவரில் கேன் வில்லியம்சன் 3 பவுண்டரிகளை விளாசினார்.

எஸ்.பி.கோஸ்வாமிக்கு தோனி ஒரு ரன் அவுட் வாய்ப்பைத் தவற விட்டாலும் அவர் லெக் திசையில் ஒதுங்கி ஒதுங்கி ஆடியது கை கொடுக்கவில்லை 12 ரன்களில் லுங்கி இங்கிடி பந்தில் இப்படி ஒதுங்கி ஆடினார் இங்கிடி பந்து அவரைத் துரத்தியது. இங்கிடியிடமே கேட்ச் ஆனார்.

15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த வில்லியம்சன், தாக்குர் வீசிய லெக் திசை ஷார்ட் பிட்ச் பந்தை புல் செய்ய நினைத்து லெக் திசையில் எட்ஜ் செய்தார் தோனிக்கு நேரடியான கேட்ச். ஷாகிப் அல் ஹசனுக்கு சாஹர் ஒரு பந்தை வீச வழுக்கியது போல் தெரிந்தது, ஹசன் மண்டைக்கு மேல் லெக் திசையில் சென்றது அது வைடு, நோபால் என்று எதுவேண்டுமானாலும் கொடுத்திருக்கலாம் ஆனால் எராஸ்மஸ் அதிர்ச்சியூட்டும் விதமாக டெட் பால் என்றார். ஷாகிப் அல் ஹசனும் 12 ரன்களில் பிராவோவின் லெக் சைடு பந்தில் தோனியிடம் கேட்ச் ஆனார். வில்லியம்சன், ஷாகிப் இருவருமே தேவையில்லாமல் லெக் திசையில் தோனியிடம் அவுட் ஆகினர்.

5வது ஓவர் 3வது பந்தில் பவுண்டரி வந்ததோடு சரி. யூசுப் பத்தான், மணீஷ் பாண்டே என்ற ஹிட்டர்கள் இருந்தும். 44 பந்துகளுக்கு பவுண்டரியே வரவில்லை. இதில் ஜடேஜா 3 ஓவர்கள் வீசி 8 ரன்களுக்கு பாண்டேயைக் காலி செய்தார், பாண்டே 16 பந்துகளில் 8 ரன்கள் என்று சொதப்பி ஜடேஜாவிடம் வெளியேறினார். 13வது ஓவர் வரை சன் ரைசர்ஸின் ரன் ரேட் 6 ரன்களுக்குக் கீழ்தான். 75/5. பவுண்டரி வறட்சியை யூசுப் பத்தான் தாக்கூரை பவுண்டரி அடித்து தீர்த்து வைத்தார். கடைசியில் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களில் பத்தான், பிராவோ பந்தில் அவரது அற்புதமான டைவிங் கேட்சுக்கு வெளியேறினார்.

18வது ஓவர் தொடங்கும் போது 15 பந்துகளில் 8 என்று இருந்த பிராத்வெய்ட், தாக்கூரை 2 அரக்க சிக்சர்கள் அடித்தார். இங்கிடி தன் 4வது ஓவரை, சிஎஸ்கேயின் 19 வது ஓவரை சிக்கனமாக வீச் 4 ரன்கள்தான் கொடுத்தார், 20வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீச பிராத்வெய்ட் 2 பெரிய சிக்சர்கள் ஒரு பவுண்டரியுடன் 20 ரன்கள் சேர்த்தார், இதனால் 139/7 என்று முடிந்தது சன்ரைசர்ஸ். பிராத்வெய்ட் 29 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் நாட் அவுட்.

ஆனால் டுபிளெசிஸின் உறுதியான இன்னிங்ஸ், கொஞ்சம் அதிர்ஷ்டம் ஷர்துல் தாக்கூரின் இரண்டு மகா அதிர்ஷ்ட பவுண்டரிகள் ஆகியவற்றினால் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரேட் எஸ்கேப் ஆனது. ஆட்ட நாயகன் டுபிளெசிஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x