Published : 22 May 2018 07:58 AM
Last Updated : 22 May 2018 07:58 AM

இறுதி சுற்றில் கால் பதிக்கும் முனைப்பில் சிஎஸ்கே: தகுதி சுற்று 1-ல் ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் தகுதி சுற்று 1-ல் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

லீக் ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா 18 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும் ரன்ரேட் விகிதத்தில் ஹைதராபாத் (+0.284) அணி முதலிடமும், சென்னை அணி (+0.253) 2-வது இடமும் பிடித்தன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 27-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். மாறாக தோல்வி அடையும் அணிக்கு மற் றொரு வாய்ப்பு கிடைக்கும். அதா வது தோல்வியை சந்திக்கும் அணி 25-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் விளையாடும். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் லீக் ஆட்டங்களில் இருமுறை ஹைதராபாத் அணியை வென்றிருப்பது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியின் உத்வேகத்தை இன்றைய ஆட்டத்துக்கும் வியாபிக்க செய்வதில் சென்னை அணி வீரர்கள் தீவிரம் காட்டக்கூடும். நேற்றுமுன்தினம் புனேவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் சுற்று கனவை தகர்த்த நிலையிலேயே சென்னை அணி பிளே ஆஃப் சுற்றை சந்திக்கிறது.

அதேவேளையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற பின்னர் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று களமிறங்குகிறது. சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு எதிரான இந்த மூன்று ஆட்டங்களிலும் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு கடும் சிதைவுக்குள்ளானது.

அதிலும் ஹைதராபாத் அணியின் தொடர்ச்சியான 6 வெற்றிகளுக்கு சென்னை அணி முட்டுக்கட்டை போட்ட பின்னரே மற்ற அணிகளும் ஹைதராபாத்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தின.

ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனை மட்டுமே ஒட்டுமொத்தமாக சார்ந்துள்ளது. இந்த சீசனில் அதீத பார்மில் இருக்கும் அவர், 661 ரன்கள் வேட்டையாடி உள்ளார். அவருக்கு உறுதுணையாக விளையாடி வரும் ஷிகர் தவண் 437 ரன்கள் எடுத்துள்ள போதிலும் அவரிடம் இருந்து சீரான ஆட்டம் வெளிப்படுவதில்லை. நடுகள பேட்டிங்கையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஹைதராபாத் அணி. அதிலும் முக்கியமாக மணீஷ் பாண்டே கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, ரஷித் கான், ஷகிப் அல் ஹசன் ஆகியோரை உள்ளடக்கிய பந்து வீச்சு குழுவுக்கு சென்னை அணியின் தொடக்க வீரரான அம்பாட்டி ராயுடு சவால் அளிக்கக்கூடும். ஏனெனில் கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிராக மோதிய ஆட்டத்தில் ராயுடு சதம் விளாசியிருந்தார்.

மேலும் தொடரின் முதற்பகுதியில் நடைபெற்ற ஆட்டத்தில் 79 ரன்கள் விளாசி மிரளச் செய்திருந்தார். இந்த சீசனில் 586 ரன்கள் குவித்துள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

சென்னை அணியின் பேட்டிங் தனிப்பட்ட ஒரு வீரரை மட்டும் சார்ந்திருக்காமல் இருப்பது பலமாக கருதப்படுகிறது. 446 ரன்கள் விளாசியுள்ள தோனி, 438 ரன்கள் குவித்துள்ள ஷேன் வாட்சன் ஆகியோருடன் 391 ரன்கள் குவித்து கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ள சுரேஷ் ரெய்னாவும் பலம் சேர்ப்பவராக உள்ளார். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னதாக பின்கள வீரர்களின் பேட்டிங் திறனையும் தோனி, பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சோதித்து பார்த்துள்ளது சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது. அந்த ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் 19 ரன்களும், தீபக் ஷகார் 39 ரன்களும் சேர்த்து அசத்தினர்.

பந்து வீச்சில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்களுக்கு 4 விக்கெட்களை சாய்த்த லுங்கி நிகிடி, இளம் வீரரான தீபக் ஷகார் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். இந்த ஜோடிக்கு ஷர்துல் தாக்குர், டுவைன் பிராவோ ஆகியோரும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். நடுகள ஓவர்களில் ஹர்பஜன், ஜடேஜாவும் தங்களது அனுபவத்தை சிறப்பாக பயன்படுத்தும் பட்சத்தில் அணியின் பந்து வீச்சு மேலும் வலுப்பெறும்.

மகளிர் டி 20 காட்சி போட்டி

பிளே ஆஃப் சுற்றையொட்டி இன்று பிற்பகல் 2 மணி அளவில் மும்பை வான்கடே மைதானத்தில் ட்ரெய்ல்பிளேசர் - சூப்பர் நோவா ஆகிய அணிகள் பங்கேற்கும் மகளிர் டி 20 காட்சி போட்டி நடைபெறுகிறது. இந்த இரு அணியிலும் இந்தியா மற்றும் வெளிநாட்டு அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x