Published : 21 May 2018 09:00 PM
Last Updated : 21 May 2018 09:00 PM

ஐபிஎல் போட்டியில் கோடிகளில் வாங்கப்பட்டு ‘சொதப்பிய’ 11 வெளிநாட்டு வீரர்கள்

11-வது ஐபிஎல் சீசனில் பல்வேறு அணிகளில் இடம் பெற்ற வெளிநாட்டு வீரர்களில் 11 பேர் பேட்டிங், பந்துவீச்சில் சொதப்பி பிளாஃப் ஆகியுள்ளனர்.

ஐபிஎல் போட்டித் தொடர் வியாபார நோக்கத்துடன், கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பாதிக்கத் தொடங்கப்பட்டதாக பல்வேறு தரப்பினர் கூறினாலும், உள்நாட்டு இளைஞர்கள் திறமையை நிரூபிக்க அது மிகச்சிறந்த மேடை அமைத்துக் கொடுத்தது. அதேபோல வெளிநாட்டு அணிகளில் இருந்தும் வீரர்கள் பலர் இடம் பெற்று தங்களின் திறமையை மெருகேற்றி வருகின்றனர்.

சில நேரங்களில் அணிகள் ஏலத்தில் புகழ்பெற்ற, அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்களை எடுத்தால் வெற்றி எளிதாகக் கிடைக்கும் என்ற நினைப்பில் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து நட்சத்திர வீரர்களை அணி நிர்வாகங்கள் ஏலத்தில் எடுக்கின்றன. ஆனால், அனைத்து நேரங்களிலும் அவர்கள் சிறப்பாகச் செயல்படுவதில்லை என்பதை ஒவ்வொரு தொடரிலும் அவர்கள் நிரூபித்து வருகின்றனர்.

அந்த வகையிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த 11 பிளாஃப் வீரர்களை வைத்து ஒரு புதிய அணியே உருவாக்கிவிடலாம் என்ற அளவுக்கு மோசான பேட்டிங்கையும், பந்துவீச்சையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் அவர்கள் குறித்த விவரம்.

ஆர்கி ஷார்ட்(ஆஸி.)

short1jpgஆர்கி ஷார்ட்(ஆஸி.)50 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான ஷார்ட் அங்கு நடந்த பிக் பாஷ் டி20 தொடரில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார். ஹோபர்ட் ஹரிக்கன்ஸ் அணியில் இடம் பெற்று 572 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் இவரை ரூ.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியது. ஆனால், 7 போட்டிகளில் பங்கேற்ற ஷார்ட் இதுவரை 115 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்துள்ளார்.

காலின் முன்ரோ(நியூசி.)

munrojpgமுன்ரோ(நியூசி.)50 

நியூசிலாந்து வீரரான காலின் முன்ரோ சிறந்த தொடக்க ஆட்டக்காரர். இவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.1.90 கோடிக்கு விலைக்கு வாங்கியது. டி20 பேட்ஸ்மேன் தர வரிசையில் 2-ம் இடத்தில் காலின் முன்ரோ இருப்பதால் மிகப்பெரிய பலமாக அணிக்கு இருப்பார் என்று டெல்லி அணி நினைத்தது. ஆனால், ஒரு போட்டியில் கூட முன்ரோ சோபிக்கவில்லை. 5 போட்டிகளில் களமிறங்கிய முன்ரோ 63 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதில் அதிகபட்சம் 33 ரன்களாகும்.

பிரண்டன் மெக்கலம்(நியூசி)

Brendon-McCullum-1jpgமெக்கலம்(நியூசி)50 

நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர். கடந்த ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடியான சதம், அரை சதங்களால் வெற்றியை எளிதாக்கிக் கொடுத்தவர். கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த மெக்கலம் இந்த முறை ஐபிஎல் போட்டியில் பெரிய ஏமாற்றத்தை அளித்தார். பெங்களூரு அணியில் விராட் கோலி, டீகாக், மெக்கலம், டிவில்லியர்ஸ் எனச் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் அந்த அணியால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி முடியவில்லை.

மிகச்சிறந்த மேட்ச் வின்னரான மெக்கலம் 6 போட்டிகளில் களமிறங்கி 127 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதில் அதிபட்சம் 43 ரன்களாகும்.

மேக்ஸ்வெல்(ஆஸி.)

glen-maxwelljpgமேக்ஸவெல்(ஆஸி.வீரர்)50 

ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் மேக்ஸ்வெல். ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெலின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமும் தலைகீழானது. சர்வதேச ஆல்ரவுண்டர் வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் மேக்ஸ்வெலை ரூ.9 கோடிக்கு விலைக்கு வாங்கியது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. ஆனால் ஒரு போட்டியில் கூட மேக்ஸ்வெல் மேட்ச் வின்னராக அணிக்குத் திகழவில்லை என்பது வேதனையாகும். 12 போட்டிகளில் களமிறங்கிய மேக்ஸ்வெல் 169 ரன்கள் சேர்த்தார். சராசரியாக 14 ரன்களும், அதிகபட்சமாக 49 ரன்களாகும்.

ஆரோன் பிஞ்ச்(ஆஸி.)

ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.6.2 கோடிக்கு ஏலத்தில் ஆரோன் பிஞ்சை ஏலத்தில் எடுத்தது. பேட்டிங்கில் எந்த வரிசையிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர் என்பதால், முதல் இரு போட்டிகளிலும் தொடக்க வீரராக பிஞ்ச் களமிறக்கப்பட்டு, டக்அவுட்சில் தலைதெறிக்க ஓடினார். அதன்பின் நடுவரிசையில் களமிறக்கப்பட்டும் ஆரோன் பிஞ்ச் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை

இந்தத் தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய பிஞ்ச் 134 ரன்கள் சேர்த்தார். அதிகபட்சமாக 46 ரன்களும், சராசரியாக 16 ரன்களும் சேர்த்திருந்தார்.

பென் ஸ்டோக்ஸ்(இங்கிலாந்து)

இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் ஏலத்தில் அதிகமான தொகையான ரூ.12.50 கோடிக்கு எடுக்கப்பட்ட வீரர் ஆவார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இடம் பெற்று இருந்த பென் ஸ்டோக்ஸ் ஒரு போட்டியில் கூட பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் முத்திரை பதிக்கவில்லை. 13 போட்டிகளில் களமிறங்கி பென் ஸ்டோக்ஸ் 136 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

இவரின் ஒவ்வொரு ரன்னுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொடுத்த விலை ரூ.6.38 லட்சமாகும். 13 போட்டிகளில் 29 ஓவர்கள் பந்துவீசி 8 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார் பென் ஸ்டோக்ஸ். இவரின் ஓவர் எக்கானமி ரேட் 9 ரன்களாகும். பேட்டிங்கிலும் சராசரி 16 ரன்களாகும். பென் ஸ்டோக்ஸின் சொதப்பல் ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

கோரி ஆன்டர்ஸன்(நியூசி.)

corryjpgகோரி ஆன்டர்ஸன்(நியூசி வீரர்)50 

நியூசிலாந்து ஆல்ரவுண்டரான கோரி ஆன்டர்ஸன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று இருந்தார். ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாமல் ஆன்டர்ஸன் இருந்தார். இங்கிலாந்து வீரர் ஆன்டர்ஸன் காயம் காரணமாக விளையாட முடியாத காரணத்தால் மாற்றுவீரராக ஆன்டர்ஸன் தேர்வு செய்யப்பட்டார்.

கோரி ஆன்டர்ஸனின் மோசமான பாஃர்மைப் பார்த்து நியூசிலாந்து அணியே கழித்துக்கட்டி வைத்தது. ஆனால்,அது தெரியாமல் நன்றாக விளையாடுவார் என நம்பி ஆன்டர்ஸனை எடுத்த பெங்களூரு அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 3 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்ற ஆன்டர்ஸன் 17 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 3 விக்கெட் வீழ்த்தினார்.

கெய்ரன் பொலார்ட்(மே.இ.தீவுகள்)

pollardjpgகெய்ரன் பொலார்ட்(மே.இ.தீவுகள்)50 

மேற்கிந்தியத்தீவுகள் வீரரான கெய்ரன் பொலார்ட் சிறந்த ஆல்ரவுண்டர். பொலார்டின் திடீர் அதிரடி பேட்டிங், விக்கெட் வீழ்த்தும் திறமை ஆகியவற்றுக்காக மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் இவரைத் தக்கவைத்தது. கடந்த சில ஐபிஎல் சீஸன்களாக சொதப்பி வந்த பொலார்டை இந்த முறை மும்பை அணி கழற்றிவிட்டு இருக்க வேண்டும்

ஆனால், தக்கவைத்ததற்கு நல்ல தண்டனை கிடைத்தது. இந்த ஐபிஎல் சீசனில் கேப்டன் ரோகித் சர்மா பலமுறை பொலார்டுக்கு வாய்ப்பு கொடுத்தும் பேட்டிங்கில் சொதப்பினார். இதனால், 7 போட்டிகளோடு பொலார்டை கழற்றிவிட்டனர். இந்தத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய பொலார்ட் 76 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

கிறிஸ் வோக்ஸ்(இங்கிலாந்து)

kohli-rcb-spc-380jpgகேப்டன் விராட் கோலியுடன் பென் ஸ்டோக்ஸ்(இங்கி)50 

இங்கிலாந்து ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ் இந்த முறை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். பெங்களூரு அணி ஏலத்தில் ரூ.7.60 கோடிக்கு வோக்ஸை ஏலத்தில் எடுத்தது.

கடந்த ஆண்டில் கொல்கத்தா அணியில் இடம்பெற்ற வோக்ஸ் 13 போட்டிகளில் 17 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதனால், நம்பி எடுத்த வோக்ஸை எடுத்த பெங்களூரு அணி மோசம் போனது. 5 போட்டிகளில் பங்கேற்ற வோக்ஸ் 17 ரன்கள் சேர்த்தால், 8 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றினார்.

மிட்ஷெல் ஜான்ஸன்(ஆஸி.)

mitchell-johnson-jpgமிட்ஷெல் ஜான்சன்50 

ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் மிட்ஷெல் ஜான்ஸன் பந்துவீச்சில் அனல் பறக்கும். அத்தகைய சிறந்த பந்துவீச்சாளர் இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று கண்டுகொள்ளப்படவில்லை. கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சுக்கு மிகப்பெரிய பலமாக இருப்பார் ஜான்ஸன் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால், 10 போட்டிகளில் பந்துவீசிய ஜான்ஸன் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். சராசரியா ஓவருக்கு 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இம்ரான் தாஹிர் (தெ.ஆப்பிரிக்கா)

தென் ஆப்பிரிக்காவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.ஒரு கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால், தொடக்கத்தில் ஒரு சில போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய தாஹிர் அதன்பின் சொதப்பினார். இதனால் சிஸ்கே அணி இம்ரானை ஓரம் கட்டியது. 6 போட்டிகளில் விளையாடிய இம்ரான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x