Published : 21 May 2018 07:56 AM
Last Updated : 21 May 2018 07:56 AM

பிரேசில் கனவை கலைத்த உருகுவே

இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவில்லை. போர் முடிந்து சகஜ நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து 1950-ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு வழங்கப்பட்டது. உலகக் கோப்பையின் முதல் சாம்பியனான உருகுவே ஐரோப்பாவில் நடைபெற்ற இரு உலகக் கோப்பை போட்டிகளை புறக்கணித்த நிலையில், தென் அமெரிக்க கண்டத்துக்கு மீண்டும் உலகக் கோப்பை வந்ததைத் தொடர்ந்து மீண்டும் பங்கேற்றது.

போட்டிக்கான டிரா இறுதி செய்யப்பட்ட பிறகு சில அணிகள் விலகின. அதில் இந்தியாவும் ஒன்று. இந்திய வீரர்கள் ஷூ அணியாமல் வெறும் காலோடு விளையாட சர்வதேச கால்பந்து சம்மேளனம் அனுமதி மறுத்ததால், இந்தியா போட்டியிலிருந்து விலகியது. இந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற அணிகள் தலா 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இறுதிச்சுற்றில் 4 அணிகளும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என்றும் அதில் அதிக புள்ளிகள் பெறும் அணியே சாம்பியனாகும் என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் உருகுவே, ஸ்வீடன், பிரேசில், ஸ்பெயின் ஆகிய அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. பிரேசில் மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டி சாம்பியனை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது. பிரேசில் டிரா செய்தாலே உலகக் கோப்பையை வென்றுவிடலாம் என்ற நிலை ஏற்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில், 2-வது பாதி ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே பிரேசிலின் பிரைகா கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

66-வது நிமிடத்தில் ஜுவான் ஆல்பர்ட்டோ ஷியாபினோ அடித்த கோலால் ஸ்கோரை சமன் செய்தது உருகுவே. 11 நிமிடங்கள் எஞ்சிய நிலையில் மேலும் ஒரு கோலை போட்டு 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது. வெற்றிக்கான இந்த கோலை ஜிகியா அடித்திருந்தார். இந்த உலகக் கோப்பையில் உருகுவே பட்டம் வென்றதில் ஜுவான் ஆல்பர்ட்டோ ஷியாபினோ முக்கிய பங்குவகித்தார். முன்கள வீரரான அவர் இந்தத் தொடரில் 5 கோல்கள் அடித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x