Published : 20 May 2018 08:58 AM
Last Updated : 20 May 2018 08:58 AM

பிளே ஆஃப் சுற்றில் நுழைவது யார்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பஞ்சாப் இன்று மோதல்; மற்றொரு ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரில் இன்று இரவு புனேவில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி தொடரின் முதல் பகுதியில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்த நிலையில் பிற்பாதியில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. அந்த அணி 13 ஆட்டங்களில் 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

-0.490 ரன்ரேட்டை கொண்டு உள்ள பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுனால் சென்னை அணிக்கு எதிராக மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ஒரே ஒரு சாதகமான விஷயம் என்னவென்றால் மற்ற அணிகள் தங்களது லீக் ஆட்டங்களை நிறைவு செய்த பின்னரே தனது இறுதி லீக் ஆட்டத்தை விளையாடுகிறது.

இதனால் எத்தனை ஓவர்களில் இலக்கை அடைய வேண்டும் அல்லது எத்தனை ஓவர்களில் எதிரணியை மடக்க வேண்டும் என்பதில் பஞ்சாப் அணிக்கு தெளிவு கிடைத்துவிடும். இந்த சீசனில் பஞ்சாப் அணி ஒருங்கிணைந்த குழுவாக செயல்படத் தவறியது. 652 ரன்கள் குவித்துள்ள கே.எல்.ராகுல் மட்டுமே பேட்டிங்கில் தொடர்ச்சியாக சீரரான திறனை வெளிப்படுத்தி வருகிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் எவருமே தங்களது திறனுக்கேற்ப சீரான திறனை வெளிப்படுத்தவில்லை.

மும்பை அணிக்கு எதிராக கடைசி கட்டத்தில் 3 ரன்களில் வெற்றி வாய்ப்பை பஞ்சாப் அணி தவறவிட்டிருந்தது. சீசனின் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்திய கிறிஸ் கெயிலிடம் இருந்து பிற்பாதி தொடரில் வெற்றிக்கான பங்களிப்பு தொடரவில்லை. ஆரோன் பின்ச், கருண் நாயர், மார்கஸ் ஸ்டாயினிஸ், மயங்க் அகர்வால், யுவராஜ் சிங் ஆகியோர் அணிக்கு தேவையான நேரங்களில் பங்களிப்பு செய்யாதது பெரிய பின்னடைவாக உள்ளது.

இதேபோல் பந்து வீச்சில் 24 விக்கெட்களை கைப்பற்றியுள்ள ஆன்ட்ரூ டை மட்டுமே பலம் சேர்த்து வருகிறார். பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்க வேண்டுமானால் அஸ்வின் தலைமையிலான அணி அனைத்து துறைகளிலும் மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள சென்னை அணி கடைசி லீக் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கவனம் செலுத்தக்கூடும். டெல்லி அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. ஏறக்குறைய தோனி 4 ஓவர்களை சந்தித்த போதிலும் வெற்றிக்கான பங்களிப்பை வழங்கத் தவறினார். மேலும் கடைசி 10 ஓவர்களில் உத்வேகம் இல்லாத ஆட்டத்தையே சென்னை அணி மேற்கொண்டது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னதாக தோனி குழுவினர் மீண்டும் எழுச்சி கண்டால் அணியின் ஸ்திரத்தன்மை மேலும் வலுப்பெறும்.

மும்பை - டெல்லி

முன்னதாக பிற்பகல் 4 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லாவில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியான மும்பை இந்தியன்ஸ் அணி, ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றை இழந்துள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதுகிறது. 13 ஆட்டத்தில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை அணி +0.384 ரன் ரேட்டை கொண்டிருப்பது சாகதமான விஷயமாக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றை பிரகாசமாக்கிக் கொள்ளும். பஞ்சாப் அணிக்கு எதிராக பொலார்டு, பும்ரா ஆகியோர் பார்முக்கு திரும்பியிருப்பது அணியை வலுவடையச் செய்துள்ளது. டெல்லி அணியை பொறுத்தவரையில் இழப்பதற்கு ஒன்றும் இல்லாததால் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x