Published : 19 May 2018 05:53 PM
Last Updated : 19 May 2018 05:53 PM

பார்சிலோனாவுக்கு சூப்பர் ஸ்டார் கேப்டன் இனியெஸ்டா கண்ணீர் பிரியாவிடை

பார்சிலோனா அணியின் இத்தனையாண்டு கால வெற்றியில் பெரும் பங்களிப்பு செய்த ஸ்பெயின் நட்சத்திரம், கேப்டன் இனியெஸ்டாவுக்கு அந்த கிளப் விமரிசையான பிரியாவிடை அளித்தது.

34 வயதான இனியெஸ்டா பார்சிலோனாவுடன் தன் 12வது வயதில் இணைந்தார். சேர்ந்த புத்தில் இளையோர் லீகுகளிலும், பி டீமிலும் ஆடினார், பிறகு 2002-ல் பெருமைக்குரிய பிரதான அணியில் இணைந்தார்.

வெள்ளியன்று கேம்ப் நூவில் நடந்த மிகப்பெரிய பிரியாவிடை நிகழ்வில் பார்சிலோனா அணியின் அனைத்து வீரர்கள், இனியெஸ்டாவின் குடும்பம், முன்னாள் சக வீரர்கள் சாமுவேல் ஈட்டோ, சாவி ஹெர்னாண்டஸ், உலகத்தரம் வாய்ந்த பிற விளையாட்டு வீரர்கள், அமெரிக்க கூடைப்பந்து என்பிஏ நட்சத்திரங்கள் பாவ் மற்றும் மார்க் கேசோல் ஆகியோர் 300 பேர் கொண்ட உயர்மட்ட வருகையாளர்கள் பட்டியலில் உள்ளவர்களாவர்.

பார்சிலோனா அணி இனியெஸ்டாவுடன் வென்ற 32 கோப்பைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. 2017-18 லா லீகா மற்றும் கோபா டெல் ரே கோப்பைகளையும் இனியெஸ்டா தலைமையில் பார்சிலோனா வென்றுள்ளது,

“இந்த இறுதி மணி நேரங்கள் எளிதில் கடக்க முடியாத ஒன்றாக உள்ளது, இதனை ஏற்க முடியவில்லை. பார்சிலோனாவை விட்டுச் செல்லும் நாள் வரும் என்பதை நினைத்துப் பார்க்கமலேயே வாழ்ந்துள்ளதால் இந்தத் தருணம் எனக்கு மிகவும் கடினமாக உள்ளது” என்றார் இனியெஸ்டா

இனியெஸ்டாவுக்கு அர்ப்பணிக்கும் விதமாக பார்சிலோனாவில் இனியெஸ்டாவின் கால்பந்து வாழ்க்கையை விவரிக்கும் காணொளிப்படமும் காட்டப்பட்டது.

“நான் கர்வத்துடன் விடைபெறுகிறேன், இந்த கிளப்புடன் தான் நான் ஒரு மனிதனாகவும் வீரராகவும் உருவெடுத்தேன், என்னைப் பொறுத்தவரையில் இது உலகில் சிறந்த கிளப்.

ஞாயிறன்று கேம்ப் நூவில் நடைபெறும் ரியல் சொசைடட்டுக்கு எதிரான போட்டியில் கடைசியாக பார்சிலோனாவுக்காக ஆடுகிறார் இனியெஸ்டா, அப்போது மைதானம் திருவிழாக்கோலம் பூணும் என்கின்றனர் இனியெஸ்டாவின் தீவிர ரசிகர்கள்.

நானா ஹீரோவா? இல்லை: இனியெஸ்டா

பார்சிலோனா வெற்றியிலும் ஸ்பெயின் அணியிலும் பல்வேறு பங்களிப்புகளை வெற்றியில் செலுத்தியுள்ள இனியெஸ்டாவிடம் நீங்கள் ஹீரோவா என்று கேட்ட போது அவர் கூறியதாவது:

“நானா ஹீரோவா? இல்லை, என்னை இவ்வாறு நேசிப்பவர்களுக்கு நன்றி. ரசிகர்கள் எப்போதும் ஆதரவளிக்கின்றனர். ஆனால் ஹீரோ என்பவர் நோயை எதிர்த்துப் போராடுபவர் அல்லது தம் குழந்தைகளின் உணவுக்காக வெளிநாட்டுக்குப் புலம்பெயர்பவர் ஆகியோர்தான் ஹீரோக்கள் நான் அல்ல. கால்பந்து ஆடுவதில் எனக்கு அளித்த பெருமை, சில வேளைகளில் மக்களை மகிழ்வித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சியளிக்கிறது அவ்வளவே.

ஏதாவது ஒரு கணத்தை நான் தேர்வு செய்வது கடினம், நிறைய மகா கணங்கள் உண்டு. கோப்பைகள்,வெற்றித்தருணங்கள் இருந்தாலும் பார்க்காவுக்காக அறிமுகமான அந்தத் தருணம் மிக முக்கியமான தருணம் என்று நினைக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x