Last Updated : 18 May, 2018 07:56 PM

 

Published : 18 May 2018 07:56 PM
Last Updated : 18 May 2018 07:56 PM

வாழ்வா-சாவா : கோலி அணியை வீழ்த்துமா பட்லர், ஸ்டோக்ஸ் இல்லாத ராஜஸ்தான் அணி

ஜெய்ப்பூரில் நாளை நடக்கும் ஐபிஎல் போட்டியின் முக்கியமான லீக் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து களமிறங்குகிறது ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இரு அணிகளும் 12 புள்ளிகளுடன் சமநிலை வகித்த போதிலும், ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு அணிதான் முன்னணியில் இருக்கிறது.

பெங்களூரில் நடந்த சன்ரைசர்ஸ்க்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி பரபரப்பான வெற்றியைப் பெற்று உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தை எதிர்கொள்கிறது. நிகர ரன்ரேட்டில் முன்னணியில் இருப்பது கோலி தலைமையிலான அணிக்கு மேலும் ஒரு வலுசேர்க்கும் அம்சமாக இருக்கிறது.

அதேசமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த போட்டியில் பெங்களூரு அணியை சாதாரணமாக வெற்றி கொண்டால் அதனால் ப்ளே ஆப் சுற்றை தக்கவைப்பது கடினமே. அந்த அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 403 என்ற கணக்கில் இருப்பதால் பெங்களூரு அணியை அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெல்லவேண்டும், அல்லது குறைவான ரன்களில் சுருட்டி, குறைவான ஓவர்களில் இலக்கை அடைய வேண்டும்.

ஆதலால், ஐபிஎல் போட்டியில் அடுத்த கட்டநகர்வுக்கு இரு அணிகளுக்கும் இந்த போட்டி மிக, மிக முக்கியமானதாகும். ராஜஸ்தாஸ் ராயல்ஸ் அணி வெற்றிக்கு காரணங்களில் முக்கியமாகத் திகழும் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லரின் இந்த போட்டியில் விளையாடமாட்டார்.

இந்தியாவுக்கு எதிராக அடுத்து நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், ஜோஸ்பட்லரும், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸும் இங்கிலாந்து புறப்பட்டுள்ளது ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

இதற்கு முன் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் சேர்த்தது. அந்த போட்டியில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து தோல்விஅடைந்தது. கடந்த போட்டியின் வரலாறு ராஜஸ்தானுக்கு சாதகமாக இருந்தாலும், யானை பலம் கொண் பட்லர் இல்லாதது ராஜஸ்தானுக்கு பீதியை கிளப்பியே தீரும்.

அதேசமயம், பெங்களூரு அணியில் கடந்த சில போட்டிகளாக கேப்டன் கோலி, அதிரடி வீரர் டிவில்லியர்ஸ், பர்தீவ் படேல், மன்தீப் சிங், மொயின் அலி ஆகியோர் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்கள். இவர்களை ராஜஸ்தான் அணிக்கு நிச்சயம் பெரும் சவாலாக உருவெடுப்பார்கள். அதிலும் இதுவரை 427 ரன்கள் சேர்த்துள்ள டிவில்லியர்ஸ் , 526 ரன்கள் சேர்த்துள்ள கோலி ஆகியோரை சமாளிப்பது கடினம்.

பந்துவீச்சில் பெங்களூரு அணி வலுவிழந்தே காணப்படுகிறது. கடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வில்லியம்ஸன், மணீஷ் பாண்டேவை ஆட்டமிழக்கச் செய்ய பல வந்துவீச்சாளர்கள் முயன்றும் கடைசியில்தான் கைகொடுத்தது.

சிராஜ், உமேஷ் யாதவ், சவூதி ஆகியோர் இருந்தாலும், ரன்களை கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசாதது பலவீனமாகும். கடந்த போட்டியில் கடைசி 10 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணியை 135 ரன்கள் வாரி வழங்கினர் பெங்களூரு பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாஹல் மட்டும் நம்பிக்கை ஊட்டும் வகையில் பந்துவீசுகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ், பட்லர் இல்லாத நிலையில், ரஹானே, சஞ்சு சாம்ஸன், திரிபாதி, பின்னி, கவுதம் ஆகியோர் நிலைத்து பேட் செய்ய வேண்டியது அவசியமாகும்.

இதில் பின்னி, ஷார்ட், ஆர்ச்சர், திரிபாதி ஆகியோர் கடந்த சில போட்டிகளாக ஈர்க்கும் அளவுக்கு பேட்டிங் அமையவி்ல்லை. முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் சிறப்பாகச் செயல்படுவது அணியின் வெற்றிக்கு துணை செய்யும்.

பந்துவீச்சில் ஈஷ் சோதி, கவுதம் ஆகியோரின் சுழற்பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. ஜோப்ரா ஆர்சர், கிளாசன், உனத்கட், தவான் குல்கர்னி, பின்னி ஆகியோரும் பந்துவீச்சில் கட்டுக்கோப்பாக இருப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

எப்படியாகினும், இரு அணிக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டி என்பதால், இறுதிக்கட்டம் வரை போட்டி விறுவிறுப்புடம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த போட்டி நாளை மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் அரங்கில் நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x