Published : 18 May 2018 07:01 PM
Last Updated : 18 May 2018 07:01 PM

நேரத்தை விரயம் செய்து தவறான தீர்ப்பு: ஐபிஎல்-ல் நடுவர்கள் மீது தொடரும் சர்ச்சை

ஐபிஎல் கிரிக்கெட்டில் நடுவர்களின் பிழைகள், மோசடித் தீர்ப்புகள், தவறான நோ-பால்கள், வைடுகள், சில வேளைகளில் நோ-பால்களைக் கொடுக்காமல் இருப்பது என்று பலவிதமான தவறுகளை இழைத்து வருவது சர்ச்சைக்குள்ளானது நாம் அறிந்ததே.

ஆனால், தேவையற்று, சாதாரணமாக வெளிப்படையாகத் தெரியும் தீர்ப்புகளுக்கும் 3வது நடுவரை அழைத்து, அவரும் தப்பும் தவறுமாக தீர்ப்பளிக்க நேரத்தை விரயமாக்குவது தற்போது இன்னொரு சர்ச்சையாகியுள்ளது.

நேற்று ஆர்சிபி அணிக்கும் சன் ரைசர்ஸ் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் சன் ரைசர்ஸின் களவியூகத்துடன் தன்பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஒரு கணத்தில் ஒரு பந்தை லாங் ஆனில் தூக்கி அடிக்க பந்து எல்லைக்கோட்டு கயிற்றில் பட்டுத் திரும்பியது, அது சிக்ஸ் அவ்வளவுதான்.

ஆனால் கள நடுவருக்கு ஐயம் எழுந்தது, பந்து ஒரு பவுன்ஸ் ஆகிச் சென்றதா? நேரடியாக கயிற்றில் பட்டு வந்ததா? என்று. 3-வது நடுவரை அழைத்தார் கள நடுவர். 3வது நடுவர் சி.ஷம்சுதீன். இவர் ரீப்ளேயைப் போட்டுப் போட்டு பார்க்கிறார், கிட்டத்தட்ட 3 ரீப்ளேக்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து 3 நிமிடங்கள் காலவிரயம் செய்தார்.

ரசிகர்களே பொறுமை இழந்து கேலிக்கூக்குரல் எழுப்பினர். திரும்பத் திரும்பப் பார்த்தால் ஏதாவது புதிதாகத் தெரியுமா? பிறகு பெரிதாக்கப்பட்ட இமேஜ் காண்பிக்கப்பட்டது, அது சிக்ஸ் என்று நன்றாகத் தெரிந்தது. ஆனால் பவுண்டரிதான் வழங்கப்பட்டது. திரும்பத் திரும்பப் பார்த்து கடைசியில் தவறான தீர்ப்புதான் சாத்தியமானதா என்று தற்போது பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. கவுல் பந்தில் இன்னிங்சின் 6வது ஓவரில் இது நடந்தது.

இதே 3வது நடுவர் ஷம்சுதின் மீண்டும் டிம் சவுதி பிடித்த அபாரமான கேட்சை, கேட்ச் இல்லை என்று ரீப்ளே பார்த்து தீர்பளித்தார். களநடுவர் லேசாக அவுட் என்று சந்தேகத்துடன் கொடுத்து ரெஃபர் செய்ததை இதே போல் ரீப்ளேக்களாகப் பார்த்துப் பார்த்து கடைசியில் தவறான தீர்ப்பு வழங்கினார். இது விராட் கோலி, சவுதி, வர்ணனையாளர் கிளார்க் ஆகியோருக்கும் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x