Last Updated : 18 May, 2018 07:10 AM

 

Published : 18 May 2018 07:10 AM
Last Updated : 18 May 2018 07:10 AM

பயத்தில் இருக்கிறேன்

ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்க இன்னும் 26 நாட்களே உள்ள நிலையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மரின் உடல் தகுதியை பெறுவதில் கடும் போராட்டங்களை சந்தித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் பிரெஞ்சு லீக் தொடரில் பங்கேற்ற போது காலில் முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள அவர், தற்போது குணமடைந்து உடல் தகுதியை பெறுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் கவனம் செலுத்தி வருகிறார். அவர் விரைவில் முழு உடல் தகுதியை பெற்று அணியை வழிநடத்த வேண்டும் என பிரேசில் நாட்டு ரசிகர்களும் வேண்டியபடி உள்ளனர்.

இந்நிலையில் நெய்மர் கூறும்போது, “உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நான் களமிறங்க வேண்டும் என்பதில் என்னை விட மக்கள் அதிக ஆர்வமாக உள்ளனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதை விட நான் ஆர்வமாக இருக்கிறேன். காயத்திலிருந்து மீண்டு திரும்ப வந்ததில் அனைவரையும்விட நான் பதற்றமாக இருக்கிறேன். அதைப் போலவே மற்ற அனைவரையும்விட நான் பயத்தில் இருக்கிறேன்.

இது எனக்கு மிகவும் கடினமான நேரம். ஏனெனில் உலகக் கோப்பை எனும் கனவை நெருங்கும் வேளையில் கடினமான தருணங்களை கடக்க வேண்டிய நிலையில் உள்ளேன். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ள கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது நாட்டுக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுக்க மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது என குழந்தைப் பருவம் முதல் நான் பெற்றிருக்கும் கனவு. இதுதான் எனது குறிக்கோள். இது எனது கோப்பை என்று நம்புகிறேன்” என்றார்.

26 வயதான நெய்மர் கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் கழுத்து பகுதியில் காயம் அடைந்தார். இதனால் ஜெர்மனிக்கு எதிரான அரை இறுதியில் அவரால் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. நெய்மர் களமிறங்காத அந்த ஆட்டத்தில் ஜெர்மனி 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை பந்தாடியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகக் கோப்பை தொடருக்கான அணியை பிரேசில் அறிவித்தது. 23 பேர் கொண்ட இந்த அணியில் நெய்மர் பிரதான வீரராக இடம் பெற்றிருந்தார். 6-வது முறையாக மகுடம் சூட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டும் பிரேசில் நெய்மரின் முழு உடல் தகுதிக்காக இன்னும் காத்திருக்கிறது. இதற்கிடையே பிஎஸ்ஜி கிளப் அணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நெய்மர் பயிற்சியை தொடங்கி உள்ளார். போட்டியில் விளையாடும் அளவுக்கான உடற் தகுதியை அவர் பெறும் பட்சத்தில் ஜூன் 3-ம் தேதி குரோஷியாவுக்கு எதிராக லிவர்பூல் நகரில் நடைபெறும் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கக்கூடும்.

உலகக் கோப்பை தொடரில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேசில் தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 17-ல் சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. இதே பிரிவில் கோஸ்டா ரிகா, செர்பியா அணிகளும் உள்ளன. -

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x