Published : 17 May 2018 12:10 PM
Last Updated : 17 May 2018 12:10 PM

டாஸ் போடும் முறையை ஒழித்துக் கட்ட ஐசிசி முடிவு? தீவிர பரிசீலனை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போட்டு யார் முதலில் பேட் செய்வது என்பதை டாஸில் வென்றவர்களின் முடிவுக்கு விடப்படும் ஆண்டாண்டு கால மரபான முறையை முடித்து வைக்க ஐசிசி தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

இது குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது அந்தந்த நாட்டில் நடக்கும் போது அவை பிட்ச் உள்ளிட்ட சாதக சூழ்நிலைகளை தங்கள்பக்கம் அமைத்துக் கொள்வதால் எதிரணியின் கைகள் கட்டப்படுகின்றன, இதனால் ஒருதலைபட்சமான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று ஒருதலைபட்சமான முடிவுகள் ஏற்படுகின்றன என்று ஐசிசி கருதுகிறது.

அதாவது உள்நாட்டு அணி வாரியங்கள் சூழ்நிலைமையை தங்களுக்குச் சாதகமாகத் தார்மீகமற்று உருவாக்கிக் கொள்வதால் பயணம் மேற்கொள்ளும் அணிகள் வேறு வழியின்றி கைகள் கட்டப்பட்ட நிலையில் டாஸ் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியுள்ளது. இதனால் சாதக நிலைமைகள் ஒரு அணியின் பக்கம் செல்கிறது.

ஆகவே டாஸ் முறையை ஒழித்துக் கட்டிவிட்டு உள்நாட்டு அணி அல்லாமல் பயணம் மேற்கொண்ட எதிரணி கேப்டன்களே நேரடியாக பவுலிங்கா பேட்டிங்கா என்பதை முடிவு செய்யுமாறு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதனை முதலில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் வரும்  போட்டிகளுக்கு நடைமறைப்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

2019-ல் இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரில் இதனை பரிசோதனை செய்யப்போவதாக ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது எந்த அணி பயணம் செய்த அணியோ அது முதலில் பீல்டிங்கையோ, பேட்டிங்கையோ தேர்வு செய்யும், இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் என்றால் ஆஸ்திரேலியா கேப்டனே முதலில் பேட்டிங்கா பீல்டிங்கா என்பதை முடிவெடுப்பார்.

ஐசிசி கிரிக்கெட் கமிட்டி இதனை விவாதிக்கத் தொடங்கிவிட்டது. இந்த யோசனையை பரிந்துரை செய்தவர் டேரன் லீ மேன். டாஸ் முறையை ஒழித்து விட்டால் எந்த கிரிக்கெட் வாரியமும் டீசண்ட்டான பிட்ச்களைப் போட்டாக வேண்டும். டாஸின் மூலம் பெறும் அனுகூலம் அநியாயமாக உள்ளதாக டேரன் லீ மேன் ஏற்கெனவே புலம்பியுள்ளார்.

இந்த யோசனைக்கு ரிக்கி பாண்டிங், மைக்கேல் ஹோல்டிங், போத்தம், ஷேன் வார்ன் ஆகியோரும் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x