Published : 16 May 2018 09:28 AM
Last Updated : 16 May 2018 09:28 AM

தினேஷ் கார்த்திக்கின் அபார கேப்டன்சி: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கிய கொல்கத்தா

கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சுமார் 60,000 ரசிகர்கள் முன்னிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கியது.

டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக் முதலில் ராஜஸ்தான் அணியை பேட் செய்ய அழைத்தார். என்றைக்கும் இல்லாத திருநாளாக கடந்த ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் கலக்கிய திரிபாதியை ஒருவழியாக தொடக்கத்தில் இறக்கினார் ரஹானே. அவரும் பட்லரும் சேர்ந்து 5 ஓவர்கள் முடிவதற்குள் 63 ரன்கள் விளாசி அதிரடி எழுச்சித் தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அதன் பிறகு தினேஷ் கார்த்திக்கின் அருமையான கேப்டன்சி, குல்தீப் யாதவ், சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல் ஆகியோரது பந்து வீச்சில் 14 ஓவர்களில் 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு மடிந்தது ராஜஸ்தான்.

143 ரன்கள் இலக்கை தொழில்நேர்த்தியுடன் விரட்டி 18வது ஓவரில் 145/4 என்று வெற்றி பெற்று கொல்கத்தா 14 புள்ளிகள் பெற்றது. தினேஷ் கார்த்திக் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை லாங் ஆன் மேல் தூக்கி சிக்ஸ் அடித்து தோனி பாணியில் வென்றார். அன்று வங்கதேசத்துக்கு எதிராக கவர் பாயிண்டில் சிக்ஸ் அடித்து வெற்றி, நேற்று லாங் ஆனில் சிக்ஸ் அடித்து வெற்றி. குல்தீப் யாதவ் எழுச்சிப் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி திருப்பு முனை ஏற்படுத்தியதற்காக ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

பட்லர், திரிபாதி கொடுத்த அதிர்ச்சித் தொடக்கம்:

ராகுல் திரிபாதியை ஒருவழியாக தொடக்கத்தில் இறக்கினார் ரஹானே, அவரும் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்தார், ஜோஸ் பட்லர் கடந்த 5 போட்டிகளில் அரைசதம் விளாசியவர், கேட்க வேண்டுமா ப்ளே என்று சொன்னவுடன் ஆரம்பித்த ஷாட்கள் நிற்கவேயில்லை.

இன்னும் சொல்லப்போனால் கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் பிரசீத் கிருஷ்ணா 2வது ஓவரை வீச அவரது ஓவ்ர் 3ம் பந்திலிருந்து தொடங்கிய பவுண்டரி மழை ஷிவம் மாவியின் 3வது ஓவர் முடிவு வரை தொடர்ந்தது. ஒரு 10 பந்துகளில் கொல்கத்தாவை மூச்சுத் திணறத் திணற விளாசி 46 ரன்களைக் குவித்தனர். இதில் 7 நான்குகள், 3 ஆறுகள் அடங்கும். 3 ஓவர்களில் கொல்கத்தாவை சிதற அடித்தனர் பட்லர், திரிபாதி ஜோடி. 2வது ஓவரில் திரிபாதி, பிரசித் கிருஷ்ணாவை 1 சிக்ஸ் 3 பவுண்டரிகள் விளாசித்தள்ளினார், ஷிவம் மாவி வீசிய 3வது ஓவரில் பட்லர் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 28 ரன்களை விளாசினார்.

சுனில் நரைனும் தன் முதல் ஓவரில் 10 ரன்கள் கொடுத்தார். 4 ஓவர்கள் முடிவில் 59 ரன்களுக்கு விக்கெட் இல்லை என்று இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

15 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்த ராகுல் திரிபாதி, ரஸல் வீசிய வேக லெக் திசை ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆட முயன்று கிளவ்வில் பட்டு தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார்.

ரஹானே இறங்கி 12 பந்துகளில் 11 ரன்கள் என்று சொதப்பினார், நல்ல உத்வேகம் இருந்த ஆட்டத்தை தன் மந்தமான பேட்டிங்கினால் கெடுத்துக் குட்டிச் சுவராக்கினார் ரஹானே. இவரது இந்த மந்தத்தினால் பட்லரின் உத்வேகம் தடைபட்டிருக்கலாம். ஆனால் முதலில் ரஹானே வெளியேறினார், அதுவும் தனக்கு வராத ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டில் குல்தீப் யாதவ்விடம் பவுல்டு ஆனார். லெக் ஸ்டம்புக்கு வரும் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார் என்றால் அது முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒரு ஷாட், அப்படியென்றால் தான் சொதப்பி வருவது நினைவுக்கு வர ரன் ரேட்டை உயர்த்த முயன்ற ஒரு வியர்த்தமான தவறான ஷாட் தேர்வு என்பதையே காட்டுகிறது.

பட்லரின் ரிதம் ரஹானேவினால் தடைபட அவர் 22 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 39 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். சஞ்சு சாம்சன் (12), கவுதம் (3) ஆகிய பார்மில் உள்ள பேட்ஸ்மென்கள் நல்ல பந்து வீச்சுக்கு வெளியேறினர். சாம்சன் சுனில் நரைன் ஸ்கிட்டருக்கு எல்.பி.யாக கவுதம், ஷிவம் மாவியின் தொண்டைக்கு வீசப்பட்ட வெறியான பவுன்சரில் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். ஷார்ட் பிட்ச் பலவீனம் கவுதமுக்கு உள்ளது 5வது முறையாக நிரூபணமானது. அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸ் திக்கித் திணறி 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தும், ஸ்டூவர்ட் பின்னி 1 ரன்னிலும் குல்தீப்பிடம் அவுட் ஆக, குல்தீப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி திருப்பு முனைப் பந்து வீச்சை நிகழ்த்தினார்.

ஜெயதேவ் உனாட்கட் திடீரென பொங்கி எழுந்து அனாயாச மட்டைச் சுழற்றலில் ஈடுபட்டு 18 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து கடைசியாக அவுட் ஆக 19 ஓவர்களில் 142 ஆல் அவுட்.

குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 8 டாட்பால்களுடன் 20 ரன்கள் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ரஸல் 3 ஓவர்களில் 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நரைன் 29 ரன்களுக்கு 2 விக்கெட். பிரசீத் கிருஷ்ணா தொடக்க சாத்துமுறைக்குப் பிறகு 35 ரன்களுக்கு 2 விக்கெட்.

தொழில்நேர்த்தியான விரட்டல்:

இலக்கை விரட்டும்போது கிறிஸ்லின் தன் பாணியிலிருந்து சற்றே விலகி நிதானம் கடைபிடிக்க வழக்கம் போல் சுனில் நரைன் வெளுத்து வாங்கினார்.

ஆட்டம் தொடங்கி பிளே என்று நடுவர் கூறியவுடன் கவுதம் கையிலிருந்து வெளியேறிய பந்தை மிட்விக்கெட்டிலிருந்து பார்வையாளர் பகுதியிலிருந்து எடுத்து வர நேரிட்டது. சிக்ஸ். அங்கு பந்தை எடுத்துப் போட்டவர் நகர வேண்டாம் அங்கேயே நிற்கவும் என்று கூறுமாறு மீண்டும் அதே பகுதியில் ஒரு விளாசல், இம்முறை நான்கு. மிட்விக்கெட்டில் அடித்து அடித்து அவருக்கே சலித்துப் போக அடுத்த பந்தை மேலேறி வந்து லாங் ஆனில் தூக்கி சிக்சர் அடித்தார். அடித்து விட்டு மட்டையின் கீழ் பகுதியைப் பார்த்தார், காரணம் பந்து அங்குதான் பட்டது, எங்கு பட்டால் என்ன? முடிவு சிக்சர்தானே!! அடுத்த பந்தை ஒரு மாற்றத்துக்காக ஒதுங்கிக் கொண்டு கவர் திசைக்கு மேல் தூக்கி அடித்தார் நான்கு ரன்கள். 5வது பந்தை தரையோடு தரையாக நரைன் அடிக்க என்ன இது விளையாட்டு, நாங்கள் பந்தை மேலே பார்த்துக் கொண்டிருக்கிறோம், கீழே தரையோடு தரையாக ஆடி என்ன விளையாட்டு இது என்பது போல் ரசிகர்கள் ஒரு ஏமாற்ற ஒலியை எழுப்பினர். அவ்வளவுதான் போதும் 4 பந்துகளில் 21 ரன்கள்!

அடுத்த ஓவரை ஸ்டோக்ஸ் வீச அது நல்ல ஒரு ஷார்ட் பிட்ச் பந்து அப்படித்தான் அவருக்கு வீச வேண்டும் டைமிங் கிடைக்காத புல்ஷாட்டில் 21 ரன்களில் வெளியேறினார்.

நரைன் அவுட் ஆனவுடன் கவுதமிடமே 2வது ஓவரை கொடுத்திருக்கலாம், ஆனால் ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் கொடுக்க கிறிஸ் லின் புல் சிக்ஸ் ஒன்றையும், தேர்ட்மேனை முன்னால் கொண்டு வந்துவிட்டு அசட்டுத்தனமாக ஆஃப் சைட் ஷார்ட் பிட்ச் பந்தை வீச அது தேர்ட்மேனில் பவுண்டரியாகவும் மாற ஆர்ச்சர் ஓவரில் 11 ரன்கள். உத்தப்பா இம்முறை சோபிக்கவில்லை 4 ரன்களில் ஸ்டோக்சின் அருமையான இன்னொரு பவுன்சருக்கு திணறி கேட்ச் ஆனார்.

நிதிஷ் ராணா 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து இஷ் சோதியின் அருமையான பந்தில் எல்.பி.ஆனார். சோதி, உனாட்கட், ஸ்டோக்ஸ் மிக அருமையாக வீசினர், போதிய ரன்கள் கைவசம் இல்லை. ஆனால் கிறிஸ் லின் 42 பந்துகளில் 45 ரன்களை நிதானமாக எடுத்தார். தினேஷ் கார்த்திக் 31 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் கேப்டனுக்கான பொறுப்புடன் மீண்டும் ஒரு வெற்றியை உறுதி செய்தார். ரஸல் 11 நாட் அவுட். 18 ஓவர்களில் தினேஷ் கார்த்திக் வெற்றி சிக்சருடன் கொல்கத்தா 145/4 என்று வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x