Published : 16 May 2018 07:33 AM
Last Updated : 16 May 2018 07:33 AM

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்; பிளே ஆஃப் சுற்றை தக்கவைக்குமா மும்பை அணி?- தோல்வியடைந்தால் ரோஹித் சர்மா குழு வெளியேறும்

மும்பை ஐபிஎல் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறும்.

இந்த சீசனில் தொடக்க போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடரின் 2-வது கட்டத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்று பட்டியலில் சீரான முன்னேற்றம் கண்டு அனைவரையும் வியக்கவைத்ததுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்தது. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வியால் மும்பை அணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை அணி 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்திலும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் வெற்றி காண வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது மும்பை அணி. இந்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகளையே பெற முடியும். இந்த நிலை ஏற்பட்டால் மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே மும்பை அணியின் பிளே-ஆப் சுற்று தலைவிதி நிர்ணயிக்கப்படும். ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றிப் பெற தவறினால் தொடரில் இருந்து வெளியேறுவது உறுதி.

அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. நேற்றுமுன்தினம் பெங்களூரு அணிக்கு எதிராக 88 ரன்களில் சுருண்டு 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அணியின் உத்வேகத்தை சீர்குலைத்துள்ளது. இந்த படுதோல்வியால் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பஞ்சாப் அணி இன்னும் இழக்கவில்லை. இன்றைய ஆட்டத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் எந்தவித சிக்கலும் இல்லாமல் அடுத்த சுற்றில் பஞ்சாப் அணி கால்பதிக்கலாம். அதேவேளையில் இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் கடைசி ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்படும். அப்படியே வெற்றி பெற்றாலும் நெட் ரன்ரேட் விகிதமும் பிரச்சினையாக உருவெடுக்கக்கூடும்.

நெட் ரன்ரேட்டை (+0.405) பலமாக வைத்துள்ள முப்பை அணி, தொடரின் இறுதி கட்டத்தில் தடுமாறி வரும் பஞ்சாப் அணியின் பலவீனத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் நடுகள பேட்டிங் வரிசை மீண்டும் ஒரு மோசமான செயல்திறனை வெளிப்படுத்தியது. முக்கியமாக ரோஹித் சர்மாவின் மோசமான பார்ம் பெரிய பலவீனத்தை ஏற்படுத்தி உள்ளது. 12 ஆட்டங்களில் 26.70 சராசரியுடன் 267 ரன்கள் சேர்த்துள்ள அவர், பொறுப்பை உணர்ந்து உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இதேபோல் கிருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா சதோதரர்களும் எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங்கில் சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை. அவர்களும் மட்டையை சுழற்றினால் பேட்டிங் வலுப்பெறும். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 60 ரன்கள் சேர்த்து எவின் லீவிஸ் மீண்டும் பார்முக்கு திரும்பியிருப்பது கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது. அவரிடம் இருந்தும் இந்த சீசனில் 473 ரன்கள் குவித்துள்ள சூர்யகுமார் யாதவிடம் இருந்தும் மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். மும்பை அணியின் பந்து வீச்சும் இந்த சீசனில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

பஞ்சாப் அணியின் அதிரடி வீரர்களான கிறிஸ் கெயில், கே.எல்.ராகுல் ஆகியோரை நேற்றுமுன்தினம் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் ஷார்ட் பால் பந்து வீச்சு யுத்தியை சிறப்பாக கையாண்டு விரைவிலேயே வீழ்த்தினார்.

இதனால் அதேவகையிலான திட்டத்தை ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, மெக்லீனகன் ஆகியோரை உள்ளடக்கிய மும்பை வேகப்பந்து வீச்சு குழுவும் கையாளக்கூடும். இதேபோல் சுழற்பந்து வீச்சாளர்களான மயங்க் மார்க்கண்டே, கிருணல் பாண்டியா ஆகியோரும் பஞ்சாப் அணியை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கக்கூடும்.

கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் அடைந்த தோல்வி அடைந்து துவண்டுள்ள பஞ்சாப் அணி அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டியது உள்ளது. பேட்டிங்கில் கிறிஸ் கெயில், கே.எல்.ராகுல் ஆகியோரை நம்பி மட்டுமே இருப்பது பலவீனமாக உள்ளது. இவர்கள் விரைவிலேயே ஆட்டமிழந்தால் அணியை கரை சேர்ப்பதில் மிடில் ஆர்டர் தேர்ச்சி பெறத்தவறுகிறது. கருண் நாயர், ஆரோன் பின்ச், மயங்க் அகர்வால், அக்சர் படேல் ஆகியோர் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே மிடில் ஆர்டர் பேட்டிங்கில் மீண்டெழ முடியும். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் காயம் அடைந்துள்ளது அணியின் சமநிலையை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோருக்கு கூடுதல் நெருக்கடி உருவாகி உள்ளது.

‘வீட்டுக்கு அனுப்புவோம்’

பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறும்போது, “ பெங்களூரு அணிக்கு எதிரான தோல்வி கடும் ஏமாற்றமளிக்கிறது. கடந்த ஆட்டங்களில் பந்து வீச்சாளர்கள்தான் எங்களுக்குப் புள்ளிகளை பெற்றுத் தந்தனர். இதனால் எங்களை நாங்களே மீட்டெடுத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நெட் ரன் ரேட்டில் எங்களுக்கு கவனம் தேவைப்படுகிறது. ஆனால் மீதமுள்ள போட்டிகளில் வென்று முன்னேறுவதே நேர்மறையான அணுகுமுறை.

வெற்றியை மீண்டும் எங்கள் பக்கம் திருப்ப வேண்டும். மும்பையை வீட்டுக்கு அனுப்ப எங்களால் ஆன முயற்சிகளை மேற்கொள்வோம். புனேவில் நடைபெறும் கடைசி ஆட்டத்தில் என்ன நடைபெறுகிறது என்பதை அதன் பின்னர் பார்ப்போம். அணியின் பந்து வீச்சு ஓரளவுக்கு நன்றாகவே உள்ளது, நிறைய சர்வதேச அனுபவ வீரர்கள் எங்களிடம் உள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x