Published : 15 May 2018 09:00 AM
Last Updated : 15 May 2018 09:00 AM

கிங்ஸ் லெவனின் மோசமான தோல்வி: 10விக். வித்தியாசத்தில் வென்றது கோலி படை

இந்தூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 48வது போட்டியில் கிங்ஸ் லெவன் அணி படுமோசமாக விளையாடி ராயல் சாலஞ்சர்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

முதலில் பேட் செய்து தரமற்ற, அசிங்கமான கிரிக்கெட்டில் 88 ரன்களுக்கு மடிய, பெங்களூரு அணி பார்த்திவ் படேல் 40 நாட் அவுட், விராட் கோலி 48 நாட் அவுட் என்று விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

நிலவரங்கள்:

ஆர்சிபி அணி தன் மீதமுள்ள போட்டிகளையும் வென்று மற்ற போட்டிகளும் சாதகமாக அமைந்தால் நிகர ரன் விகிதம் இல்லாமலேயே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.

சன் ரைசர்ஸ் அணி டாப் 2 இடங்களில் உள்ளதை உறுதி செய்துள்ளது.

கிங்ஸ் லெவன் கதையும் இன்னும் உயிருடன் உள்ளது. கடைசி 2 போட்டிகளில் வென்றால் 16 புள்ளிகள் பெறும் அல்லது ஒரு போட்டியில் வென்றால் கூட 14 புள்ளிகள் பெறும்.

4 மும்பை இந்தியன்ஸ் 12 புள்ளிகள் பெற்றால் வலுவான நிகர ரன் விகிதத்தில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்.

ஒரு கருத்து மையமாக்கம்

இத்தகைய போட்டிகளை என்னவென்று வர்ணிப்பது? தரநிலை என்பது ஐபிஎல் கிரிக்கெட்டில் கீழ்மட்டத்துக்குச் சென்று வருகிறது. ஒன்று முன் கூட்டியே யார் வெல்வது என்பது தீர்மானிக்கப்படுகிறது, அல்லது சிலபல கணக்கீடுகள் தீர்மானிக்கிறது, இதில் உண்மையான கிரிக்கெட் என்பதை லென்ஸ் வைத்துத்தான் தேட வேண்டியுள்ளது. இந்த விதத்தில் இது பின்நவீனத்துவ கிரிக்கெட் சூழல்தான் இது(Postmodern Condition அல்லது postmodernity) அதாவது எதுவுமே ஆழமில்லாது, மேலோட்டமான, பொழுதுபோக்குத் தனமான, சிலபல கணக்கீடுகள் மூலம் ஏற்கெனவே அமைத்துக் கொடுக்கப்பட்டு நமக்கு வழங்கப்படும் என்ற விதத்தில்.

பின்நவீனத்துவ சூழல் வேறு, பின்நவீன இயம் வேறு (postmodernism). பின் நவீன இயம் என்பது பின் நவீனத்துவ சூழல் மீதான விமர்சனம் ஆகும். நுட்பங்கள் மறைந்து கணக்கீடுகளும், பொழுதுபோக்கு அம்சங்களும், ஸ்பான்சர்கள் உள்ளிட்ட வணிகநலன்களும் முன்னுக்கு வருவது பின் நவீனத்துவ சூழல், இத்தகைய போக்கின் மீதான விமர்சனங்கள் பின்நவீன இயங்கள். பின் நவீனத்துவ சூழலைக் கொண்டாடுவது வெகுஜன கலாச்சாரத்தின் இயல்பு (தோனிடா, தலடா, கோலிடா போன்ற கோஷங்கள்). விமர்சன கலாச்சாரம் அதைக் கடந்து செல்வது.

ஆகவே ஐபிஎல் கிரிக்கெட்டை விமர்சிப்பது என்பது ஒரு நுட்பங்களை நோக்கிய ஒரு செயல்பாடாகும்.

உமேஷ் யாதவ் அபாரம்

கே.எல்.ராகுல் 3 அபாரமான சிக்சர்களுடன் 21 ரன்களையும் கிறிஸ் கெய்ல் 14 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 18 ரன்களையும் எடுக்க உமேஷ் யாதவ் இருவரையும் ஷார்ட் பாலில் வீழ்த்தினார். அதன் பிறகு பிஞ்ச் 26 ரன்கள் எடுத்தார். மற்ற படி வீர்ர்கள் ஸ்கோர் விவரம் இதோ: 1,2,2,9,9,0,0,3,1 15.1 ஓவர்களில் 88 ரன்களுக்குச் சுருண்டது.

தொடர்ந்து ஆடிய ராயல் சாலஞ்சர்ஸ் அணி 8.1 ஓவர்களில் 92/0 என்று வென்றது இதன் மூலம் மைனஸ் 0.26 என்று இருந்த ஆர்சிபி நிகர ரன் விகிதம் தற்போது பிளஸ் 0.21 ஆக உயர்ந்துள்ளது.

ஆட்டம் தொடங்கும் முன்பே கிங்ஸ் லெவன் அணிக்கு ஒரு பின்னடைவு அதன் சிறந்த பவுலர் முஜீப் உர் ரஹ்மான் கடந்த போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக கையில் அடிபட்டதால் இந்தப் போட்டியில் ஆட முடியவில்லை. மார்கஸ் ஸ்டாய்னிஸ் அவருக்குப் பதிலாக விளையாடினார். ஆனால் சாஹல் பந்தில் பவுல்டு ஆனார்.

கடைசியில் அஸ்வின், மோஹித் சர்மா, ராஜ்புத் ஆகியோர் ரன் அவுட் ஆன விதம் தரமற்ற கிரிக்கெட்டை உறுதி செய்வதாக அமைந்தது. அன்று இதே பிட்சில்தானப்பா கொல்கத்தா 245 ரன்களை வெளுக்க தொடர்ந்து கிங்ஸ் லெவன் 214 அடித்தது, 459 பிட்ச் திடீரென 88 பிட்ச் ஆனது எப்படி? பிட்செல்லாம் காரணமில்லை.

ஆனால் உமேஷ் யாதவ் மிக அருமையாக வீசியதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும், கெய்லை தன் வேக அவுட் ஸ்விங்கர்களினால் படுத்தி எடுத்தார், ஒரு பந்து எட்ஜ் ஆகி படேல் கேட்சை விட்டார். கெய்ல் அப்போது 0. பிறகு கெயிலின் உடலை நோக்கி பந்துகளை வீசி அவரை எழும்பவிடாமல் செய்தார் உமேஷ். இதே ஷார்ட் பிட்ச் உத்தியில் அவர் ராகுல், கெய்ல் ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்தார். கருண் நாயரை எட்ஜ் செய்ய வைத்தார் சிராஜ். 41/3. அடுத்த ஓவரில் சாஹலின் கூக்ளியில் பவுல்டு ஆனார் ஸ்டாய்னிஸ். அதன் பிறகு அசிங்கமான ரன் அவுட்கள் கிங்ஸ் லெவன் 88 ரன்களுக்குச் சுருண்டது.

கோலி, பார்த்திவ் பவுண்டரி மழை

பிட்சில் ஒன்றுமில்லை, பந்து வீச்சிலும் ஒன்றுமில்லை, முஜீப் உர் ரஹ்மானும் இல்லை, பிறகென்ன பார்த்திவ், கோலிக்கு அருமையான சூழல். பவர் பிளேயிலேயே 66/0.

பிறகு 8.1 ஓவர்களில் 92/0 என்று ஊதியது. கோலி 28 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள், இந்த சிக்சர்களை அவர் தலா டை, ராஜ்புத் பந்துகளில் அடித்தார்.

பார்த்திவ் படேல் 22 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள். மொத்தம் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்கள். 64 ரன்கள் இதிலேயே வந்து விட்டது.

ஒரு சுவாரசியம் என்னவெனில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி பவுலிங் போடும் போது 49 டாட்பால்கள், அதாவது ரன் இல்லாத பந்துகளை வீசியது, பேட்டிங்கில் 89 ரன்கள் வெற்றி இலக்கை 49 பந்துகளில் எட்டியது. ஆட்ட நாயகன் உமேஷ் யாதவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x