Published : 15 May 2018 07:34 AM
Last Updated : 15 May 2018 07:34 AM

பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைப்பது யார்?; ராஜஸ்தானுடன் கொல்கத்தா இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இரு அணிகளுக்கும் சமநிலையில் உள்ளது. ஏனெனில் இரு அணிகளும் தலா 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்விகளை பதிவு செய்து 12 புள்ளிகளை பெற்றுள்ளன. நெட் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி (-0.189) பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது. ராஜஸ்தான் அணி (-0.347) 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா, சாவா போராட்ட கதிதான்.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி அடுத்தடுத்த இரு தோல்விகளுக்கு பின்னர் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக வெகுண்டெழுந்தது. ஐபிஎல் வரலாற்றில் 4-வது அதிகபட்ச ரன் குவிப்பாக 245 ரன்கள் விளாசி மிரட்டியதுடன் அந்த ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேவேளையில் தொடரில் இருந்து வெளியேறக்கூடும் என கருதப்பட்ட அஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி ஹாட்ரிக் வெற்றியின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த அணியின் தொடர்ச்சியான வெற்றிகளில் ஜாஸ் பட்லரின் அதிரடி ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது. மூன்று ஆட்டங்களிலும் ஆட்ட நாயகன் விருது வென்ற அவர், எதிரணியின் பந்து வீச்சாளர்களை மிரளச் செய்திருந்தார். கடைசியாக நேற்றுமுன்தினம் மும்பை அணிக்கு எதிராக ஜாஸ் பட்லர் 94 ரன்கள் விளாசி கடைசி வரை வீழ்த்த முடியாத வீரராக களத்தில் இருந்தார். அவரது ஆக்ரோஷ ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த சீசனில் ஜாஸ் பட்லர் தொடர்ச்சியாக 5 அரை சதங்கள் விளாசி அசத்தி உள்ளார். இந்த வகையில் ஏற்கெனவே தொடர்ச்சியாக 5 அரை சதங்கள் விளாசியிருந்த சேவக்கின் சாதனையை ஜாஸ் பட்லர் சமன் செய்துள்ளார். கடைசியாக நடைபெற்ற 5 ஆட்டங்களில் அவர் முறையே 67, 51, 82, 95*, 94* ரன்கள் விளாசியுள்ளார். இன்றைய ஆட்டத்திலும் கொல்கத்தா பந்து வீச்சாளர்களுக்கு ஜாஸ் பட்லர் நெருக்கடி கொடுக்கக்கூடும். தொடக்க பேட்டிங் வலுவடைந்துள்ளதால் ரஹானே மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கக்கூடும்.

12 ஆட்டங்களில் 28 சராசரியுடன் 280 ரன்கள் சேர்த்துள்ள அவர், சீரான ரன் குவிப்பு மூலம் அணிக்கு பலம் சேர்க்க வேண்டிய கட்டத்தில் உள்ளார். சஞ்சு சாம்சன், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரும் மட்டையை சுழற்ற தயாராக உள்ளனர். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் பலம் சேர்ப்பவராக உள்ளார். மும்பை அணிக்கு எதிராக முக்கியமான கட்டத்தில் அடுத்தடுத்த பந்துகளில் சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்கக் செய்து பெரிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா பேட்ஸ்மேன்களுக்கும் ஜோப்ரா ஆர்ச்சர் தொல்லை தரக்கூடும்.

கொல்கத்தா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் கடைசி லீக் ஆட்டம் இதுகுவாகும். இதனால் அந்த அணி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த முயற்சிக்கும். பஞ்சாப் அணிக்கு எதிராக 36 பந்துகளில் 75 ரன்கள் விளாசிய சுனில் நரேன், 23 பந்துகளில் 50 ரன்கள் விளாசிய தினேஷ் கார்த்திக் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, சுப்மான் கில், நித்திஷ் ராணா ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர்.

சுழற்பந்து வீச்சில் சுனில் நரேன், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் நித்திஷ் ராணாவும் ராஜஸ்தான் டாப் ஆர்டர் பேட்டிங்க்கு சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளார். இந்த சீசனில் இரு அணிகளும் 2-வது முறையாக மோதுகின்றன. கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தோல்விக்கு ராஜஸ்தான் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

பிளே ஆஃப் சுற்றில் சென்னை

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தானிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தவித சிக்கலும் இன்றி முன்னேறியது.

ஏற்கெனவே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்த நிலையில் 2-வது அணியாக சென்னையும் நுழைந்துள்ளது. இதன் மூலம் பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்த ஒரே அணி என்ற பெருமையை சென்னை அணி பெற்றது. மீதமுள்ள இரு இடங்களுக்கு பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு அணி ஆகிய 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x