Last Updated : 14 May, 2018 09:14 AM

 

Published : 14 May 2018 09:14 AM
Last Updated : 14 May 2018 09:14 AM

சேவாகை சமன் செய்த ஜோஸ் பட்லர் பவர் ஹிட்டிங்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 47வது போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் ஜோஸ் பட்லரின் 53 பந்து 94 ரன்களில் 171/3 என்று 12 பந்துகள் மீதம் வைத்து அபார வெற்றி பெற்றது. சேவாக் சாதனையை ஜோஸ் பட்லர் சமன் செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறுவதற்காக மற்ற அணிகள் பாடுபடும் அளவுக்குக் கூட மும்பை இந்தியன்ஸ் பாடுபடுவதில்லை என்பது நேற்றும் தெரியவந்தது, ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் பேட் செய்யும் போது ராஜஸ்தான் ராயல்ஸ் முக்கியமான தருணங்களில் கேட்ச்களை விட்டு மும்பைக்குச் சாதக சூழ்நிலைகளை ஏற்படுத்தியது, ஆனாலும் மும்பை நாங்கள் தோற்கத்தான் செய்வோம் என்று அடம்பிடித்தனர்.

ஜோஸ் பட்லர் மும்பை இந்தியன்ஸ் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார். தொடர்ச்சியாக 5 அரைசதங்களை எடுத்துள்ளார் பட்லர், இதற்கு முன்னால் சரவெடி சேவாக்தான் 5 அரைசதங்களை தொடர்ச்சியாக எடுத்துள்ளார். அவர் சாதனையை ஜோஸ் பட்லர் சமன் செய்தார். பட்லர் தன் 53 பந்து 94 ரன்களில் 9 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் அடங்கும்.

எவின் லூயிஸ், சூரிய குமார் யாதவ், ராஜஸ்தான் ராயல்ஸின் தவற விடப்பட்ட கேட்ச்களினால் 64 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தனர், ஆனால் இந்த அடித்தளத்தை மும்பை நன்றாகப் பயன்படுத்தவில்லை. சூரிய குமாரும், ரோஹித் சர்மாவும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் அடுத்தடுத்த பந்துகளில் உனாட்கட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேற மும்பை ஸ்கோர் விகிதம் குறைந்தது. இதில் மும்பை வென்றிருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது மற்ற போட்டிகளின் கணக்கீட்டுகளுக்குச் சென்றிருக்கும். எனவே அதனை முதலில் நேற்று சன் ரைசர்ஸ் தோல்வி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னை வலுப்படுத்திக் கொண்டது, மும்பை தோல்வி மூலம் சிஎஸ்கேவின் பிளே ஆப் தகுதி உறுதியானது.

ஆனாலும் இன்னும் கூட சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் அணிகள் தவிர மற்ற அணிகளுக்கும் இடையே பிளே ஆஃப் சுற்றுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

சூரியகுமார், எவின் லூயிஸ் நல்ல தொடக்கம்:

பவர் பிளேயில் நன்றாக வீசி விக்கெட்டுகளையும் எடுத்து வந்த கவுதம் நேற்று முதல் ஓவரிலேயே 14 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதன் பிறகு 12வது ஓவர்தான் வந்தார் கவுதம், அப்போது எவின் லூயிஸ் இவரை சிக்ஸ் அடிக்க 3வது ஓவரும் கவுதமுக்கு வழங்கப்படவில்லை (ஸ்ட்ராடஜியாமாம்!). ராயல்ஸின் சமீபத்திய வெற்றியில் பங்களிப்பு செய்த இஷ் சோதி உடல் நலமின்மை காரணமாக நேற்று ஆடவில்லை(?!) இந்த சாதக நிலையையும் மும்பை பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஷ்ரேயஸ் கோபாலும் 17 ரன்களை ஒரு ஓவரில் விட்டுக் கொடுக்க மொத்தமே ஸ்பின்னர்கள் 4 ஓவர்கள்தான் வீசினர் இதில் 44 ரன்கள் வந்தது. சூரியகுமார் யாதவ் 31 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்தை புல்ஷாட் ஆடி உனாட்கட்டின் நல்ல கேட்சுக்கு வெளியேறினார், அடுத்த பந்தே ஆர்ச்சர், ரோஹித் சர்மாவுக்கு ஷார்ட் பிட்ச் சோதனை கொடுக்க அதே இடத்தில் உனாட்கட் இன்னொரு நல்ல கேட்சை எடுத்தார்.

எவின் லூயிஸ் 5 ரன்களில் இருந்த போது ஸ்டூவர்ட் பின்னி நீண்ட நேரம் வானில் இருந்து இறங்கிய பந்தை கேட்ச் ஆக்காமல் விட்டார். இதுவும் ஆர்ச்சர் பந்தில்தான். இதே ஆர்ச்சர் கடைசியில் பென் கட்டிங்குக்கு கையில் விழுந்த கேட்சை விட்டார். இதனால் கட்டிங் 2 ரன்களில் ஆட்டமிழக்க வேண்டியவர் 10 ரன்கள் எடுத்தார்.

எவின் லூயிஸ் 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து தவல் குல்கர்னி பந்தில் சாம்சனிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இஷான் கிஷன் 12 ரன்களில் பென் ஸ்டோக்ஸின் ஷார்ட் ஆஃப் லெந்த் ஸ்லோ பந்தில் சாம்சனின் டைவிங் கேட்சுக்கு வெளியேறினார்.

குருணால் பாண்டியா 3 ரன்களில் உனாட்கட்டிடம் வெளியேற மும்பை இந்தியன்ஸ் அணி 17வது ஓவரி முடிவில் 132/5.

ஹர்திக் பாண்டியா 21 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுக்க மும்பை இந்தியன்ஸ் 10 ஓவர்களில் 87/0 என்ற நிலையிலிருந்து 168/6 என்று முடிந்தது, ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ஸ்டோக்ஸ் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். குல்கர்னி, உனாட் கட் அதிக ரன்களைக் கொடுத்து தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

பட்லர் அதிரடி:

ராஜஸ்தான் ராயல்ஸ் இலக்கு விரட்டல் டியார்க்கி ஷார்ட்டின் மோசமான பார்மினால் கொஞ்சம் தடுமாறியது, இந்த ஐபிஎல்-ல் இவர் 7 இன்னிங்ஸ்களில் 116 ரன்களை 16 ரன்கள் சராசரியில் எடுத்துள்ளார். 5 பந்தை நேற்று ஆடினாலும் திருப்திகரமாக ஆடவில்லை. தடவல்தான். 4 ரன்களில் பும்ராவின் பந்தில் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்தார். முதல் ஓவரில் 9/1 பிறகு 13/1, ஆனால் அதன் பிறகு விக்கெட்டுகளை வீழ்த்த மும்பை திணறியது, என்னென்னவோ செய்தும் பட்லரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

பவர் பிளேயில் பட்லர் அவர் விரும்பியபடி அடிக்க முடியாவிட்டாலும் க்ருணால் பாண்டியா வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்சும் பவுண்டரியும் அடித்தார். ரஹானே ஒரு முனையில் இறுக்கிப் பிடிக்க இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்காக 95 ரன்களைச் சேர்த்தனர். ரஹானே 36 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போது ராயல்ஸுக்கு வெற்றிக்கான தேவை ஓவருக்கு 9 ரன்களுக்கும் சற்று கூடுதலாக தேவைப்பட்டது.

ஆனால் பட்லரும், சாம்சனும் இணைந்து அடித்து ஆடத் தொடங்கினர், 4.4 ஓவர்களில் ஸ்கோர் 165 ரன்களை எட்டியது. சாம்சன் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போது வெற்றிக்கு அருகில் வந்தது ராஜஸ்தான். ஹர்திக் பாண்டியாவை சாம்சன் 2 சிக்சர்களை விளாசினார். அதுவும் முதல் சிக்ஸ் உண்மையில் பாண்டியாவை டோன்ட் பவுல் என்பது போல்தான் இருந்தது காலரியில் சுமார் 15-20 வரிசை தாண்டி போய் விழுந்தது பந்து. அடுத்த பாண்டியா பந்தும் டோன்ட் பவுல் ரக சிக்ஸ்தான். அதே ஒவரில் பாண்டியாவிடம் சாம்சன் ஆட்டமிழக்க கிராஸ் செய்த பட்லர் பாண்டியாவின் பந்தை ‘நான் தான் போடாதே என்றேனே’ என்று கூறுவது போல் மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்தார், இதுவே வெற்றி ரன்களாக அமைந்த்து. ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களில் 52 ரன்கள் விளாசப்பட்டார். மும்பையின் சிறந்த ஸ்பின்னர் மயங் மார்க்கண்டேவும் நேற்று சோபிக்கவில்லை. அவர் 3 ஓவர்களில் 2 டாட்பால்களையே வீச முடிந்து 32 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

2 ஒவர்கள் மீதம் வைத்து ராயல்ஸ் வெற்றி பெற்றது, ஆட்ட நாயகன் ஜோஸ் பட்லர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x